KathaiKathaiyaam

Saturday, December 24, 2011

<>கிறிஸ்துமஸ் பரிசு!<>

கிறிஸ்துமஸ் பரிசு!

அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ?

வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்!

இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.

பகல் முழுக்க நகரின் பல பகுதிகளில் சுற்றியலைந்து கையேந்தலில் கிடைக்கும்
காசிலும், வீடுகளில் மிச்சம் மீசாடிகளை இவர்கள் பாத்திரங்களில்
கவிழ்க்கப்படுவதைக் கொண்டு கால்வயிறோ அரை வயிறோ நிரப்பிக்
கொண்டு இரவுப்பொழுதுக்கு கந்தைத் துணிகளைப் பரப்பிய சொகுசு
மெத்தைகளில் முடங்கிக்கொள்வார்கள்!

கொஞ்சம் காலை மாற்றிப் புரண்டு நீட்டினால் சாக்கடை நீர் கால்களை வாரியணைத்துக் கொள்ளும். இவர்களின் சுவாசப்பைகள் சாக்கடைச் சந்தனம் கமழ்ந்து பழ‌க்கப்பட்டுவிட்டது.

ஒருகாலத்தில் மதுரையின் பிரதான நதியாக நகரை வகிர்ந்து ஓடிய கிருதமால் நதி ஒரு புராண கால நதி. வைகையிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு. இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்கிரமிப்புக்களால் கழிவுநீர்சாக்கடையாகிவிட்டது.

இந்தச் சாக்கடைச் சங்கமத்தில் அந்தியும் இரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொன்பொழுதுகளில் துவங்கி பின்னிரவு வரை எங்கெங்கோ சிதறிப்போனவர்கள்
சங்கமிப்பதும் காலை வெய்யில் உடம்பைச் சுடும்வரையிலும் மூவேந்தர் பரம்பரையினர் உறங்கி விழிப்பதும் அன்றாட நிகழ்வுகள் என்றாலும் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் வாழ்வின் உட்புறம் சுகங்களும் சோகங்களும் உள்ளடங்கிய் இரகசியப் புதையல்கள்!


பிலிப், ஆறடி உயரம்;சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் இடது கால் ஊனம்! இருந்தாலும் ஊன்றுகோலின்றி விந்திவிந்தி நடப்பான்; குடும்பம் என்ற ப‌ந்த‌த்திலிருந்து வில‌கி நாடோடியாய் எங்கிருந்தோ மாரிய‌ம்மாளாக‌ வ‌ந்து ம‌ரியாளாகி பிலிப்பும் ம‌ரியாளும் த‌ம்ப‌திக‌ளாய்க‌ட‌ந்த ஆறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இணைபிரியாம‌ல் வாழ்க்கைச் ச‌க்க‌ர‌த்தை ந‌க‌ர்த்திவ‌ருகின்ற‌ன‌ர்.

ம‌ரியாவுக்கு க‌ட‌ந்த‌ ப‌த்து நாளாக‌ விச‌ சுர‌ம் வ‌ந்து ப‌டுத்தே கிட‌க்கிறாள். காலையில் ஒரு தேனீரும் ப‌ண்ணும் வாங்கிக்கொடுத்துவிட்டு பிலிப் த‌ன் தொழிலுக்கு கிள‌ம்பி விடுவான்.தொட‌ர்வ‌ண்டி நிலைய‌ம்,பேருந்து நிலைய‌ம் எங்கெங்கோ சுற்றிவிட்டு கையில் சேர்ந்த‌ காசுக்கு ஏற்றார் போல‌ 12ம‌ணிக்கு ம‌ரியாவின் த‌லைமாட்டில் சாப்பாட்டுப் பொட்ட‌ல‌த்தோடு வ‌ந்து உட்கார்ந்துவிடுவான்.

அவ‌ள் சாப்பிடுவ‌தை அப்படியே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பான். மாலையில் ஒரு த‌ர‌ம் வ‌ந்து அவ‌ளை எழுப்பி தான் வாங்கி வ‌ந்த‌ தேனீரைக் கொடுத்துவிட்டு போனால் இர‌வு ஒன்ப‌துக்கோ ப‌த்துக்கோதான் வ‌ருவான்.

"இந்தா, இந்த‌ மாத்திரையைப் போட்டுக்க‌,நாளைக்காவ‌து நீ எந்திருச்சுட்டா ப‌ரவா
இல்லை; கிறிஸ்ம‌ஸ் இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கு. நீ இப்ப‌டியே ப‌டுத்துக்
கெட‌ந்தா நல்லாவா இருக்கு..."

"என்னா சொன்னீங்க‌? இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கா? விசாழ‌னோட‌ விசாழ‌ன்..ஏழு..எட்டு.. வெள்ளி,ச‌னி,ஞாயிறு...அட‌ங்கொப்புறான.. ப‌த்துநாளாவா நான் ப‌டுத்துக் கெட‌க்கேன்.."என்றாள் வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்து!

"ச‌ரியாச் சொன்னா,இன்னைக்கு ப‌தினோராவ‌து நாள்...ம‌ரியா..." மாத்திரைய‌ போட்டு ப‌டுத்த‌வ‌ள் ம‌றுநாள் பிலிப் த‌லைமாட்டில் தேனீர் குவ‌ளையோடு வ‌ந்து எழுப்பிய‌போதுதான் ம‌ரியா அலங்க மலங்க விழித்தவாறே எழுந்தாள்.

தன்னுடைய நீளமான கூந்தலை இட‌து கையைப் பின்பக்கமாகக் கொண்டுபோய் பிடித்துக்கொண்டு வல‌து கையால வளையம்வளையமாக வளைத்துக் கொண்டை போட்டுச் சொம்பில் இருந்த தண்ணீரால் முகம் கழுவி பிலிப் நீட்டிய தேனீரை வாங்கிக்கொண்டாள்,மரியா!

"சரி, நீ தேத்தண்ணியச் சாப்பிடு, நாங் கெளம்புறேன், நீ இன்னைக்கும் பேசாம படுத்துக்க‌ நாளைக்கு ஒரு நாள் தான் குறுக்க இருக்கு. அதுக்குள்ள ஒனக்கும் சரியாயிரும்; ஞானஒளிவுபுரம் கோவிலுக்கே போவம்,என்ன?" என்று சொல்லிக்கொண்டே சாக்குப்படுதாவை தூக்கிவிட்டுவிட்டு
அவள் பதிலுக்குக் கூட காத்திராமால் கிளம்பினான்,பிலிப்.

பிலிப் அந்தப்பக்கம் போனதும் தேனீர் குவளையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மூட்டை முடிச்சுகளாக இருந்த மூலையில் கையைவிட்டு எதையோ தேடி எடுத்தாள். அதில் சில கசங்கிய‌ ரூபாய் நோட்டுக்களும் சில்லறைக்காசுகளும் இருந்தது. அதை அப்படியே கீழே கொட்டி எண்ணத் துவங்கினாள். ஐம்பத்தி நான்கு ரூபாயும் இருபது காசும் இருந்தது. இதை வச்சு எப்படி அதை வாங்குறது? அவள் மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள்.

சரி நாமளும் கெளம்பிட வேண்டியதுதான், காலேஜ் ஹவுஸ் பக்கம் போய் பார்ப்போம்...என்று தனக்குள் முடிவு செய்த அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பியும் விட்டாள்.

ஒரு பிரபலமான கெடிகாரக் கடையின் "காட்சிப் பேழகம்" முன்பாக நின்றாள்,மரியா.

கண்ணாடிப் பெட்டிகளில் அழகழகான கெடியாரங்கள் பளபளவென்று கண்ணைப் பறித்தது. அவள் தேடுவது அங்கு இல்லையே.... ஒரு ஓரமாக இருந்த வெல்வெட்டுப் பெட்டியில்அவள் எதிர்பார்த்தது இருந்தது; விலை தெரியவில்லை. எம்பி எம்பிப் பார்க்க முயன்றபோது
கடை வேலையாள் வந்து," ஏய் இங்க என்ன பண்றே..போ...போ.. அந்தப்பக்கம்" என்று விரட்டினான்.

"அந்தச் சங்கிலி வெலை எவ்வளவு?" என்றாள்.

"அதெல்லாம் வெலை சாஸ்தி... நகரு...நகரு... ஆளுங்க வர்ற நேரத்துல நீ வேற...பெரிய‌ செயின் வாங்க வந்த மூஞ்சைப் பாரு.."என்று அடிக்காத கொறையா வெரட்டின்னான்.

"இல்லை, நெசமாவே வாங்கத்தான் வந்தேம்...வெலை எவ்வளவு...."என்றாள்.

"அதெல்லாம் வெலை சாஸ்தி. ஒன்னால வாங்க முடியாது. கெளம்பு...கெளம்பு..." என்று கடை வேலையாள் இவளை விரட்டுவதில் குறியாக இருந்தான்.

"என்னமோ ஒங்ககிட்ட சும்மா குடுங்கன்னு கேட்டமாதிரியில்லவெரட்டுறீங்க. வெலையச் சொல்லுங்க; நாங் காசுகுடுத்தா குடுங்க. ரெம்பத்தான் மெரட்டுறீங்களே..."என்றாள் இவள்.

"எவ்வளவு நீ வெச்சுருக்க அதச் சொல்லு மொதல்ல..."என்று விலையைச் சொல்லாமல் கடையாள் அதட்டலாக் கேட்டான்.

"ம்ம்ம்....அம்பது ரூவா வச்சிருக்கேன். எவ்வளவுன்னு தெரிஞ்சா மேக்கொண்டு போய்காசு கொண்டாருவம்ல்ல..." என்றாள் மரியா.

" அம்பதா? அதுக்கு அஞ்சு சங்கிலித் துண்டு கூட வராது. இன்னொரு சைபர் சேத்துக் கொண்டா...பாக்கலாம்.."என்றான் கடையாள்.

"அடியாத்தே....ஐநூறு ரூபாயா? நெசமாலுமா?" என்று வாய் பிளந்து கேட்டாள், மரியா.

"அதான் மொதல்லயே சொன்னேன். நீயெல்லாம் வெலை கேக்க வந்துட்ட.. போ..போ..போய்

கவரிங்கடையில போய்க் கேளு;அவங்கூட வாட்ச் செயின் அம்பது ரூபாய்க்குத் தரமாட்டான்...வாட்ச் செயின் வாங்குற மூஞ்சியப் பாரு காலங்காத்தால வந்து உசிரை எடுக்குது..."என்று எரிந்துவிழ ஆரம்பித்தான் கடையாள்.

கடையாளை மொறச்சுப் பாத்துக்கிட்டே அங்கிருந்து நகர்ந்தாள்,மரியா.

அங்குமிங்குமாக அலைந்து ஒரு கவரிங்கடைக்கு வந்து கவரிங்கில் வாச்சுக்கு சங்கிலி வேணுமுங்க‌. எவ்வளவு வெலைங்க? என்று கேட்டாள்.

"யாருக்கு? ஆம்பளைக்கா? பொம்பளைக்கா? என்று கேட்டான் கடைக்காரன்.

"எங்க வூட்டு ஆம்பளைக்குத்தாங்க..வெலையச் சொல்லுங்க," என்றாள்.

"நூத்தம்பது ரூபாயாகும்..ரூபா வச்சிருக்கியா?"

"என்னங்க தங்க வெலை சொல்றீங்க?"

"நூத்தி இருபத்தஞ்சுன்னா குடுக்கலாம்;அதுக்கு மேல கொறைக்க முடியாது.."

"எங்க அந்தச் சங்கிலியக் காட்டுங்க பாக்கலாம்,"

"மொதல்ல ரூபா வச்சிருக்கியான்னு சொல்லு..."

"இருக்குங்க..என்னமோ ஓசியா கேட்டமாதிரியில்ல சலிச்சுக்கிறீங்க"

"இந்தா பாரு...இதான்.... தொடாத...தொடாத... தொடாமப் பாரு"என்றான்.

"ம்ம்...சரி வூட்டுக்குப் போய் பணங்கொண்டாந்து வாங்கிக்கிறேனுங்க" என்று அங்கிருந்து புறப்பட்டாள். செயின் வாங்குற ஆளைப்பாரு என்று கடைக்காரன் எதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

நடந்துகொண்டே யோசித்தாள்; பணம் இருந்தால் கவரிங்கில் நூத்தி இருபத்தஞ்சு ரூபாய்க்கு வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்து அதையே வாங்கிவிடலாம். என்ன செய்வது? நாலு கோவில், பேருந்து நிலையம்ன்னு
சுத்துனாலும் நாலு ரூபாயும் கெடைக்கலாம்;நாப்பது ரூபாயும் கெடைக்கலாம்; இல்ல எதுவும் கெடைக்காமலே போனாலும் போகலாம். யோசனையாகவே நடந்தாள்,மரியா.

பிலிப்போட, தாத்தாவுக்கு அப்பாரு கட்டியிருந்த தங்கக் கெடியாரமாம். அது ஒவ்வொருத்தர் கையா மாறி இப்ப பிலிப்புகிட்ட இருக்கு. அந்தக் கெடியாரத்தோட சங்கிலி அறுந்து, அங்க வச்சு இங்க வச்சு அதுவும் காணாமப் போச்சுது. எப்படியாவது பிலிப்புக்கு இந்தக் கிறிஸ்மஸ் பரிசா ஒரு சங்கிலிய வாங்கிக் கொடுத்திடனும்ன்னுதான் மரியா இப்பத் தெருத்தெருவாய் அலைஞ்சுகிட்டு இருக்கா.

ஒரு சந்தில் நுழைந்து வெளிய வந்தபோதுதான் அந்தக்கடை இவள் கண்ணில் தட்டுப்பட்டது. இவ்விடம் பெண்களின் நீண்ட தலைமுடி விலைக்கு வாங்கப்படும். அவள் கண்ணில் மின்னல் கீற்று போல ஒரு
எண்ணம் உதயமானது. விறுவிறுவென்று கடைக்குள் நுழைந்தாள்.

தனது கூந்தலைக் காட்டி இதை விலைக்கு எடுத்துக்கொள்வீர்களா? என்று விசாரித்தாள். கடையிலிருந்த பெண் மரியாவின் கூந்தல் நீளத்தைப் பார்த்து வியந்து போனாள். முடியின் நீளத்தை அளந்து பார்த்துவிட்டு வாங்கிக்கொள்வேன், முடி பராமரிக்கப்படாமல் சிக்குப் பிடித்துப் போயிருக்கிறது. சுத்தம் செய்ற‌ வேலை நெறைய இருக்கு..."என்று இழுத்ததும் மரியாவின் மனசு உள்ளுக்குள் படபடத்தது.

முடியை வாங்க இயலாது என்று சொல்லிவிட்டால்....குறைந்தபட்சம் ஒரு நூறாவது கொடுத்தால் அந்தக் கவரிங் கடைக்கே போய்விடலாம் என்று மனமெங்கும் முட்டிமோதி.....கடைசியில் மாதாவே, இயேசு பாலனே கொறைஞ்சுது நூறு ரூபாய்க்கு வழி செஞ்சுடு என்று பிரார்த்தனையில்
வந்து முடிந்தது.

"ஒரு அரைமணி நேரமாகும்; நல்லா முடியை அலசி சுத்தப்படுத்தி வெட்டி எடுக்க வேண்டியிருக்கும், கிராப் மாதிரி கொஞ்சம் விட்டுட்டு வெட்டி எடுத்துக்கிறேன். சரியா?"என்றாள் கடைக்காரி.

"எவ்வளவு குடுப்பீங்கம்மா?" மென்று விழுங்கிக்கொண்டே கேட்டாள் மரியா.

கடைக்காரி ஒரு தாளில் கூட்டிக்கழித்துக் கணக்குப்போட்டு 525 ரூபாய் குடுக்கலாம் என்றாள்.

மரியாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு கிடைக்கும் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் முடிக்கு இவ்வளவு விலையா?

இவள் யோசிப்பதைப்பார்த்ததும் என்னம்மா யோசிக்கிற, வெட்டலாமா?வேண்டாமா? என்று கேட்டாள்.

இல்லை...இல்லை.. வெட்டிக்கங்க, என்று அவசரமாகச் சொன்னாள். வயித்துப் பசியில் சுருட்டிப்பிடித்து வலித்தது வயிறு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தக்"காட்சிப் பேழகம்" முன்பு இருந்தாள். அவள் பார்த்துச் சென்ற இடத்தில் இப்போது வேறு கெடிகாரம் இருந்தது. அந்தச் சங்கிலி இருந்த பெட்டியைக் காணோம். கடைக்குள் சென்று அந்தக் கடையாளிடம் படபடப்போடு, கேட்டாள். ஒரு வாடிக்கையாளர் கேட்டார், காட்டீட்டு
இதோ இங்க இருக்கு, நீ ரூபாய் கொண்டாந்தியா? என்று கடையாள் கேட்டான்.

நீங்க கேட்ட மாதிரி இதோ ஐந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

"இதோ பாரும்மா, நான் ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னேன், சரியான இதன் விலை 590.99பைசா! எடு இன்னொரு நூறு ரூபாயை,"என்றான்.

தன்னிடம் இருந்த 50ரூபாயையும் முடி வாங்கியவள் கொடுத்ததிலிருந்த 25 ரூபாயையும் சேர்த்தால் 575தான் வந்தது.

இந்தாங்க 575ரூபாயை வச்சுக்கிட்டு அதைக் குடுங்க"என்று கேட்டாள், மரியா.

இன்னும் பதினாறு ரூபாய் குடுத்திட்டு வாங்கீட்டுப் போ"கடையாள் கறாராகப் பேசினான்.

எவ்வளவோ மன்றாடிக்கேட்டுப்பார்த்தாள்; கடையாள் மசியவில்லை.

"சரி, இந்த ரூபாயை வச்சுக்குங்க; இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துருவேன்; யாருக்கும் குடுத்துராதீங்க,"என்று சொல்லிவிட்டு மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி ஓடினாள்,மரியா.

அரைமணி நேரத்துக்கும் மேலாகி சல்லிக்காசுகூட கிடைக்கவில்லை; அப்போது ஒரு வசதியான குடும்பம் கோவிலிலிருந்து வெளியே வந்தது. அவர்களை நோக்கி நம்பிக்கையோடு நெருங்கினாள்.

"அய்யா ரெம்பப் பசிக்குதுங்கய்யா, புண்ணியமாப் போகட்டும். ஒரு சாப்பாட்டுக்கு ஒதவி பண்ணுங்க அய்யா..அய்யா...விடாது தொடர்ந்தாள் மரியா. ஒரு புது பத்து ரூபாய் தாள் வந்து விழுந்தது, அவளிடம்.

அடுத்த அரைமணிநேரத்தில் அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று ஏழெட்டு ரூபாய் கிடைக்கவே ஓட்டமும் நடையுமாய் அந்தக்கடைக்கு ஓடினாள். வயிறு சுருக், சுருக்கென்று வலித்தது அவளுக்கு.

இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தத் தங்கச் சங்கிலி கைக்கு வரப்போகிறது, என்பதில் பசி,வலி மறந்து வேகம் காட்டிப்போனாள். இந்தாங்க என்று பதினாறு ரூபாயைக் கொடுத்து அந்தத் தங்க முலாம் பூசப்பட்ட கெடிகாரச் சங்கிலியை பளபளப்பான வெல்வெட்டுப் பெட்டியில் வைத்துக் கொடுத்ததைப் பத்திரமாக வாங்கிக்கொண்டு தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்.

பிலிப் எதுனாச்சும் சாப்பிடக் கண்டிப்பா கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கும், அதச் சாப்பிட்டுக்கலாம் என்று வயித்துக்குச் சமாதானம்
சொல்லிக்கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தாள்.

காலையில் ஒரு தேனீர் குடித்தது. இப்போது சாயாந்திரமாகிப்போச்சு. ஒரு இடத்தில் வாங்கி வந்த பொருளை வைத்துவிட்டு, ஒரு கிழிசல் போர்வையை போர்த்திக்கொண்டு அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.


"மரியாம்மா...மரியாம்மா...என்னம்மா எழுந்திரு.... இங்க பாரு ஒனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் கிறிஸ்மசுக்கு?!
என்று எழுப்பினான் பிலிப்.

மரியா, வழக்கமாக இவன் கூப்பிட்டதும் எழுந்துவிடுபவள் எழவே இல்லை,என்றதும் பயந்துபோய் அவளைத் தொட்டு
உசுப்பி மரியா..மரியா..என்று சொல்லி எழுப்பினான்.

மெல்ல, முனங்கிக்கொண்டே எழுந்தவள், நீங்க‌ எனக்கு வாங்கீட்டு வந்தது இருக்கட்டும், நான் உங்களுக்கு ஒன்று வாங்கீட்டு வந்து இருக்கேன், அது என்னன்னு சொல்லுங்க? என்றாள்.

அவன் உடனே அருகில் உட்கார்ந்து கை இரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். "சரி, என்ன வாங்கி வந்த? நீ எதுக்கு உடம்பு முடியாதபோது வெளிய கிளம்பிப் போன. நான் மதியம் வந்து ஒனக்கு வாங்கி வந்து வச்ச சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கு!?"என்றான்.

"சரி நாம ரெண்டுபேருமே சாபிடுவோம்; நான் வாங்கி வந்தது என்னன்னு சொல்லுங்க? பார்ப்போம்"என்று மரியா தான் போர்த்தியிருந்த போர்வையை விலக்காமலே சொன்னாள்.

"எனக்கு எதாவது புது துணி எடுத்தாந்துருப்ப; வேற என்ன? சரி நான் என்ன வாங்கி வந்துருக்கேன்னு நீ கண்டுபுடிக்க முடியாது; நீ என்ன வாங்கி வந்துருக்கேன்னு நான் கண்டு புடிக்க முடியாது. நான் என்ன வாங்கி வந்தேன் என்பதை நாஞ்சொல்றேன், முதல்ல,"என்றான்.

"எத்தனை தடவை நாம ரெண்டுபேரும் கடைவீதியில் அந்தப் பல்பொருள் அங்காடிக்கடையில விதவிதமா பெரிய பல், சின்னப்பல் சீப்புகள், பேன் சீப்பு இதெல்லாம் யானைத் தந்தத்துல செஞ்சத நாம வாங்க முடியுமா?ன்னு ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கேட்டிருக்க. அதை ஒனக்காக இந்தக் கிறிஸ்மஸ்சுக்கு பரிசா வாங்கியாந்தேன். நீ, என்ன‌ வாங்கி வந்த? என்றான் பிலிப்?

அவள் கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்ததை அவன் அறியாமல் துடைத்துக்கொண்டே," அந்தக் கையை நீட்டுங்க,"என்றாள்.

"ஏன்? எதுக்கு, சும்மா சொல்லு,"

"நீங்க ஒங்க வாச்சு கட்டியிருக்கிற‌ கையை இப்படி நீட்டுங்க..."

"தலைக்கு அணவா கையை வச்சிட்டு இருக்குறதுல ஒரு சொகம்...நி, சொல்லு மரியா.."

கையை நீட்டி அவனின் வலது கரத்தை வெடுக்கென இழுத்தாள், மரியா.

அந்தக் கையில் கெடிகாரம் இல்லை; கை வெறுமையாக இருந்தது.

"எங்கங்க,அந்த வாச்சு?"

ஒரு சின்னச் சிரிப்புக்குப் பின், அந்தச் செயின் தொலைஞ்ச பொறவு அதக் கையில கட்டவே பிடிக்கல..."

"சரி,சரி...அத எடுங்க...இந்தாங்க அதுக்கு ஏத்த தங்கச் சங்கிலி...." சங்கிலியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

யானைத் தந்தத்துல வாங்குறதுக்காக அதை நான் வந்த விலைக்கு வித்துப்புட்டேன்; அது கையில‌ இருந்து ஆகப்போறது என்ன மரியா? வானத்தைப் பார்த்துக்கொண்டே மெல்லச் சொன்னான்,"பிலிப்.

ஏங்க இப்புடிப் பண்ணினீங்க? எனக்காகவா ஒங்க பரம்பரை பரம்பரையா காத்த சொத்தை வித்தீங்க?

போர்வையை உதறிவிட்டு அவன் மீது சாய்ந்து கதறினாள்.

அப்போதுதான் பார்த்தான் அவள் தலை மொட்டையாக இருந்ததை.

கெடிகாரச் சங்கிலியும் யானைத் தந்தச் சீப்புகளும் குப்பையில் கிடக்கும் "கோமேதக"மாக அங்கே காட்சியளித்தது.

நன்றி:-


Labels: , , , , , , ,

Sunday, February 28, 2010

உணவு மழைத் தீவு - :9 :

                                     <>உணவு மழைத் தீவு<>

அதிகாலையில் போர்வைகளுக்குள் முடங்கிக்கிடந்த உணவுமழைத்தீவு மக்களுக்கு அந்தத் தீவின் அபாயச்

சங்கொலி ஊதுவது கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோவென்று பதறியடித்து எழுந்தனர். வீதிகளில் ஒலிபெருக்கியில் பேசும் சத்தம் கேட்டது.




அதிகாலையிலிருந்து கடும் புயல் வீசப் போவதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். இடியாப்ப புயல் வீசும்போது இடியாப்பம் சிறிதாகவோ பெரிதாகவோ வந்து விழுந்து பூமியைத் தாக்கக்கூடும். எனவே மக்கள் தாங்கள் சேகரித்துவைத்துள்ள உணவுப்பொருட்களுடன் பாதாள அறைகளில் தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். மறு அறிவிப்புவரும்வரை பொதுமக்கள் தங்கள் பாதாள அறைகளைவிட்டு வெளியே வராமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிவித்துக்கொண்டு போனார்கள்.


அதற்குள்ளாகவா என்று பெரியவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். எல்லோரும் உணவுப்பொருட்கள், தேவையான பொருட்களுடன் பாதாள அறைகளுக்குள் சென்றனர். பொழுது விடியும் முன்பே, காற்றின் பேரிரைச்சல் கேட்டது. தொலைக்காட்சியில் வெளியே நடக்கும் காட்சிகளைப் பார்த்தனர். இடியாப்பம் ஒரு பேருந்துச் சக்கரம் அளவு பெரியதாக வந்து விழுந்துகொண்டிருந்தது.




இப்போதுதான் வீட்டு மேற்கூரைகள் சேதமாகி மாற்றினோம்.


மடமடவென்று வீடுகள் நொறுங்கி விழும் சத்தம்...இப்படியாக அதிகாலை அதிபயங்கரமான காலையாக மாறியிருந்தது.

வேற்று கிரகத்திலிருந்து பறந்துவரும் பறக்கும் தட்டுகள் போன்று வானத்திலிருந்து பூமியை நோக்கி இடியாப்பங்கள் வந்தவண்ணமிருந்தது!


காபி ஆவி பறக்க வந்தது. ஒரு புகை மண்டலம் போல வெளியே காட்சி தருவதை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் பயந்தனர். சிறுவர் சிறுமியர் பயந்து நடுங்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒருவாறாக இடியாப்ப புயல் தன் சினத்தைக் குறைக்கும்போது மாலை மங்கத் தொடங்கியிருந்தது. உணவுமழைத்தீவு நகரியம் தன் படைபரிவாரங்களோடு உணவுப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீடுதவறாமல் சேதம் மிகுந்து காணப்பட்டது. இடியாப்ப புயல் சேதங்களைச் சரிசெய்ய நான்கு நாட்கள் உணவுமழைத்தீவு மக்களுக்கும் தீவு அலுவலர்களுக்கும் தேவைப்பட்டது. இடியாப்பங்கள் ஒருவரால் தூக்க இயலாத அளவு பெரிதாக இருந்தது. இவற்றையெல்லாம் சேகரித்து ஒரு பகுதியை கடலில் மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்களுக்கு உணவாகப் போட்டனர். மீதியை உணவு மழைத் தீவு ‍குப்பைக் கிடங்கில் போட்டு மூடினர்.


ஒருநாள் காய்க‌றி சூப்பாக‌வே பெய்தது! இன்னொருநாள் கோழிக்க‌றியும்,சுக்கா வ‌றுவ‌லுமாக‌ பொழிந்து த‌ள்ளிய‌து! ம‌ற்றொருநாள், ரொட்டியும் வெண்ணெயுமாக‌ வ‌ந்து விழுந்த‌து. அடுத்த‌நாள் பாசிப்பருப்பு பாயாச‌மாய் பொழிய‌ அன்று அதையே வ‌யிறு நிறைய‌ச் சாப்பிட்டு குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிற்றுவ‌லி என்றான‌து. ஒருநாள் பாலில்லாம‌ல் வ‌ர‌க்காப்பியாக‌ப் பெய்து காபி பிரிய‌ர்க‌ளை க‌வ‌லைப்ப‌டுத்திய‌து. சந்தோசமாக உணவு மழைத் தீவு மக்கள் வாழ்க்கை நகர்ந்தாலும் புயல், திடீர் பேரளவு உணவுமழைகளால் சில‌ நேர‌ங்க‌ளில் வாழ்க்கை க‌ச‌ந்து போகிற‌து. அப்படிக் கசந்துபோகிறநாளும் வந்தது!


இன்னும் பொழியும்....!

உணவு மழைத் தீவு :19:

<>உணவு மழைத் தீவு<>
உணவுமழைத் தீவு உற்சாகத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தங்களுக்கு விடிவுகாலம் வெகு சீக்கிரமாக வந்ததால் எல்லோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
ஏற்கனவே உணவுமழைத் தீவு மக்கள் தங்களோடு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை தயாராக வைத்திருந்தனர். காலம் காலமாக வசித்து வந்த உணவுமழைத் தீவை விட்டுப் பிரிவதில் சிலருக்கு வருத்தம்.
பலருக்கு இனிமேல் புதிய தீவில் புது வாழ்க்கை வாழப்போகிறோம் என்ற மகிழ்ச்சி தென்பட்டது.
ஆனாலும்....
உள்ளூர புதிய தீவில் எப்படி? வாழப்போகிறோம் என்ற கவலை கொஞ்சம் இருக்கவே செய்தது. உணவுமழைத் தீவில் உழைக்காமல் பசியாற முடிந்தது. புதிய தீவில் உழைத்தால் மட்டுமே உண்ணமுடியும் என்பதை அனைவரும் அறிந்தே இருந்தனர்.
இயற்கையின் சீற்றத்தை தவிர்த்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இப்போது
உணவுமழைத் தீவை விட்டுப் பிரிகின்றனர்.
நல்ல உச்சி வெயில்.....
உணவுமழைத் தீவை கடைசியாக ஒருமுறை வலம் வந்து விட்டு தங்கள் குழந்தைகளோடு சிறிய படகுகளில் ஏறி கப்பலை நோக்கி கிளம்பினர்.



ஒருவழியாக சூரியக்கதிர்கள் மேற்கில் தலை சாய்க்கும் நேரம் உணவுமழைத் தீவு மக்கள் வான் தீவுக் கப்பலில் தங்கள் குழந்தைகளுடன் ஏறி இருந்தனர்.
பெரியவர்கள் தங்களிடமிருந்த 24 படகுகளில் அமர்ந்தனர்.
உணவுமழைத் தீவு நிர்வாகி ஒரு முறை உணவுமழைத் தீவை வலம் வந்து எவரேனும் தப்பித் தவறி தீவில் இருக்கிறார்களா என்று பார்த்தார். எவரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு கடைசிப் படகில் அவர் ஏறிக்கொள்ள படகுகள் அனைத்தும் கப்பலைப் பின் தொடர உணவுமழைத் தீவு யாருமற்ற அநாதை போல தனித்து நின்றது.
உணவுமழைத் தீவு மக்கள், இப்போது ஒரு புதிய உலகத்தை நோக்கி, பாதுகாப்பாக...நம்பிக்கையோடு "பறவை"த் தீவு நோக்கிய பயணம்.

இதுவரை உழைத்துப் பொருளீட்டத் தேவையின்றி வாழ்ந்தவர்கள் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற உறுதியோடு துவங்கிய பயணம் இது.  உழைப்பு அது எளிமையா? கடுமையா? எப்படி இருக்கும் தெரியாது, அவர்களுக்கு.

எளிமையோ, கடுமையோ உழைத்தால்தான் வாழமுடியும்;அதுதான் சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்று ஒருமனதாய் தீர்மானித்து கனவு வாழ்க்கையை துறந்து நிச வாழ்க்கையை நோக்கி இந்தப்பயணம்.

எங்கும் கரிய இருள்; அலைகள் மேலெழுவதும் கீழே விழுந்து புரண்டு செல்லும் ஓசை மட்டும் மாறிமாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. 



தாய் வாத்தின் பின்னால் அணிவகுத்துச்  செல்லும் குஞ்சுகள் போல பெருங்கப்பலுக்குப் பின்னே படகுகள் பின்தொடர்ந்து சென்ற காட்சி  அந்த இருட்டிலும் அழகாக இருந்தது.
அவ்வளவுதான் கதை முடிந்தது..என்றார் தாத்தா.
தாத்தா,"கதை இன்னும் முடியலையே...பறவைத் தீவுக்கு போன உணவு மழைத் தீவு மக்கள் என்ன ஆனாங்க? பறவைத் தீவுக்கு போய் சேர்ந்தாங்களா? என்றாள் அகிலா?

பறவைத் தீவுக்கு போனாங்களாவா? பறவைத் தீவுல போய், உழைத்தால் உலகமே வியக்கும் அளவு உயர முடியும்ன்னு பல சாதனைகள் செஞ்சு பல அரிய கண்டுபிடிப்பெல்லாம் செஞ்சாங்க..."என்றார் தாத்தா.

தத்தா...தாத்தா....பறவைத் தீவு கதையும் சொல்லுங்க தாத்தா? என்றாள் நிகிலா.

நாளைக்கு பறவைத் தீவுக் கதையை தாத்தா சொல்லுவாங்க...இல்லையா தாத்தா? என்றான் ரவி.

"சரி...சரி...எல்லாரும் சீக்கிரம் படுக்கைக்குப் போங்க...நாளைக்கு அந்தக் கதையைப்  பாக்கலாம் "என்றார் தாத்தா.

அகிலா,நிகிலா,ரவி மூவரும் நல்ல கதையைக் கேட்ட மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து படுக்கையறையை நோக்கி ஓடினர்.

பறவைத்தீவு கதை, உணவுமழைத் தீவு கதையைவிட நல்லா இருக்கும் போலிருக்கே!
என்று நிகிலா சொன்னதும், "ஆமா..ஆமா...தாத்தாதான் சொன்னாங்களே உலகமே
வியந்து பாக்குற மாதிரி பல சாதனை செஞ்சாங்கலாமே!"என்றாள் அகிலா!

"எப்ப விடியும் தாத்தாட்ட பறவைத்தீவு கதையைக் கேக்கலாம்ன்னு இருக்கு"என்றான் ரவி.  இப்படியே எவ்வளவு நேரம் பேசினார்களோ ஒருவழியாக உறங்கியும் போனார்கள்.  நல்ல உறக்கத்தில் இருந்த மூவரிடமிருந்தும் எதோ முனகல் சத்தம்
கேட்டது. 
அது பக்கத்து அறையில் உறங்கிய தாத்தாவுக்கும் கேட்டு மெல்ல எழுந்து
வந்து எட்டிப்பார்த்தார்.  உணவுமழைத்தீவு....பறவைத் தீவு...என்ற மந்திரச் சொற்கள்
தாத்தாவின் காதுகளில் விழ....மெல்ல புன்னகைத்துக்கொண்டே ஓசைப்படாமல் கதவைச் சாத்திக்கொண்டு தாத்தா தம் படுக்கைக்குக்த் திரும்பினார்.

என்ன தம்பி தங்கைகளே உங்களுக்கு இந்தக் கதை  பிடிச்சிருக்கா?  பறவைத் தீவு
கதை கேட்க நீங்களும் தயாராகியாச்சா?


                                                    நிறைவு

Monday, May 04, 2009

உணவு மழைத் தீவு :18:

க‌ப்ப‌ல் த‌லைவ‌ர் "ஆனால் என்று சொல்லி நிறுத்திய‌தும் உண‌வு ம‌ழைத்தீவின‌ர் புருவ‌ங்க‌ள் உய‌ர...... இய‌லாது என்று ஏதும் சொல்லிவிடுவாரோ என்ற‌ அச்ச‌ம் மேலோங்க‌ அவ‌ரையே பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌ர்.

க‌ப்ப‌ல் த‌லைவ‌ரோ, "இது வான் தீவுக்குச் சொந்த‌மான‌ க‌ப்ப‌ல். வான் தீவு நிர்வாக‌த்தின் அனும‌தி இல்லாம‌ல் நான் உங்க‌ளை ஏற்றிச்செல்ல‌ இய‌லாது. ஆனால் உங்க‌ள் சூழ்நிலையைச் சொல்லி அவ‌ர்க‌ளுடைய‌ அனும‌தி பெற‌ முடியும் என்று நினைக்கிறேன்.

என‌வே க‌ப்ப‌லுக்குச் சென்று அதிகாரிக‌ளின் அனும‌தி பெற்றுக் கொண்டு வ‌ருகிறேன். அவ‌ர்க‌ள் அனும‌தி ம‌றுக்க‌ மாட்டார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கிற‌து. என‌வே க‌வ‌லைய‌ற்க‌. நான் சென்று பேசி வ‌ருகிறேன்" என்று சொன்னார்.

"ரெம்ப‌ ந‌ன்றி...ரெம்ப‌ ந‌ன்றி.." என்று ஒரே நேர‌த்தில் உண‌வும‌ழைத் தீவின‌ர் சொன்னார்க‌ள்.

க‌ப்ப‌ல் த‌லைவ‌ரும் அவ‌ருட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ளும் க‌ப்ப‌லுக்கு கிள‌ம்பிச் சென்ற‌னர்.

அவ‌ர்க‌ள் சென்ற‌தும் உண‌வும‌ழைத்தீவின‌ர் உற்சாக‌த்தோடு பேசிக்கொண்ட‌ன‌ர்.

க‌ப்ப‌ல் த‌லைவ‌ர் மிக‌ ந‌ல்ல‌வ‌ராக‌ இருக்கிறார். க‌ண்டிப்பாக‌ அனும‌தி வாங்கி வ‌ந்துவிடுவார் என்றும்

ந‌ம் ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌க் க‌ப்ப‌ல் ந‌ம் தீவு ம‌க்க‌ள் க‌வ‌லை நீக்க‌வே வ‌ந்த‌து என்றும் சொல்லிக்கொண்ட‌னர்.

ஒரும‌ணி நேர‌ம் க‌ழித்து க‌ப்ப‌ல் த‌லைவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

தீவு அதிகாரி,"ந‌ல்ல‌செய்தியோடு வ‌ந்திருப்பீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்,"என்றார் க‌ப்ப‌ல் த‌லைவ‌ரைப் பார்த்து!

"ஆமாம். உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ செய்திதான். எங்க‌ள் தீவு உயர் அதிகாரிகள்
அனும‌திய‌ளித்து விட்ட‌ன‌ர். ஒரே ச‌ம‌ய‌த்தில் மூவாயிர‌ம் பேர்க‌ள் வசதியாக எங்கள் க‌ப்ப‌லில் ப‌ய‌ண‌ம் செய்ய‌லாம். கொஞ்ச‌ம் அச‌வுக‌ரிய‌க் குறைவு இருந்தாலும் ப‌ர‌வாயில்லை என்று நீங்க‌ள் நினைத்தால் 4000பேர்க‌ளை ஏற்றிச்செல்ல‌ முடியும்," என்றார் க‌ப்ப‌ல் த‌லைவ‌ர்.
"அப்ப‌டியானால் எங்க‌ளிட‌ம் இருக்கும் ப‌ட‌குக‌ளில் மீத‌முள்ள‌வ‌ர்க‌ளை ஏற்றிக் கொள்ள‌ முடியும். உங்க‌ள் உத‌வியை எங்க‌ள் தீவு ம‌க்க‌ள் த‌ங்க‌ள் உயிர் உள்ள‌வ‌ரை ம‌ற‌க்க‌மாட்டார்க‌ள்; எங்க‌ள் எல்லோரின் சார்பிலும் உங்க‌ளுக்கும் உங்க‌ள் தீவு அதிகாரிக‌ளுக்கும் எங்க‌ள் ந‌ன்றிகள்," என்றார் தீவு நிர்வாகி.

க‌ப்ப‌லுட‌ன் தீவு நிர்வாகியும் மற்றவர்களும் உண‌வு ம‌ழைத் தீவை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌ட்டார்க‌ள்.



இன்னும் பொழியும்...!

Labels: , ,

Sunday, April 26, 2009

உணவு மழைத் தீவு :17:

கப்பலிலிருந்து ஒரு படகு கடலை நோக்கி இறங்கியது;அதில் நாலைந்துபேர்கள் இருந்தனர்.

படகிலிருந்த அனைவரும் அந்தப் படகையே கண் இமைக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தனர்.

இவர்கள் படகை ஒட்டி வந்ததும் தீவு நிர்வாகி முன் வந்து அவர்களை
வரவேற்றார். கப்பலின் தலைவன் தன்னையும் தன்னுடன் வந்தவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். தீவு நிர்வாகியும் தன்னையும் தன்னுடன் இருந்தவர்களையும் அறிமுகம் செய்தார்.

கப்பல் தலைவர் இப்போது பேசத்துவங்கினார்.

நாங்கள் எங்கள் இலகை நோக்கிக் கிளம்பிய பிறகுதான் உங்கள் படகில் வெள்ளைக்கொடி பறப்பதையும் எங்கள் கப்பலை நோக்கி வருவதையும் பார்த்தோம். அதன் பின்னர்தான் ஒரு வட்டமடித்து திரும்பி வந்தோம்; உடனே கப்பலை திருப்ப முடியாதல்லவா என்றவர், உங்களுக்கு என்ன உதவி தேவை? என்று நேரடியாக விசயத்துக்கு வ‌ந்தார்.

"எங்களுக்கு உதவ வந்தமைக்கு முதலில் எங்கள் தீவு மக்கள் சார்பில்

நன்றியைத் தெரிவித்துக்கொண்டார், தீவு நிர்வாக அதிகாரி.

அதன் பின் மளமளவென்று தங்கள் தீவுப் பிரச்னையையும், தற்போது குடி
புக விரும்பும் தீவுக்கு செல்ல தங்களின் பேருதவியை நாடியே வந்ததாகவும் விபரமாகச் சொல்லி முடித்தார், தீவு நிர்வாக அதிகாரி.

கப்பல் தலைவர், தீவு நிர்வாகி சொல்வதை உள்வாங்கிக்கொண்டு தன்னுடன் வந்த‌ மற்றவர்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

கப்பல் தலைவர் என்ன முடிவு சொல்லப்போகிறார் என்று வெகு உன்னிப்பாய் கவனித்துகொண்டிருந்தார்கள், உணவுமழைத் தீவைச் சேர்ந்தவர்கள்!

"நீங்கள் சொல்லும் தீவு வழியாகத்தான் எங்கள் கப்பல் பயணம்


செய்கிறது. ஆனால்...." என்று சொல்லி நிறுத்தினார்.

உணவு மழைத் தீவு :16:

இப்போது என்ன செய்வது? கண்ணுக்கு எதிரே தெரிந்த நம்பிக்கை இப்படி பொய்த்துப்போனதே என்ற கவலையில் எல்லோரும் ஆழ்ந்தனர். அவர்கள்


முகங்களெல்லாம் வாடிவிட்டது. கண்ணுக்கு எட்டியது க‌ர‌ங்க‌ளுக்கு எட்டாது போய்விட்டதே என்ற கவலை அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது.



பெருமழை பெய்து ஓய்ந்தவுடன் ஒரு அமைதி இருக்குமே, அதுபோல

அங்கு அமைதி நிலவியிருந்தது. எவரும் பேசவில்லை. என்ன பேசுவது என்றும்

அவர்களுக்குத் தெரியவில்லை.


மவுனம் கலைத்து தீவு நிர்வாகி,அங்கிருந்தவர்களிடம் சொன்னார்.

இப்படி நாம் அலைந்துகொண்டிருப்பதைவிட நம் படகுகளிலேயே

கொஞ்சம் கொஞ்சமாக மக்களை ஏற்றிக்கொண்டு புதிய

இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டுவிட்டு வந்து திரும்பவும்

மீதமுள்ளவர்களை ஏற்றிக்கொண்டு போவது ஒன்றுதான்

சிறந்ததாகப் படுகிறது என்றார்.

சிரமம் கொஞ்சம் அதிகம் என்றாலும் நமக்கு வேறு வழி இல்லை

என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.



அதுதான் சரி என்று தீவு நிர்வாகியிட‌ம் சொல்லவும் செய்தார்கள்.



அப்போது.....

"அங்க பாருங்க....அங்க பாருங்க..." என்று அங்கிருந்தவர்களில்

ஒருவர் சொல்ல, எல்லோரும் அவர் சுட்டிக்காட்டிய திசையில்

திரும்பிப் பார்த்தனர்.

வேகமெடுத்துச் சென்ற கப்பல் இவர்கள் படகை நோக்கி

வந்துகொண்டிருந்தது.



படகிலிருந்த எல்லோரும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தனர்.



"நாம் வந்தது வீண் போகவில்லை. இன்னும் சிலநிமிடங்களில்

இங்கு வந்துவிடும் அந்தக் கப்பல்"என்று தீவு நிர்வாகி சொல்லி

முடித்தபோது கப்பல் ஒரு நீண்ட ஒலி எழுப்பி அவர்கள்

படகின் சமீபம் வந்து நங்கூர‌ம் பாய்ச்சி நின்ற‌து.

அப்போது....!




இன்னும் வரும்....

Labels: , , , , ,

Friday, December 26, 2008

கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு -3


அங்கிங்கெனாத‌ப‌டி எங்கும் அஞ்ச‌ல‌ட்டைக‌ள்,அஞ்ச‌லுறைக‌ள்,கிறிஸ்ம‌ஸ் வாழ்த்த‌ட்டைக‌ள் என்று நிர‌ம்பிக் கிட‌ந்த‌ குவிய‌லுக்கு ந‌டுவே ச‌காய‌ம் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொன்றாக‌ எடுத்து முக‌வ‌ரியைப் ப‌டிப்ப‌தும், அந்த உறையைக் கிழித்து உருப்ப‌டியான‌ முக‌வ‌ரி இருக்கிற‌தா என்று க‌ண்க‌ள் துழாவுவதும், இல்லையென்றால் உத‌ட்டைப் பிதுக்குவ‌தும், இருந்தால் உத‌டு உவ‌ப்பான‌ ஒரு புன்ன‌கையை விடுவிப்ப‌துமாக‌ நேர‌ம் ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌து.

நகரின் பிரதான அஞ்சல் பிரிப்பக அலுவ‌ல‌க‌த்தில் ச‌காய‌த்துக்கு வேலை. ச‌காய‌ ராஜ் முழுப்பெய‌ர். அவ‌னுக்கு ச‌காய‌ம் என்று அவ‌ன் பெற்றோர் பெய‌ர் வைத்தாலும் வைத்தார்க‌ள். எதாவ‌து உத‌வியா? ந‌ம்ப‌ ச‌காய‌த்துக்கிட்ட‌ கேளுங்க‌ம்பாங்க‌. இங்க‌ இருந்த‌ லெட்ஜ‌ரைக் காணோமே, யாராவ‌து பாத்தீங்க‌ளா? "ஸார், ச‌காய‌த்தைக் கேளுங்க‌. தேடிக்க‌ண்டுபிடிச்சு கொண்டுவ‌ந்து சேக்க‌ ந‌ம்ம‌ ச‌காய‌த்தை விட்டா யாரு இருக்கா? இப்ப‌டி அஞ்ச‌ல் நிலைய‌த்தில் ச‌காய‌ம்..ச‌காய‌ம்...ச‌க‌ல‌மும் ச‌காய‌ம்தான்!
வாப்பா, ஒரு சிங்கிள் "டீ" ஊத்திக்கிட்டு வ‌ருவோம் என்று அந்தோணி ச‌காய‌த்தின் அறைக்குள் நுழைந்தார்.

"அட‌, நீங்க‌ வேற‌ ம‌னுச‌னுக்கு அதுக்கெல்லாம் நேர‌ம் எங்க இருக்குண்ணே? நீங்க‌ போய்ட்டு வாங்க‌" என்றான் ச‌காய‌ம்.

"என்ன‌மோ, டீ குடிச்சுட்டு வ‌ர்ற‌ நேர‌த்துல‌ இதெல்லாம் முடிச்சு அனுப்ப‌ப்போற‌ மாதிரி சொல்ற‌, அடுத்த‌ கிறிஸ்ம‌சுக்கு கூட‌ நீ இதெல்லாம் அட்ர‌ஸ்கார‌ங்க‌ கிட்ட‌ சேப்பியான்னு என‌க்குச் ச‌ந்தேக‌மா இருக்கு. ச‌ரி,ச‌ரி வா..போயிட்டு சுருக்கா வ‌ந்துர‌லாம்" என்று அந்தோணி விடாப்பிடியாக‌ ச‌காய‌த்தை இழுத்துப்போவ‌திலேயே இருந்தார்.
"ச‌ரிண்ணே, இதை ம‌ட்டும்....இங்க‌ பாருங்க‌ண்ணே.. டு அட்ர‌சில் "எல்லாம் வ‌ல்ல‌ க‌ட‌வுள்"ன்னு போட்டு அனுப்பீருக்கிற‌தை. இப்ப‌டியெல்லாம் அனுப்பி ந‌ம்மைச் சோதிக்க‌னுமாண்ணே?!

"ஸ்டாம்பும் ஒட்ட‌ல‌ ஒண்ணும் ஒட்ட‌ல‌ தூக்கி *டி.எல்.ஒ* வுல‌ போடுவியா, அத‌ப்போய் ஆராச்சி ப‌ண்ணிகிட்டு" என்று அந்தோணி ச‌காய‌த்தைக் கெள‌ப்புவ‌தில் குறியாக‌ இருந்தார்.

"க‌ட‌வுளுக்கு என்ன‌தான் கோரிக்கை போகுதுன்னு பாப்ப‌மே..."
"யாரோ ஒரு அரைக் கிறுக்கு அனுப்பிய‌தைப் போய் ப‌டிச்சு ட‌ய‌த்தை வேஸ்ட் ப‌ண்ணீட்டு இருக்கியே,ச‌காய‌ம். டீயை ஊத்தீட்டு வ‌ந்து அப்புற‌மா அந்த‌ கோரிக்கையை ப‌ரிசீல‌னை ப‌ண்ணு" என்று அந்தோணி க‌ரும‌மே க‌ண்ணாயிருந்தார்.
"அண்ணே, ஒரு நிமிச‌ம், இந்த‌க் க‌டித‌த்தை ப‌டிக்கிறேன். பாவ‌ம்ண்ணே...இந்த‌ பாட்டிக்கு நாம‌ எதாவ‌து செய்ய‌ணும்ண்ணே. ப‌டிக்கிறேன். கேளுங்க‌ண்ணே!"

"ச‌காய‌ம், ஆர‌ம்பிச்சுட்டியாப்பா? உன்னைக் கூப்புட‌ வ‌ந்தேம்பாரு, என்ன‌ச் சொல்ல‌ணும்...ச‌ரி..ச‌ரி ப‌டி" என்று அந்தோணி சுவார‌சிய‌மின்றிக் கேட்க‌த் த‌யாரானார்.
"என்னினிய‌ க‌ட‌வுளுக்கு, தோத்திர‌ம்.
என‌க்கு வ‌ய‌து 97 ஆகியும் உங்க‌ளை வ‌ந்த‌டையாம‌ல் அர‌சு கொடுக்கும் முதியோர் உத‌வித் தொகையில் வாய்,வ‌யிற்றைக் க‌ழுவி வ‌ருப‌வ‌ள் நான் என்ப‌து நீங்க‌ள் அறியாத‌து அல்ல‌. எனக்கென்று எந்த‌ உற‌வும் இல்லை, உங்க‌ளைத் த‌விர‌. வ‌ரும் கிறிஸ்ம‌சுக்கு என் அந்த‌க் கால‌ சினேகிதிக‌ள் இருவ‌ரை விருந்து சாப்பிட‌ ப‌க்க‌த்து ந‌க‌ர‌த்திலிருந்து வ‌ர‌ச் சொல்லிவிட்டேன். இதெல்லாம் இந்த‌ வ‌ய‌தில் தேவையா? என்று நீங்க‌ள் கூட‌ நினைக்க‌லாம்.
அந்த‌ இருவ‌ருக்கும் என்னைபோல‌வே உற‌வு என்று சொல்லிக்கொள்ள‌ யாருமில்லை? அவ‌ர்க‌ளோடு நான் கொண்ட‌ ந‌ட்பை நினைவு ப‌டுத்தி இருவ‌ரும் க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம்தான் என்னை தொட‌ர்புகொண்டார்க‌ள். அப்போதே அவ‌ர்க‌ளிட‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் கிறிஸ்ம‌சுக்கு என் வீட்டில் விருந்து வைப்ப‌தாக‌ச் சொல்லிவிட்டேன். அவ‌ர்க‌ளும் ச‌ரி என்று சொல்லிவிட்டார்க‌ள்.
அப்போதிலிருந்தே மாசாமாசம் என் பென்ச‌ன் தொகையிலிருந்து ரெண்டும் அஞ்சுமாக‌ 300 ரூபாய் சேர்த்து சுருக்குப் பையில் போட்டு ப‌த்திர‌மாக‌ வைத்திருந்தேன். எப்ப‌டியோ க‌ள‌வு போய்விட்ட‌து. அதிலிருந்து என‌க்கு தாங்க‌ முடியாத‌ வ‌ருத்த‌மாக‌ உள்ள‌து. அடுத்த‌வார‌ம் கிறிஸ்ம‌ஸ். என் அடுத்த‌ பென்சன் கூட‌ ஜனவரி மாதம் தான்!
என் தோழிக‌ளை விருந்துக்கு வ‌ர‌ச் சொல்லிவிட்டு இப்ப‌டியாகிவிட்ட‌தே என்று பெருங்க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. என், அன்பான‌ க‌ட‌வுளே என‌க்கு நீங்க‌ள்தான் உத‌வி செய்ய‌வேண்டும். உங்க‌ளை விட்டால் என‌க்கு யாருமில்லை. எப்ப‌டியும் உத‌வி செய்வீர்க‌ள், என்ற‌ ந‌ம்பிக்கையோடு இந்த‌க் க‌டித‌த்தை எழுதுகிறேன். என் ஆண்ட‌வ‌ரே, இயேசு கிறிஸ்துவே உம்மையே ந‌ம்பியிருக்கும் மேரி.
"சிறுக‌ச் சிறுக‌ச் சேர்த்து ஒரு துணிம‌ணிகூட‌ த‌ன‌க்கு வாங்க‌ ஆசைப்ப‌டாம‌ல் த‌ன் தோழிய‌ருக்காக‌ விருந்து கொடுக்க‌ முடியாம‌ல் போய்விட்ட‌தே என்ற‌ இந்த‌ப் பாட்டிக்கு நாம‌ எதாச்சும் செய்ய‌ணும்ண்ணே" என்றான் ச‌காய‌ம் அந்தோணியிட‌ம்.

"பாவ‌மாத்தான் இருக்கு. என்ன‌ செய்ய‌லாம்? சொல்லு?" என்றார் அந்தோணி.

"அண்ணே இந்த‌ப் பாட்டிக்காக‌ இன்னைக்கு ந‌ம்ப "டீ"க்காசை தியாக‌ம் செய்ய‌லாம்ண்ணே!" என்ற‌ ச‌காய‌ம், ஒரு க‌வ‌ரை எடுத்து தன்னிடமிருந்த பத்து ரூபாயை அந்தக் க‌வரில் போட அந்தோணியும் பத்து ரூபாய் போட்டார். ம‌ள‌ம‌ள‌வென்று, அந்த‌ மேரிப் பாட்டியின் க‌டித‌த்தை ந‌க‌லெடுத்து நோட்டீஸ் போர்டில் ஒட்டி ந‌ன்கொடைய‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அளிக்க‌லாம் என்று ஒரு உறையையும் அருகில் தொங்க‌விட்டான், ச‌காய‌ம்.

அடுத்த‌ நாள் உறையை எடுத்து ச‌காய‌மும் அந்தோணியும் எண்ணிப்பார்த்தார்க‌ள். 272 ரூபாய் இருந்த‌து. ம‌றுப‌டியும் ஒரு சிறு வ‌சூல் ந‌ட‌த்திச் சேர்த்த‌தில் 287 ரூபாயான‌து. ச‌காய‌ம் த‌ன் பையில் அக‌ப்ப‌ட்ட‌ மூன்று ரூபாயையும் போட்டு 290 ரூபாய் ஆக்கினான். இன்னும் ஒரு ப‌த்து ரூபாய் குறையுதேண்ணே, என்றான் ச‌காய‌ம். அட‌, மேரிக் கிழ‌விக்கு இதுவே போதும்ப்பா. அதுகிட்ட‌ இத‌ச் சேக்குற‌ வ‌ழியைப் பாரு என்று அந்தோணி சொல்ல‌, அரைம‌ன‌தோடு ச‌காய‌ம் அந்த‌ப் ப‌ண‌த்தை உறையிலிட்டு ஒரு கிறிஸ்ம‌ஸ் வாழ்த்த‌ட்டை ஒன்றையும் வைத்து ஒட்டினான்.

மேரி பாட்டியின் முக‌வ‌ரிக்கு டெலிவ‌ரி செய்யும் த‌பால‌கார‌ர் அப்துல்லாவிட‌ம் கொடுத்து விச‌ய‌த்தைச் சொல்லி நேரில் சேர்த்துவிடும்ப‌டி கொடுத்துவிட்டான். எதோ, இந்த‌க் கிறிஸ்ம‌சுக்கு ஒரு உருப்ப‌டியான‌ கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு கொடுத்த‌ ம‌கிழ்ச்சி ச‌காய‌த்திட‌ம் தென்ப‌ட்ட‌து.

ஆயிற்று. கிறிஸ்ம‌ஸ் வந்து முடிந்தும் போன‌து.

வ‌ழ‌க்க‌ம்போல‌ ச‌காய‌ம் முக‌வ‌ரி ச‌ரியில்லாத‌ க‌டித‌ங்க‌ளைப் பார்த்துகொண்டே வ‌ந்த‌வ‌னுக்கு அந்த‌க் க‌டித‌ம் யாரிட‌மிருந்து வ‌ந்த‌து என்று தெரிந்துவிட‌வே, அந்தோணி அண்ணே, மாரிமுத்து, அருணாச‌ல‌ம், இஸ்மாயில் இங்க‌ வாங்க‌ என்று உற்சாக‌மாக‌க் கூப்பிட்டான். நாம‌ மேரிப்பாட்டிக்கு அனுப்பிய‌த‌ற்கு ந‌ன்றி தெரிவிச்சு ம‌ட‌ல் வ‌ந்திருக்கு..வாங‌க...வாங்க‌.. எல்லோரும் வாங்க‌ என்று ச‌காய‌ம் உற்சாக‌ம் பொங்க‌ கூப்பிட்டான்.

ச‌காக்க‌ள் புடை சூழ கடவுள் என்று முகவரியிட்ட‌ மேரியின் க‌டித‌ உறையைக் கிழித்து உள்ளிருந்த‌ க‌டித‌த்தைப் ப‌டிக்க‌த் துவ‌ங்கினான் ச‌காய‌ம்!

என்னினிய‌ இறைவா!

ந‌ன்றி! இந்த‌ மூன்றெழுத்து போதாது நீங்க‌ள் செய்த‌ உத‌விக்கு. நீங்க‌ள் அன்போடு அனுப்பிவைத்த‌ ரூபாயில் என் தோழிக‌ளுக்கு விருந்து வைத்தேன். அதும‌ட்டுமா, அந்த‌ விருந்துக்கு உங்களின் பிரதிநிதியாக இன்னொரு விருந்தாளியும் வ‌ந்திருந்தது, எங்க‌ளை மிகுந்த‌ ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்திய‌து. எங்க‌ள் ப‌ங்குத்த‌ந்தை அருட்திரு.பிலிப் அடிக‌ளார் இந்த‌ ஏழையின் இல்லத்துக்கு வ‌ந்து விருந்துண்டு ஆசீர்வ‌தித்த‌தை நீங்க‌ள் ஆசீர் வ‌தித்த‌தாக‌வே கருதுகிறேன்.

இந்த கிறிஸ்மசுக்கு நீங்கள் எனக்குத்தந்த பரிசுக்காக‌ மீண்டும் உங்க‌ளுக்கு என்னினிய‌ ந‌ன்றிக‌ளைச் ச‌ம‌ர்ப்பிக்கிறேன்.

க‌டித‌த்தை முடிக்கும் முன் உங்க‌ளிட‌ம் ஒன்றைச் சொல்லிவிட‌ விரும்புகிறேன். நீங்க‌ள் என‌க்கு அனுப்பிய‌ ரூபாய் 300ல் 10 ரூபாய் குறைந்த‌து. அது வேறொன்றுமில்லை. அஞ்ச‌ல் அலுவ‌ல‌க‌த்தில் இப்ப‌டித் திருடுவ‌த‌ற்கென்றே ஒரு கூட்ட‌ம் இருக்கிற‌து. அது அவ‌ர்க‌ளின் கைவ‌ரிசை என்ப‌து என் எண்ணம்.

இப்ப‌டிக்கு

ந‌ன்றியுள்ள‌
மேரி.

ச‌காய‌ம் உட்பட‌ எல்லோரும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொண்ட‌ன‌ர்.




* * Dead Letter Office

http://tamil.sify.com/art/fullstory.php?id=14824857

http://www.thinnai.com/?module=displaystory&story_id=10812255&format=html

http://www.geotamil.com/pathivukal/story_albert_christmas.htm

http://www.keetru.com/literature/short_stories/albert_1.php

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9073&Itemid=60

Sunday, November 30, 2008

உணவு மழைத் தீவு :15 :


"இவ‌ர் வ‌ந்து ஒரு செய்தியைச் சொல்கிறார். இந்த‌ நேர‌த்தில் ந‌ம‌க்கு இது ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌த்தான் இருக்கிற‌து. ந‌ம் தீவுக்கு கிழ‌க்கே ஒரு க‌ப்ப‌ல் ந‌ங்கூர‌ம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிற‌தாம். என்னுடன் ஓரிருவர் வந்தால் அவர்களிடம் நாம் பறவைத்தீவு போக உத‌வி கேட்டுப்பார்க்கலாம்," என்றார் தீவு நிர்வாக‌ அதிகாரி.
எல்லோரின் முகங்களிலும் பிரகாசமான ஒளி தோன்றியது. அதில் ஒருவர்,"எனது விசைப் படகு க‌ட‌லுக்கு அருகில் தான் இருக்கிற‌து. அதில் உட‌னே போக‌லாம்" என்று சொல்ல‌ உற்சாக‌மாக‌ சில‌ர் தீவு நிர்வாக‌ அதிகாரியுட‌ன் கிள‌ம்பின‌ர்.

ப‌த்துபேர்க‌ளுட‌ன் விசைப்ப‌ட‌கு காற்றைக் கிழித்துக்கொண்டு க‌ட‌லில் விரைந்த‌து. விசைப்ப‌ட‌கின் உச்சியில் வெள்ளைக்கொடி காற்றில் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்டிருந்த‌து.


கப்பலில் இருப்பவர்கள் கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான் தீவு நிர்வாக அதிகாரி வெள்ளைக்கொடியைப் பறக்க ஏற்பாடு செய்திருந்தார்.
உணவு மழைத் தீவு விசைப்ப‌டகுகள் டீசல், பெட்ரோலில் ஓடுபவை அல்ல; காற்றைச் சுவாசித்து ஓடும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீனப் படகுகள். டீச‌ல் தீர்ந்துவிட்ட‌து; அத‌னால் ப‌ட‌கு ந‌டுவ‌ழியில் நின்றுவிட்ட‌து என்ற‌ பேச்செல்லாம் இல்லை.
அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் எதுதான் சாத்திய‌ம் இல்லை?
க‌ல்லையும் க‌ல்லையும் உர‌சி தீப்பொறி உண்டாக்கிய‌ கால‌த்திலிருந்து எத்த‌னை எத்த‌னை வ‌ள‌ர்ச்சி? விய‌ப்பு.....விய‌ப்பாக‌த்தான் இருக்கிற‌து, ஒவ்வொன்றுமே!
படகு கப்பலை நெருங்க,நெருங்க க‌ப்ப‌ல் சிறிது சிறிதாக‌ பெரிதாகத் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. தீவு அதிகாரி க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி உத‌வி கேட்ப‌து? ம‌றுத்துவிட்டால‌ என்ன‌ செய்வ‌து? என்ற‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டு இருந்தார்.
தீவில் ஆயிர‌ம் வீடுக‌ள் என்றாலும் குழ‌ந்தைக‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் எல்லாம் சேர்த்து 4642 பேர்கள் இருக்கிறார்கள் என்று குடியிருப்புப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். ந‌ம்மிட‌ம் இருக்கும் ப‌ட‌குக‌ளோ 24தான்.

அதிக‌ப‌ட்ச‌ம் ப‌ட‌குக்கு 25 பேர்க‌ள் என்றாலும் கூட‌ சுமார் 500பேர்க‌ள் ம‌ட்டுமே போக‌ முடியும். க‌ப்ப‌ல் ச‌ர‌க்குக் க‌ப்ப‌ல் போல‌ இருக்கிற‌து. அப்ப‌டியே ந‌ம் நிலையை எண்ணி ஒத்துக்கொண்டாலும் நாலாயிர‌ம் பேரை ஏற்றிச்செல்ல‌ இய‌லுமா என்று தெரிய‌வில்லை, என்ற‌ நியாய‌மான‌ க‌வ‌லையை வெளிப்ப‌டுத்தினார் தீவு நிர்வாக‌ அதிகாரி.

அதே நேர‌த்தில் க‌ப்ப‌லிலிருந்து ஒலி ஒன்று கேட்க‌வே எல்லோரும் க‌ப்ப‌லைப் பார்க்க‌ க‌ப்ப‌ல் நின்ற‌ இட‌த்திலிருந்து மெல்ல‌ வேக‌ம் எடுத்துக் கிளம்பிய‌து.
எல்லோரும் அதிர்ச்சியோடு க‌ப்ப‌லைப் பார்த்த‌ன‌ர்.
இன்னும்பொழியும்.....!

Saturday, November 29, 2008

உணவு மழைத் தீவு - :14 :

கதிரவன் மெல்ல தன் கதிர்களை இதமாகப் படரவிட்டிருந்த இளங்காலை நேரம்; எலோருக்குமான விடிவுகாலமாக அந்த விடியலை எண்ணினார்கள். வானத்தையே இதுவரை நம்பியிருந்த உணவு மழைத் தீவு மக்கள் இப்போது முதன்முறையாக உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருந்தனர்.
தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை;தாம் பெற்ற பிள்ளைகள் பசியாற ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கவலையில் இருந்தனர். பெரியவர்கள் சிலர் கூடிநின்று கடலில் மீன் பிடிக்க முடியுமா? என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தீவின் நிர்வாக அதிகாரி அங்கே வந்து ஒரு செய்தியைச் சொன்னார். அது அவர்களுக்கு பசியாற்ற உதவும் செய்தியாக இருந்தது.



























"நாமும் நம் பிள்ளைகளும் பசியாற‌ கடல் அன்னை ஒரு வழி காட்டியிருக்கிறாள். நம் தீவுக்கு வழக்கமாக இந்த நேரத்தில் முட்டையிடுவதற்காக வரும் கடல் ஆமைகள் வரத் துவங்கியுள்ளது. நம் தேவைக்கு கடல் ஆமைகளைக் கொண்டுவந்து சமைத்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவோம்.












அதன் இரத்தம் சமைக்கலாம்; கறியும் உணவாகும். இதைப் பொறுப்பெடுத்து சிலர் சேர்ந்து செய்யுங்கள். நம்மில் சிலர் கடலைக் கடந்து பறவைத் தீவை அடைய நம்மிடம் சேதம் ஆகாத படகுகள் இருக்கிறதா? இல்லையானால் தீவில் உள்ள மரங்களை வெட்டி தெப்பம் போலச் செய்து பயணப்பட முடியுமா என்று பார்ப்போம்"என்று தீவு அதிகாரி சொன்னதும் கவலைகளால் வாடியிருந்த முகங்கள் கொஞ்சம் மலரத் துவங்கியது.


தீவு மீண்டும் சுறுசுறுப்பானது; கடல் ஆமைகளைக் கொண்டுவர சிலர் சென்றனர். சிலர் கடல் ஆமையை வைத்து பொது இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடுகளில் மூழ்கினர்.


இதே நேரத்தில் தீவு அதிகாரியுடன் படகுகளை ஒரு குழு சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பயன்படாது என்று பலபடகுகள் கழித்துக்கட்டப்பட்டது; தீவிலிருந்த வீடுகளில் கடைசியில் தேறியது 24 மோட்டார் படகுகள். சிறிது பழுது பார்த்தால் ஓடும் என்ற நிலையிலிருந்தது. தங்களிடம் உள்ள கருவிகளை வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.


பசியில் வாடியிருந்த சின்னஞ்சிறிசுகளுக்கும், வேலைசெய்து களைத்துப்போயிருந்த‌ பெரியவர்களுக்கும் ஆமை இரத்தமும் கறியும் பரிமாறப்பட்டது. பசியின் கோரப்படியிலிருந்தவர்களுக்கு உணவு தேவாமிர்த‌மாக உள்ளே போனது. வாடிவதங்கிய பயிருக்கு கொஞ்சம் நீர் ஊற்றினால் கொஞ்ச நேரத்தில் எப்படி செழித்து எழுந்து நிற்குமோ அப்படி எல்லோரும் உயிர் ஊறிய உணர்வில் தெம்பாகக் காணப்பட்டனர்.


ஒரு பெரிய‌ ப‌டையே துரித‌மாக‌ ப‌ட‌குக‌ளை செப்ப‌னிடும் ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌து. தீவின் நிர்வாக‌ அதிகாரியும் தீவின் முக்கிய‌பிர‌முக‌ர்க‌ளும் ப‌ற‌வைத் தீவைச் சென்ற‌டைவ‌து குறித்து விரிவான‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். அப்போது தீவைச் சேர்ந்த‌வ‌ர் அர‌க்க‌ப்ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தார். நேராக‌ தீவு அதிகாரியின் காதில் கிசுகிசுத்தார். சுற்றி இருந்த‌வ‌ர்க‌ளோ என்ன‌மோ ஏதோ என்று திகிலோடு நிர்வாக‌ அதிகாரியை நோக்கின‌ர்.

இன்னும்பொழியும்.....!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது