KathaiKathaiyaam

Wednesday, May 28, 2008

உணவு மழைத் தீவு : 10 :

உணவு மழைத் தீவு அடுத்த சில தினங்களில்
வழக்கமான தீவாக மாறியிருந்தது. தீவு மக்களும்
குழந்தைகளும் உற்சாகமாக உலா வந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட உணவு
மழைப் புயல் ஓய்ந்து உற்சாகமாக கடற்கரை
யோரங்களில் கூடி சந்தோசப் பொழுதுகளில் மூழ்கினர்.

உணவு மழைத் தீவில் அடுத்த மூன்று நாட்கள்
நன்றி நவிலல் விழா!

ஒவ்வொரு வருடமும் தங்களின் மூவேளை உணவை
எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்கும்
வானத்திற்கு நன்றி கூறும் விழா!

வானதேவனுக்கான விழாவாக‌ வானம் பார்த்து
முதல் நாள் விழா! மூன்று வேளையும்தங்கள்
உணவோடு தீவுத்திடலில் தீவு மக்கள்
அனைவரும் கூடி பாட்டுப்பாடி வானதேவனுக்கு
வணக்கம் செய்து உணவுண்பது வழக்கம்!

இந்த வருடமும் தீவு மக்கள் கூடிக் கொண்டாடினர்.
இரண்டாவது நாள் தீவு மக்கள் அனைவரும் கடற்
கரையில் கூடி பல்வேறு விளையாட்டு, படகு
செலுத்தும் போட்டி என்று அமர்க்களமாகக் கொண்டாடினர்.

மூன்றாவது நாள் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி
அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி
பரிசுகளை தீவின் மையத் திடலில் வழங்கினர்.
தீவின் நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி
நடந்தது.

தீவு நிர்வாக அதிகாரி ஒலிபெருக்கியில் புதிய நிர்வாக
அதிகாரியாக வர விரும்புபவர்கள்மேடைக்கு வரும்படி
கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.

நான் நீ என்று போட்டியிட ஒருவரும் இல்லை.
ஒரே ஒருவர் மட்டும் மேடை ஏறி,"நான் தீவு நிர்வாக
அதிகாரியாக வர விரும்புகிறேன்" என்றார்.

யாருக்காவ‌து ஆட்சேபனை உண்டா? என்று ப‌ழைய‌
நிர்வாக‌ அதிகாரி கேட்க‌, கூட்ட‌ம் இல்லையென்ற‌து.
உட‌னே அவ‌ர் நாளை முத‌ல் தீவின் நிர்வாக
அதிகாரியாக‌ ப‌த‌வி ஏற்பார் என்றார்.

தீவு மக்கள் தங்கள் இரவு உணவைச் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். திடீரென்று திரையில் சிவப்பு எழுத்துக்களில் அபாய அறிவிப்பு என்று வந்தபோது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எல்லோரின் கண்களும்

தொலைக்காட்சியில் நிலை குத்தி நின்றது.
இன்னும் பொழியும்....!

Monday, May 12, 2008

<<>>உணவு மழைத் தீவு! -8-<<>>

"இன்றிரவு 6:30 மணியிலிருந்து சூடாகவும்
சில மிதமான சூட்டிலும் இட்லிகளை
வானம் பொழியும்; அதனைத் தொடர்ந்து
இருநிமிடங்கள் தோசைகள் சிறிதாகவோ
அல்லது கொஞ்சம் பெரிதாகவோ
கைபொறுக்கும் சூட்டில் விழக்கூடும்!

சிறுவர் சிறுமியர் இவற்றிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்

கொள்ளப்படுகிறார்கள். தோசைகளைத்

தொடர்ந்து சாம்பார், சட்னிகள்

பொழியும்; ஒரு சில நிமிடங்கள்

சற்றுக் காரமான சாம்பார் சட்னியும்

மிதமான காரத்தில் தொடர்ந்து பெய்யக்கூடும்.


ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் பூரி, ஆப்பமும், உருளைக்கிழங்கு கறியும், தேங்காய்ப்பாலும் அங்குமிங்குமாக மிதமான வேகத்தில் பொழியக்கூடும் என்று வானிலை தெரிவிக்கிறது.

இன்றைக்கு காபி மட்டுமே கிடைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. டீ இன்று கிடைக்காது என்பது மேகக் கற்றைகள் நிற மாற்றத்திலிருந்து தெரியவருகிறது. தேனீர் நாளை காலை கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! தொடர்ந்து நாட்டு நடப்புச் செய்திகளை வானதேவன் வழங்குவார். உங்களிடமிருந்து விடைபெறுவது உணவுச் செய்தி அறிக்கையாளர் ருசிவாணன்!

ருசிவாண‌ன் அறிக்கையைக் கேட்ட‌ சிறுசுக‌ளுக்கு தாங்க‌ள் வெளியே போக‌ முடியாத‌ப‌டி ஆகிவிட்ட‌ க‌வ‌லையில் இருந்த‌ன‌ர். பெரிய‌வ‌ர்க‌ள் இர‌வு உண‌வைச் சேக‌ரிக்க‌ வெளியேசென்ற‌ன‌ர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெளிநாட்டு நிகழ்சியொன்றை வீட்டிலிருந்த சிறுவர் சிறுமியர் ரசித்துப் பார்த்தனர். விமானங்கள் வீர சாகசம் நிகழ்த்தியதைப் பார்த்து அதிசயித்தனர். உணவு மழைத் தீவில் விமானமே கிடையாது என்பதால் அது அவர்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. சாப்பிடப் போகும்வரை அதைப்பற்றியே பேசினர். விமானத்தில் பயணம் செய்தால் எப்ப‌டி இருக்கும் என்று பேசிக்கொண்ட‌ன‌ர்.



அன்று இரவு சாப்பாட்டை ருசித்து ரசித்துச் சாப்பிட்ட சிறுவர் சிறுமியர் சிறிது நேர அரட்டைகளுக்குப் பின் தூங்கிப் போயினர். விடிந்தால் அவர்களுக்கு வானம் ஒரு மோசமான செய்தியைச் சொல்லப்போவது தெரியாமல் தூங்கிப் போயினர்.


இன்னும் பொழியும்....!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது