KathaiKathaiyaam

Wednesday, December 13, 2006

<<>>உணவு மழைத் தீவு! -1.<<>>(சிறுவர் தொடர் கதை )




கோடை விடுமுறை. விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க அகிலா, நிகிலா இவர்கள் தம்பி ரவி மூவரும் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர். தோட்டத்தில் புங்க மரத்தில் ஊஞ்சல் கட்டிக் கொடுத்திருந்தார், தாத்தா. மூவருக்கும் அதில் போட்டி போட்டுக் கொண்டு ஆடுவதில் சந்தோஷம்.
தோட்டத்தின் வடக்குப் பகுதியில் கோழிப் பண்ணை; அதற்கு
கொஞ்சம் தள்ளி சிறு மரவீடு. அது புறாக்களுக்குரிய வசிப்பிடம்.


அகிலா பாட்டிக்கு ஒத்தாசையாக இருப்பாள். தாத்தாவோடு கோழிப்பண்ணையில் முட்டைகளைச் சேகரிக்க நிகிலாவுக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். ரவிக்கு புறாக்களை வேடிக்கை பார்ப்பது, எந்தப்புறா முட்டையிட்டிருக்கிறது? எந்தப் புறாக் குஞ்சு கண் விழித்துப் பார்க்கிறது? என்பதை ஒலி எழுப்பாமல் கவனிப்பான்.


எப்படியோ மூவருக்கும் நகரத்தின் இரைச்சல்கள் இல்லாமல் விடுமுறை அமைதியாகவும் இனிமையாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பாட்டி கோழிக் குருமா வைத்துக் கொண்டிருந்தார். தாத்தா தோசைக்கல்லில் தோசை வார்த்துக் கொண்டிருந்தார். நிகிலாவும் ரவியும் உணவு மேஜை முன்பாக

பசியோடு உட்கார்ந்திருந்தனர்.
கோழிக்குருமா வாசம் வேறு பசியை அவர்களுக்கு அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. " தாத்தா, சீக்கிரம் தாத்தா. வயித்தைப் பசிக்குது, சீக்கிரம் தோசையைக் கொண்டாங்க " என்று ரவி நிமிடத்துக்கு ஒரு குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். " இதோ ஆச்சு...ஆச்சு " என்று தாத்தா


சொல்லி முடிக்கவும் ரவி, "ஆ" என்று அலறவும் எல்லோரும் ரவியை நோக்கித் தங்கள் பார்வையை வீசினர்.


சந்திர மண்டலத்தில் விண்கலம் ஒன்று இறங்கியது போல ரவியின் தலையில் சற்று முகத்தை மறைத்தவாறு அது!
அதனால்தான் ரவி அலறியிருக்கிறான். நிகிலாவும் அகிலாவும்
அதைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டிருந்தனர்.


அவர்கள் அப்படிச் சிரிக்கக் காரணம்? இதுதான்!.
தாத்தா சற்று கரண்டியில் வேகத்தைக் காட்ட
"விர்"ரென்று பறந்து வந்த தோசைதான் அது!?


"போதும் நீங்க தோசை சுட்டு புள்ளைக்குச் சூடு போட்டது.
நகருங்க என்று பாட்டி, தாத்தாவை இடத்தைக் காலிபண்ண வைத்தார்.


கொஞ்ச நேரத்தில் பாட்டி சுடச்சுட சுட்டுப்போட்ட தோசைகள் கோழிக் குருமாவோடு எல்லோர் வயிற்றிலும் அடக்கமானது.


நிகிலா, ரவியைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரவியோட நெற்றி பனியாரம் மாதிரி வீங்கப்போகுது.
ரெண்டு நாளைக்கு எங்கும் வெளியே போக முடியாது, பாரேன்" என்றாள்.
தாத்தாவிடம் ரவி, நிகிலாவைப் புகார் செய்து கொண்டிருந்தான்.


" ரவி, நிகிலா சொன்னா சொல்லீட்டுப் போகட்டும். சொல்றவங்களுக்குத் தானே வாய் வலிக்கும். நீ, ஏன் கவலைப்படணும். இரு, நான் இப்ப மருந்து போடுறேன். சரியாப்போகும், " என்றார் தாத்தா.


"இராத்திரி தாத்தா உனக்கு ஒரு அற்புதமான கதை சொல்லப் போறேன்.


இந்த மாதிரி கதையை முன்னாடி நீ கேட்டிருக்க முடியாது. நிகிலாவுக்கு இந்தக் கதை கிடையாது," என்று சொல்லி ரவியை தாத்தா சமாதானப்படுத்தினார்.


" அய்! தாத்தா எனக்கு மட்டும் கதை சொல்லப் போறாங்களே " என்று சந்தோஷமாக நிகிலாவிடம் சொல்லி அழகு காட்டினான்.


" தாத்தா என்ன உன் காதுல இரகசியமாவா கதை சொல்லப்போறாங்க. கதை சொல்லும்போது எனக்கும் கேக்கத்தானே செய்யும்," என்றாள் நிகிலா பதிலுக்கு.


"நீங்கள்ளாம் தூங்கினதுக்கு அப்புறமா தாத்தா வந்து எனக்கு மட்டும் சொல்லுவாங்களே " என்று ரவி சொல்ல நிகிலா தாத்தாவிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.


" தாத்தா, எனக்கும் அகிலாவுக்கும் சேர்த்துத்தான் கதை சொல்லணும்.
அது என்ன நீங்க ரவிக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றேன்னு சொல்லீருக்கீங்க? என்று கேட்கரவி, சொல்லக்கூடாது என்று சொல்ல ஒரே அமர்க்களாமாயிருந்தது.
" சரி... சரி எல்லோருக்கும் சேர்த்தே கதை சொல்றேன்," என்று சொன்ன பிறகுதான் சத்தம் ஓய்ந்தது அங்கு.
என்னடா, இது திடீர்னு, இந்தத் தாத்தா சரண்டர் ஆயிட்டாரே என்று
ரவிக்கு உள்ளுக்குள் வருத்தமாகத்தானிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், " தாத்தா நீங்க சொல்லப் போற கதைப் பெயரை மட்டும் எனக்குச் சொல்லுங்க தாத்தா ப்ளீஸ்," என்றான். தாத்தாவும் ரவியின் காதுல ரகசியமாச் சொன்னார். சொல்லீட்டு கோழிப் பண்ணைக்குப் புறப்பட்டுப் போனார்.
தாத்தா போனப்புறம், " அட! கதையோட பேரே ரெம்ப நல்லாருக்கே! " என்று ரவி துள்ளிக் குதித்தான்.
" ரெம்பத்தான் அலட்டாதே. அதான் இராத்திரி தாத்தா சொல்லப்போறாங்களே. அப்பத் தெரிஞ்சிட்டுப் போகுது என்ன கதைன்னு? என்று நிகிலா சொன்னாள்.
என்ன இருந்தாலும் இந்த ரவிப்பயகிட்ட மட்டும் தாத்தா சொல்லீட்டுப் போயிட்டாங்களேன்னு நிகிலாவுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். உடனே வீட்டைவிட்டு நிகிலா வெளியே போனாள். போன வேகத்தில் நிகிலா வந்து, " எங்கிட்டயும் தாத்தா கதைப் பேரைச் சொல்லீட்டாங்களே! " என்று சந்தோஷமாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் ரவியின் முகம் வாடிவிட்டது.


"உணவு மழைத் தீவு ன்னு சொல்லீட்டாங்களா தாத்தா?" என்றான் ரவி.
" அய்! தாத்தா சொல்லல. நீயே சொல்லீட்டீயே," என்று நிகிலா கைதட்டிச் சிரித்தாள்.
இரவுச் சாப்பாடு முடிந்து எல்லோரும் கூடத்தில் தாத்தாவை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் தாத்தாவும் அங்கே வந்து சேர்ந்தார். " என்ன, எல்லோரும் கதை கேட்க ரெடியா? " தாத்தா கேட்டார். மூவரும் நாங்க ரெடி என்றனர். எல்லோரின் கண்களும் தாத்தாவின் மேல் பதிந்திருந்தன. தொண்டையைச் செருமி, சரி செய்துகொண்டு கதையை ஆரம்பித்தார்.

- இன்னும் பொழியும்....!

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது