KathaiKathaiyaam

Thursday, June 22, 2006

<>கிறிஸ்துமஸ் பரிசு-2<>

"ந்தி மழை பொழிகிறது;

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...."

சுகமான, மனதுக்கு இதமாக இருந்த பாடல் வரிகளைத்
திரும்பத் திரும்ப வின்சியின் உதடுகள் உச்சரித்துக்
கொண்டிருந்தது.

தெருமுனை டீக்கடையில் எப்போதோ கேட்ட
அந்தப் பாடலில் அவளுக்கு மிகப் பிடித்த வரிகளாகிப்
போனது இந்த வரிகள் மட்டுமே. பாடலின் மற்ற
வரிகளில் வின்சிக்கு ஈர்ப்பு இல்லை.

இன்றைக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
மனதுக்குள் அசை போட்டுக்கொண்டாள்.

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது... என்ற
வரிகளோடு அவளுக்குள் கிளர்ந்தெழும் அந்த உருவத்தோடு ஐக்கியப்பட்டுப் போவாள்.

அந்த உருவத்தோடு அப்படி என்ன ரகசியம் பேசுவாளோ
தெரியாது. அவள் சுய உணர்வுக்குத் திரும்பும் போது இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்தது போன்ற வெளிச்சம் முகமெங்கும் நம்பிக்கைக் கீற்றுகள் முற்றுகையிட்டிருக்கும்.

அன்றும் அப்படித்தான் தெருமுனை டீக்கடையில்
அந்தப் பாடலைக் கேட்டதும் அவளின் ஐம்புலன்களில்
ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் இயங்குவதை நிறுத்திக்
கொண்டன.

அந்தப் பாடல் அவளுக்குள் ஏற்படுத்திய உற்சாகப் பீறிடல்
மழையில் நனைந்து தன்னை மறந்திருந்தபோதுதான் திடீரென
மயங்கிச் சரிந்தாள்.

அடாடா... யாரது? என்ற குரல்களைத் தொடர்ந்து விழுந்து
கிடந்த வின்சியைச் சுற்றி ஒரு கூட்டம் கூடி விட்டது.

"அடடே, நம்ம அமலோட மக, தள்ளுங்க, தள்ளுங்க..."

"அமல் வீட்டுக்கு யாராவது போய் தகவல் சொல்லுங்கப்பா..."

"ஏங்காணும், அமல் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரு வந்து... நானே தூக்கிக் கொண்டு போறேங்கே..." என்று விசுவாசம் சொல்ல அந்த நேரம் அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.

அந்த ஜீப் அந்தக் கிராமத்தில் இயங்கிவரும் "ரியல்" என்ற
சமூக சேவை நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்தச் சமூக
சேவை நிறுவனம் சுத்துப் பட்டிக் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக நடத்தும் சுகாதார மையங்களைப்
பார்வையிட கனடா நாட்டிலிருந்து வந்திருந்த வெள்ளைகார
டாக்டர் ஜோவும் "ரியல்" நிர்வாக இயக்குனர் பீட்டரும் தான் ஜீப்பிலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தனர்.


அந்தக் கூட்டத்திலிருந்த ஊர் நாட்டாமை சுந்தரம் தான்
சொன்னார். "பீட்டர் ஸார், நல்ல நேரத்துல வந்தீங்க,
நம்ம அமலு மக கடைக்கு வந்தது திடீர்னு மயங்கி
விழுந்துருச்சு. ஒங்க கூட வந்துருக்குற வெள்ளைக்கார
டாக்டரைக் கொஞ்சம் பாக்கச் சொல்லுங்கன்னார்,
சற்றே பதற்றத்துடன்"

பீட்டர், டாக்டரிடம் விபரத்தைச் சொல்ல, அவரும்
நிலைமையைப் புரிந்துகொண்டு, ஜீப்பிலிருந்த தன்
"கிட்டை" எடுத்து வந்து வின்சியை அங்கேயே பரிசோதிக்க ஆரம்பித்தார்.

மயக்கம் தெளிய ஊசியும் போட்டார். சிறிது நேரத்தில் வின்சி
எழுந்து உட்கார்ந்து மலங்க மலங்க விழிக்கவும், வின்சியின்
அப்பாவும் அம்மாவும் கண்ணீரும் கம்பலையுமாக அங்கே
வந்து சேரச் சரியாக இருந்தது.

ரியல் சுகாதார மையத்துக்கு வின்சியைக் கொண்டு
சென்று மேலும் சில பரிசோதனைகளைச் செய்த டாக்டர்
ஜோ சொன்ன தகவல் வின்சியின் பெற்றோரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது. பெயர் தெரியாத ஒரு வியாதியைச்
சொல்லி உடனே டவுன்ல உள்ள ஆஸ்பத்திரியில கொண்டு போய்ச் சேர்க்கணும்ன்னு சொல்லீட்டார்.

வின்சியின் அப்பா, சாதாரண பஞ்சாயத்து குமாஸ்தா. அவரால்
டாக்டர் சொல்ற மாதிரி டவுன்ல உள்ளபெரிய மருத்துவமனையில் சேர்த்து கவனிக்க முடியாது.

வின்சியின் குடும்பச் சூழ்நிலையைக் கேள்விப்பட்ட அந்த வெள்ளைக்கார டாக்டரே மருத்துவச் செலவு முழுக்க நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று வின்சியை சென்னையிலுள்ள ஏழடுக்கு மாடி மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டார்.

வின்சி படுத்துக்கொண்டே அந்த அறையை நோட்டம் விடுகிறாள்.
நேர் எதிரேயுள்ள சுவற்றில் ஒரு சிலுவை. பக்கம் பக்கமாக இந்து, முஸ்லிம் மதச் சின்னங்கள். திறந்திருந்த ஜன்னலின் பாதி வரை மறைத்துப் போடப்பட்டிருந்த திரைச் சீலை.

திரைச் சீலையைத் தாண்டித் தெரியும் நீல வானம்; இதை வைத்து
ஒரு கவிதை புனைந்திட வேண்டுமே...என்று எண்ணியவளின்
பார்வை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா லூசி தென்பட அவளின் கவிதா
ஆராய்ச்சியும் அறுந்து போகிறது.

" என்னம்மா, ஏதும் வேணுமா? என்ற அம்மாவின் கரிசனத்திற்கு
பதிலாக தலை அசைத்து ஒன்றும் வேண்டாம்மா, நாம எப்ப
வீட்டுக்குப் போவோம்? நான் நல்லாத் தான இருக்கேன்," என்று
வின்சி கேட்டபோது, " நல்லாத்தாம்மா இருக்க, டாக்டர்
போலாம்ன்னு சொன்னா அடுத்த நிமிசமே வீட்டுக்குப்
போயிறலாம்," என்று மகளுக்கு ஆறுதலாச் சொல்லி
வின்சியின் முன் நெற்றியில் படர்ந்திருந்த முடிக்கற்றைகளை பக்குவமாக லூசி ஒதுக்கினாள்.

" அப்பா இன்னிக்கு வர்றதா சொன்னாங்கள்ல, வந்ததும் டாக்டர்கிட்ட கேக்கச் சொல்லுங்கம்மா. கிறிஸ்மஸ் வரப் போகுது, நாம ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தா எப்டிம்மா? என்று மீண்டும் வின்சி விடாப்பிடியாக் கேக்கவே, " சரி கேக்கச் சொல்றேம்மா " என்று லூசி சொன்னதில் திருப்திப் படாமல் வின்சி கண்களை மூடிக் கொண்டாள்.

தலைப் பக்கம் இருந்த மேஜையில் வைத்திருந்த பூங்கொத்திலிருந்த வாசம் வின்சியின் நாசியைத் தொட்டது. அந்த மகரந்த மலர்களின் நறுமணம், மருத்துவமனைக்கே உள்ள மருந்து நெடிக்குக் கூட கவசமிட்டிருக்க வேண்டும்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது; நாளும் ஒரு பரிசோதனை, நாளும் தினுசுதினுசான சிறிதும் பெரிதுமான மாத்திரைகள், வண்ணங்களில் திரவ மருந்துகள், மாற்றி மாற்றி உடம்பைத் துளையிடும் ஊசிகள் என்று பொழுது மறைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வின்சியின் அப்பாவும் வந்தார்.

வந்த அன்றே ஊருக்குப் போக வேண்டும் என்று வந்தவர் நாலைந்து நாளாக அவரும் ஊருக்குப் போகாமல் இங்கேயே இருக்கிறார். அம்மாவும் அப்பாவும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அப்படி என்ன பேசுகிறார்கள்? வின்சிக்கு விடை தெரியவில்லை. அப்படியே எண்ணிக் கொண்டு தூங்கியும் போனாள்.

திடீரென்று மருத்துவமனை பரப்ரப்பானது. மருத்துவர்களும் செவிலியர்களும் குறுக்கும்நெடுக்குமாக ஓடினர். என்ன ஏது என்று விசாரித்துவிட்டு வந்த அமல், லூசியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
"எதோ, ஆக்சிடெண்ட்டாம். சின்னப்பையன் தலையில் பலத்த அடியாம். கொண்டாந்துருக்காங்க."

"அடப் பாவமே! ரெம்பச் சின்னப்பையனா?"

"நம்ம வின்சி வயசிருக்கும். ஒரே பையனாம்; அப்பா வேற
இல்லையாம். அந்தம்மா அழுதழுது மயங்கி விழுந்துட்டாங்க.
அது சரி..வின்சி தூங்கி ரெம்ப நேரமாச்சா?"

"ம்... அது அப்பாவை எங்க காணோம்? வீட்டுக்குப் போகணுமேன்னு படுத்தி எடுத்துட்டு இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சது."

"இனிமே நான் எங்கயும் போகல. தகவல் சொல்ல வேண்டிய
வங்களுக்கு எல்லாம் சொல்லீட்டேன். ஒலகத்துல யாருக்கும்
இந்த மாதிரி ஒரு சோதனை வரப்படாது.

" அமலின் கண்கள் கண்ணீரைச் சிந்த கைக்குட்டையை வாயில் வைத்து மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.

லூசியும் அமலோடு சேர்ந்து அழத்துவங்க.... தற்செயலாய் உள்ளே
வந்த நர்ஸ்...."என்ன நீங்க அந்தப்பெண்ணை கொஞ்சம் நிம்மதியா தூங்க விடமாட்டீங்க போலிருக்கே" என்று சொல்ல

"சிஸ்ட்டர்... எப்படிங்க சிஸ்ட்டர்....?" என்று விம்மத் துவங்கியவரை நர்ஸ், தணிந்த குரலில் சமாதானப்படுத்தி அறைக்கு வெளியே இருந்த பெஞ்சில் கொண்டு வந்து உட்கார வைத்தார்.

மறுநாள் மாலை மருத்துவர் குழு ஒன்று வின்சியை சோதித்துப் பார்த்தது. பின்னர் வின்சியின் அப்பாவை தனியே அழைத்துப்
போய்," நீங்க வின்சியை வீட்டுக்கு கூட்டீட்டுப் போயிறலாம்.

ஸாரி....எங்களால முடிஞ்சதை எல்லாம் செஞ்சுட்டோம். இன்னும் எட்டுல இருந்து 12மணி நேரம் வரைதான் உயிர் தங்கும்..."
"டாக்டர்.... என்று அமல் பெருங்குரலெடுத்து அழ டாக்டர்,
" மனசைத் தைரியப்படுத்திக்கங்க...இப்பவே வீட்டுக்கு கொண்டு போனீங்கன்னா உங்க நெருங்கிய சொந்தபந்தம் பாக்கக் கொள்ள வசதியா இருக்கும். அதான் சொன்னேன். எல்லாம் முடியிற
வரை இங்க வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.

"வெள்ளைக்கார டாக்டர் காப்பாத்தீரலாம்ன்னு தைரியம் சொன்னாருங்களே? இப்ப நீங்க ஒரேயடியா இப்டிச் சொல்றீங்க. கடைசிவரை இங்கயே வச்சுப்பார்க்கலாம் டாக்டர். வின்சிக்கு நாம சாகப்போறோம்கிற விசயம் கடைசிவரை தெரிய வேண்டாம்ன்னு நெனைக்கிறேன்.

ஊருக்கு கொண்டு போனா எப்படியாச்சும் நாலு பேர் வந்து பேச அழன்னு அவளுக்குத் தெரிஞ்சு போயிரும். அந்தப் பிஞ்சுக்கு கடைசிவரை தெரியக்கூடாதுன்னுதான்.....இங்கயே இருக்கட்டும்ன்னு சொல்றோம்....நாளை விடிஞ்சா கிறிஸ்மஸ்...நல்லதோ கெட்டதோ...அது இங்கயே நடக்கட்டும்...டாக்டர்...." கண்ணீர் வழிய அமல் கெஞ்சும் குரலில் சொன்னார்.

"எங்க கையை மீறுன விசயமாயிருச்சுங்களே! பில்லு செட்டில்மெண்ட் பத்திக் கவலைப்படாதீங்க. அந்த டாக்டர் பிளாங்க் செக் குடுத்திருக்கார். நீங்க உங்க சம்சாரத்துக்கிட்ட பேசீட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க...சரியா..என்று சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.

வின்சிக்கு இரவுச் சாப்பாட்டைக் கொடுத்துக்கொண்டே
"நீங்க மத்தியானமே சாப்பிடல...எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்களேன்..." லூசி அமலிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது உள்ளே நுழைந்த நர்ஸ்...சாப்பாடு ஆகுதா....ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு இந்த மாத்திரையை வின்சிக்கு குடுத்துருங்க என்றார்.

"நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு மாத்திரையெல்லாம் வேண்டாம் சிஸ்ட்டர்"

"அப்டி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த மாத்திரையை சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்."

"நான் குடுத்துர்றேன் சிஸ்டர்....அந்த ஆக்சிடெண்ட் பையன் எப்படி இருக்கான் சிஸ்டர்?"

"பாவம் கண் பார்வை போயிருச்சு.... யாராவது கண்தானம் செஞ்சாத்தான் அந்தப் பையனுக்கு இனி பார்வை....!?"

"அடப்பாவமே...!"


"வயாசாகி இப்டி ஏதாச்சும் ஆயிருந்தாப் பரவாயில்ல...அந்த எளம் குருத்துக்கு இப்டி ஒரு சோதனை! ம்ம்ம்...எல்லாம் விதிம்மா...விதி..." என்று நர்ஸ் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.


"அப்பா....எனக்கு அந்தப் பையனைப் பாக்கணும் போல இருக்கு. கூட்டீட்டுப் போறீங்களா?"

"டாக்டர்கிட்ட கேட்டுகிட்டுத்தான் கூட்டீட்டுப் போகணும்."
அதற்குள் அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவரை
டாக்டர் ஸார்....என்று வின்சி கூப்பிட அவரும்

"என்ன வின்சி என்றவாறே வந்தார். வின்சியின் அப்பா
விசயத்தைச் சொல்ல....."ஓ!...தாராளமா பாக்கலாம் வா... நானே அழைச்சுட்டுப்போறேன்" என்று கூட்டிப் போனார்.


தலையிலும் கண்களிலும் கட்டோடு படுத்திருந்த அந்தச் சிறுவனைப் பார்த்தாள் சிறிது நேரம் இமைக்காமல். சிறுவனின் தாயார் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தார்.

"அழாதீங்க...ஒங்க மகனுக்கு ஒன்னும் ஆகாது..." என்றாள்
வின்சி பெரிய மனுசி போல.

"எம்புள்ள இனிமே என்னைப் பாக்க முடியாதாமே? பச்சைப்புள்ள கண்ணை ஆண்டவன் அநியாயமா பறிச்சுக்கிட்டானேம்மா. அழாம என்ன செய்யிறதும்மா?"

"கவலைப்படாதீங்க எந்த ஆண்டவர் அநியாயமா கண்ணை எடுத்தாரோ அந்த ஆண்டவரே ஒங்க மகனுக்கு கண்ணைக் குடுப்பார்"

"எந்தங்கம்...என் இராசாத்தி...ஒன்னோட வாய் வார்த்தை அப்படியே பலிக்கட்டும்."

"ஒங்க மகன் பேர் என்ன?"

"எம்மவன் பேரு ஆறுமுவம்ம்மா..!"

"டாக்டர் அங்கிள்.....நீங்களே சொல்லுங்க ஆறுமுகத்துக்கு என்னோட கண் ரெண்டையும் நான் குடுக்கலாமில்ல...?"

"அது வந்து....நீ...." டாக்டர் குழப்பமாக வின்சியின் அப்பாவைப் பார்க்க... அதிர்ச்சியில் அவரோ திகைத்து நிற்க....

"சொல்லுங்க டாக்டர்....என்னோட கண்ணை நா குடுக்கலாமா? கூடாதா?
இல்லம்மா...உயிரோட இருக்கிறவங்க கண்ணை எடுத்து வைக்க முடியாது. இறந்தவங்ககிட்ட இருந்து கண்ண எடுக்க அனுமதி வாங்கி ஆறுமுகத்துக்கு பொருத்த முடியும்....அத..."

"அய்யோ...டாக்டர் அங்கிள் எறந்தவங்ககிட்ட போய் ஒங்க கண்னைக் குடுங்கன்னு கேப்பீங்களா? நானே, இன்னைக்கோ, நாளைக்கோ சாகப்போறேன். எங் கண்ணை ஆறுமுகத்துக்கு எடுத்து வச்சிருங்க. என்னோட "கிறிஸ்மஸ் பரிசா" ஆறுமுகத்துக்கு குடுத்ததாச் சொல்லுங்க..."

"வின்சி.... என்று அமல் கதறியதில் அந்த மருத்துவமனையே செவிடாகி இருக்க வேண்டும்.

"ஏம்ப்பா அழறீங்க? நாஞ் சாகப்போறதை எங்கிட்டச் சொன்னா நான் அழுவேன்னுதான நீங்க எங்கிட்ட சொல்லாம, நாந் தூங்கினப்புறமா அம்மாவும் நீங்களுமா அழுதீங்க இல்லையா? ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் நான் ஒங்ககிட்ட பரிசு கேப்பேன்?
இந்தக் கிறிஸ்மசுக்கு நானே பரிசு கொடுக்கப்போறேன்.

நா, செத்தாலும் என்னோட கிறிஸ்மஸ் பரிசு உயிரோட இருந்து உங்களைப் பாக்குமே! என்னைப் பாக்கத் தோணும்போது நீங்க ஆறுமுகத்தைப் போய் பாத்துக்கங்க...சரியா? என்னம்மா..சரின்னு சொல்லுங்க.....பேசிக்கொண்டே இருந்தவள் மயங்கிச் சரிந்தாள்.

வின்சி கண்களைத் திறக்கவே இல்லை.

ஆறுமுகம் கண்களைத் திறக்கிறான் வின்சியின் கிறிஸ்மஸ்
பரிசு ஒளி வீசுகிறது!

வின்சி படுத்திருந்த படுக்கையின் தலையணை அடியிலிருந்து
வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒரு காகிதம் தென்பட
மருத்துவமனை ஊழியர் எடுக்கிறார்.

பெரியவர்களுக்குப் புரியாத அவளுக்குப் புரிந்த ஒரு கவிதையை எழுதியிருந்தாள்.

எனக்குப் புரியவில்லை...என்ற தலைப்பில் ஒரு கவிதை இருந்தது.

எனக்குப் புரியவில்லை....!

"படிப்பது இராமாயணம்

இடிப்பதுபெருமாள் கோயில்"

என்ற சொல்வழக்குஏன் வந்தது?

- எனக்குப் புரியவில்லை!?

"படித்தது இராமாயணம்

இடித்ததுபாபர் மசூதி"

என்று மாறியது ஏன்?

- எனக்குப் புரியவில்லை!?

கொலை செய்;பந்த் நடத்து;

பஸ்ஸைக் கொளுத்து;

பிறரைத் துன்புறுத்து;

என்று போதித்தது

எந்த மதம்?

- எனக்குப் புரியவில்லை!?

வேதங்கள் சொல்லாததை,

மதங்கள்போதிக்காததை,

ஆலயங்கள்அறிவிக்காததை

செய்யத் துணிவு வந்தது

யாரால்? எங்கிருந்து?

- எனக்குப் புரியவில்லை!?

நல்லதையே சிந்தியுங்கள்...
நல்லதையே செய்யுங்கள்...

இதைத்தானே

இயேசு பிரசங்கித்தார்;

புத்தர் போதித்தார்;

நபிகள் நவின்றார்;

காந்தி சொன்னார்.
இவர்கள்தெளிவாய்ச் சொன்னது

மட்டும் ஏன்

எவருக்குமே புரியாமல் போனது?

- எனக்குப் புரியவில்லை!? -வின்சி அமல்.

வின்சியின் கவிதை கூட இந்தக் கிறிஸ்மசுக்கு
ஒரு பரிசுதான் என்று சொல்லிய ஊழியரின்
கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு சிதறியது.
வின்சிக்குப் புரிந்தது பல பெரியவங்களுக்குப் புரிஞ்சா சாதியாவது...மதமாவது?

<>கிறிஸ்துமஸ் பரிசு!<>

லிசாவின் கைகளில் கற்றையாக இருந்த

பேப்பர்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க

மனசு மட்டும், மனம் போன போக்கில் எங்கெங்கோ
சுற்றியலைந்து கொண்டிருந்தது.

அவளின் கனவுலக சஞ்சரிப்புகளுக்கு அவள் பிரியமாக
வளர்க்கும் 'மிரியம்' முற்றுப்புள்ளி வைத்தது. எங்கிருந்தோ
ஓடிவந்த மிரியம் அவள் மடியில் 'தொப்'பென விழுந்ததுதான்
காரணம்.

கைகளிலிருந்த பேப்பர்களை அருகிலிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு மிரியத்தை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள்
லிசா. தொலைபேசியின் 'கிணுகிணு'ப்புச் சத்தம் கேட்கவே
மிரியத்தை கீழிறக்கிவிட்டுவிட்டு தொலைபேசியை
நோக்கிப் போனாள்.

லிசாவின் தங்கை மகள் 'ஏரின்' தான் பேசினாள்.

"ஆண்ட்டி எனக்கு கிறிஸ்மஸ் பரிசா ஒரு புக் வாங்கித்
தரவேண்டும்?"

"அப்படியா, என்னவிலை?"

"தர்ட்டி பக்ஸ்..."

"அவ்வளவுதானே, விடு கவலையை வாங்கித்தர்றேன்."

ஏரினிடம் பேசிவிட்டு வந்த லிசா, மீண்டும் வைத்த
பேபர்களை எடுத்துப் பார்வையை ஓடவிட்டாள்.

ஏழாவதாக இருந்த அந்த பேப்பர் ஏற்படுத்திய பாதிப்பு
மறுபடியும் லிசாவைச் சூழ்ந்து கொண்டது. மனது மீண்டும் யுத்தகளமாகிப் போனது.

"இவங்கெல்லாம் என்னை என்னன்ணு நெனைக்கிறாங்க?
லிசா ஒரு மனி மேக்கிங் மெஷின்னு நெனைக்கிறாங்களா?
இருந்தாலும் ரோசிக்கு இவ்வளவு ஆசை கூடாது.

உறவுகளை நினைத்து ஒரு கணம் வெறுத்துத்தான் போனாள், லிசா.
அவளின் கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.

பொதுவா கிறிஸ்துமஸ¤க்கு, " எங்களுக்கு இதெல்லாம் தேவையான பொருள்கள், நீங்கள் வசதிப்பட்டதை அல்லது அனைத்தையும் வாங்கிக் கொடுக்கலாம்," என்று ஒரு லிஸ்ட்டை கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும், சேவை மையங்கள், சர்ச்சுகளிலிருந்தும் வரும்.

இப்படி பொருள்கள் கோரி வந்த பட்டியல்களைத் தான் லிசா பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசித் தங்கை ரோசியிடமிருந்து வந்த கோரிக்கைப் பட்டியலில் ஒரே ஒரு கோரிக்கைதான் இஇருந்தது. என் காரை நிறுத்த ஒரு கராஜ் தேவை.

உத்தேச மதிப்பீடு என அடைப்புக் குறிக்குள் "பத்தாயிரம் டாலர்" கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. இதுதான் லிசாவிற்குள் யுத்தம் மூளக் காரணமாய் இருந்தது.


தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருக்கும் லிசா திருமணம் என்று தன்னை கட்டிப்போட்டுக் கொள்ளவில்லை நாற்பத்தி ஐந்து வயது ஆனாலும் முப்பது வயதே மதிக்கத்தக்க தோற்றம். சொந்த வீடு, கார், நல்லவேலை இதைவிட வேறு என்ன வேண்டும்? போதும் போததற்கு அப்பா இறந்ததும் லிசாவின் பங்கிற்கு அப்பாவின் கிராமத்துப் பண்ணை வீடு, கொஞ்சம் நிலம் எல்லாம் அவளை வசதியின் விளிம்புகளில் தூக்கி வைத்திருந்தது.

லிசாவின் இரண்டு அண்ணன்களும் இரண்டு தங்கைகளும், ஒரு அக்காவும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள். அனாலும் லிசாவிடம், அது வேண்டும் இது வேண்டும் என்று அக்காவும் தங்கைகளும் பிச்சுப்பிடுங்கி எடுத்துவிடுவார்கள். லிசாவும் மனம் சலிக்காமல் செய்வாள்.

வருடாவருடம் கிறிஸ்மஸ¤க்கு மட்டும் பத்து முதல் பதினைந்தாயிரம் டாலர்கள் வரை செலவு செய்வாள். நெருங்கிய, தூரத்து உறவுகள் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திருப்திப்படுத்துவாள்.

இந்த முறை கிறிஸ்மஸ¤க்கு இருபதாயிரம் டாலர் தேவைப்படும் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் தங்கை ரோஸியின் கோரிக்கை, திடீரென உறவுகளின் மீது ஒரு வெறுப்பு நெருப்பை லிசாவிற்குள் உற்பத்திசெய்தது;

இன்னும் கிறிஸ்மஸ¤க்கு எத்தனை நாள் இருக்கிறது?
லிசாவின் மனம் கணக்குப் போட்டது. பதினாறு நாட்கள்.
இப்படிச் செய்தால் என்ன? அவளின் மூளையில் மின்னல்
கீற்றாக அந்த எண்ணம் உதித்தது.

எத்தனையோ வருடங்கள் ஒத்திப்போட்ட விஷயம். அதை செயல் படுத்தினால் என்ன? லிசாவின் மனம் "விசா" இல்லாமல் கண்டம்
விட்டு கண்டம் தாண்டிப் பயணப்பட்டது;

லண்டனில் வில்லியம்ஸ் குடும்பத்தாரோடு சிறிது நாளும் ஆஸ்திரேலியாவில் மேக்கி வீட்டிலும் அப்படியே சென்னையில்
அமலி வீட்டுக்கும் விசிட் அடித்தால் என்ன?! மேக்கி என்னைக்
கண்டு விட்டுவிடுவாளா, என்ன?

மெல்பெர்னில் உள்ள அவளின் 'கார்டன் ஹவுஸ்' ஓ! மை காட்.... நினைத்தாலே இனிக்கிறதே...! அமலி மட்டும் என்ன?

வா,வாவென்று சொல்லி அலுத்தல்லவா போய்விட்டாள்.
" என் சொந்த ஊரான கடற்கரை கிராமத்திற்கு கூட்டிப் போவேன். அங்குள்ள தென்னந்தோப்பில் பொழுதை இனிமையாகக் களிக்கலாம். எங்க கடற்கரையழகினை ஒரு முறை ரசித்துவிட்டால்

·ப்ளோரிடா கடற்கரைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்" என வரிந்து,வரிந்து எழுதியிருந்தாளே! அந்த ஊர் பெயர்கூட கன்...குமாரி... ஓ! ஐ ஆம் ஸாரி...கேப்காமரீனா? எதோ ஒன்று.

இந்தவருடம் கிறிஸ்மஸ், " எனக்கே ...எனக்குத்தான்.

" அவளுள் உற்சாகம் கொப்பளித்தது; சந்தோசிப்புகளில் அவள் மனம் பொங்கிப் பிரவகித்தது. கண்களை மூடிக்கொண்டு கற்பனை உலா போவதில்கூட எவ்வளவு இனிமை?

அப்படியே அந்தப்பொழுதுகளில் மனம் லேசாகி...லேசாகி இலவம் பஞ்சாய் பறந்து போவது நிரந்தரமாகிடாதா? என்ற ஏக்கம் அவளுள் ஒட்டிக் கொண்டது.

கிறிஸ்மஸ் பரிசுப் பொருள்கள் கோரிவந்த கடிதங்களில் சேவைச் சங்கங்களிடமிருந்து வந்ததை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மற்றவற்றை மடித்துச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டாள்.

அட... ஏரின் ரொம்ப ஆசையா புத்தகம்கேட்டாளே... என்று உள் மனம் நினைவு கூர்ந்தது. கூடவே அடி மனம் ஒரு அதட்டல் போட்டது.
" நோ... நோ... இந்த வருடம் கிறிஸ்மஸ் ஷேரிங்...கேரிங்... எதுவும் கிடையாது." -லிசாவிற்குள் வலிய ஒரு இரும்புத்திரை இறங்கி வாரி வழங்கும் எண்ணக் குவியலுக்கு வணக்கம் சொன்னது.

மெல்லிய பட்டுத்திரையொன்று பூங்காற்றாய் விலகி புத்துலகப் பயணத்துக்கு பூபாளம் சொன்னது.

வணக்கம்... வந்தனம் அவளுக்குள் மிசிசிப்பி நதி போல ஜில்லிப்பாக பாய சிலிர்த்துக்கொண்டாள்.

மறுநாள், மளமளவென புறப்படுகைக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டாள். லண்டன், ஆஸ்திரேலியா, சென்னை என தொடர்பு கொண்டு தனது வருகை குறித்துத் தெரிவித்தாள். சந்தோச நதியின் இரு கரைகளிலும் ஆனந்த அலைகள் ஆரவாரித்தது; லிசாவுக்குள் இவ்வளவு குதூகலமா?! அவள் முகம்தான் எப்படி ஜொலிக்கிறது! என்ன விஷேசம்? என அலுவலகத்தில் ஆளாளுக்குத் துளைத்து எடுத்தனர். எல்லாருக்கும் புன்முறுவலைப் பதிலாகத் தந்து நழுவினாள்.

நாளை மாலை விமானத்தில் நியூயார்க் வழியாக லண்டன் புறப்படவேண்டும். உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ இது பற்றி
மூச்சு காட்டவில்லை; அலுவலகத்தில் நெருங்கிய ஒரு சிலரைத்
தவிர மற்றவர்களுக்கு மூன்று மாத விடுப்பில் செல்வது மட்டும்
தான் தெரியும்.

பிரயாணத்துக்கு தேவையான ஒன்றிரண்டை வாங்கிக் கொள்ளலாம் என "டார்கெட்" டில் நுழைந்தாள்.

ஒரே கூட்டம். எள் போட்டால் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு கூட்டம். கிறிஸ்மஸ் நெருங்க, நெருங்க இப்படித்தான்
கூட்டம் அலைமோதும். கையிருப்பைத் தீர்க்க நாளுக்கு நாள் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், எதை எவ்வளவு விலையில் வாங்கினாலும் இன்னொன்றை 99சென்ட்டிற்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புகள்தான் மக்களை கடைகடையாய் அள்ளிச் சேர்க்கிறது;

லிசா தேவையானதை எடுத்துக்கொண்டு கவுண்ட்டர் பக்கம் வந்தாள். பத்து, இருபது கவுண்ட்டர்கள் இருந்தும் நீண்ட இரயில் வண்டி போல மக்கள் கியூ நின்றிருந்தது. லிசா ஐந்து பொருட்களும் அதற்கு குறைவான பொருட்களும் என்றிருந்த அறிவிப்புக் கவுண்ட்டர் வரிசையில் பொறுமையாக காத்திருந்தாள்.

" வீட்டுக்குப் போய் முதலில் குளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த அலுப்பு போகும். நாளை இஇந் நேரம் கற்றை, கற்றையான மேகக் கூட்டங்களில் நுழைந்து நம் விமானம் பயணித்துக் கொண்டிருக்கும். வில்லியம் வழிமேல் விழி வைத்து 'ஹீத்ரூ' வில் தன் பரிவாரங்களோடு காத்திருப்பார். கலவையாக எண்ணங்கள் மனத்திரையில் மாறி, மாறி ஓடிக்கொண்டிருந்தது.

" அட... ஏரின் கேட்ட அந்தப் புத்தகம். " 'சேல்' அட்டைக்கு கீழிருந்ததை லிசா கவனித்துவிட்டாள். சட்டென்று அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள். கிரடிட் கார்டைக் கொடுத்து கணக்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது, தலைவலி மண்டையை இரண்டாகப் பிளப்பது போல இருந்தது, லிசாவுக்கு.

காரை எடுத்துக்கொண்டு வீட்டில் போய் விழுந்தால் போதும்
என 70, 80 என ஒரே விரட்டாக விரட்டிப்போனாள். நல்லவேளையாக போலீஸ் கார் எதுவும் தட்டுப்படவில்லை. தட்டுப்பட்டிருந்தால் காரின் வண்ணவண்ண விளக்குகளை போட்டுக் காண்பித்து ஏழெட்டுப் பாய்ண்ட்டாவது வர்ற மாதிரி டிக்கட் போட்டிருக்கக் கூடும்;

வாஷிங்டன் அவென்யூவில் சிக்னலுக்காக நிறுத்திக் காரைக் கிளப்பிய நொடிப் பொழுதில், " ஓ!காட்!.." என்ற அலறலுடன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள். கார் முன்பாக, தலை குப்புற சிறுமி ஒருத்தி கிடந்தாள்.

ஓ...மை ஜீசஸ்!?... லிசா சிறுமியைப் புரட்டித் தூக்கினாள்.

"ஐ'ம் டெட்... டெட்..." என்று கண்களை இறுக மூடிக் கொண்டே சொன்ன சிறுமியிடம், நீ நல்லா இருக்கே...கண்ணைத் திறந்து
என்னைப் பார்" என்றாள்.

"இல்ல... நான் செத்துட்டேன்...ம்ம்...ம்ம்... நான் செத்துட்டேன்..." என்றாள் சிறுமி அழுது கொண்டே.

" கண்ணைத் தெறந்து பார்... நீ சாகல... நல்லா இருக்க. வா, மெக்டனால்டுல எதாவது சாப்பிடலாம்," என்றாள் லிசா.

" ஐயோ... நான் சாகலையா? அப்ப என்னை சாகடிச்சுருங்க..." என்று விசும்பி, விசும்பி அந்தப் பிஞ்சு அழத் துவங்க லிசாவால் சமாதானப்படுத்த இயலவில்லை. அவளுக்கோ ஏற்கனவே
தலைவலி. "நீ சாக என் கார்தானா கெடச்சுது. சரியான சாவுகிராக்கி," என்று லிசாவால் அந்தச் சிறுமியை ஓரம் கட்டிவிட்டுச் செல்ல முடியவில்லை.

ஒருவழியாக அவள் விருப்பத்தை பூர்த்தி செய்வதாகச் சொல்லி
காரின் பின்சீட்டில் படுக்கவைத்து வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

சிறுமிக்கு ஜூஸ் கொடுத்து," உன் பெயர் என்ன? " என்று கேட்டாள்.

ஜூஸை வாங்க மறுத்ததோடு, "நான் சாகணும்... நான் சாகணும்," என திருப்பி,திருப்பிச் சொல்லி அழுதாள்.

"இது என்ன சோதனை? எனக்கு ஏன் இப்படி நிகழுகிறது?

ஓ! இயேசு பாலனே!" என்று குடிலில் இருந்த இயேசு பாலகனை
நோக்கி ஒரு நொடிப் பொழுது கண்களை மூடித் தியானித்தாள்.

"தாகத்தால் தவிப்பவனுக்கு தாகம் தீர உதவு; உண்ண உணவில்லாதவனுக்கு உணவு கொடு; உடுக்க உடையில்லாதவனுக்கு உடைகொடு; உண்மையில் நீ அவர்களுக்குச் செய்வது எனக்கே செய்தது போல" என்று குழந்தை யேசு சொல்லிச் சிரிப்பது போல லிசாவுக்குப் புலப்பட்டது.


"ஓகே! நீ சாகணும். அவ்வளவுதானே. நானே ஏற்பாடு பண்றேன்.
அதுக்கு முன்னால நீ, ஏன்? எதுக்காக சாகணும்? எனக்குச் சொல்.
நான், நீ சாக ஏற்பாடு பண்றேன். சரியா?" என்றாள்.

"என் அப்பா சாகறதுக்கு முன்னால நான் செத்துப் போகணும். அதான்..."

"ஏன், உன் அப்பா சாகவேண்டும்?"

"எங்க அப்பாவுக்கு எதோ வியாதி. அதுக்கு நெறையா செலவாகுமாம். இன்சூரன்ஸ் இல்லியாம். அதுக்கெல்லாம் எங்களுக்கு வசதி இல்லை. இன்னைக்கு, நாளைக்கு செத்துருவார்னு சொல்லீட்டாங்க. அம்மா இல்லை. அப்பா இருந்தார். அவரும் போய்ட்டா எனக்கு யார் இருக்காங்க? அப்பா, அம்மாட்ட போய் சேந்துருவாங்களாம்.

நானும் செத்துப்போய்ட்டா... அப்பா அம்மாவோட சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாடலாமே! அதுக்காகத்தான் நான் சாகணும். ப்ளீஸ் ஐ வாண்ட் டு பி டெட். ப்ளீஸ்... கில் மீ... கில்... மீ... " கதறுகிறது அந்தப் பிஞ்சு.

பாவம். கலைந்த முடி. கிழிந்த ஆடை. அவள் இந்தக்
கிறிஸ்மஸ¤க்கு நல்ல உடை கேட்கவில்லை; பசித்துப் பசித்து ஒரு ரொட்டித் துண்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் புசிப்பதற்கு எதுவும் கேட்கவில்லை; அவள் கேட்கும் கிறிஸ்துமஸ் பரிசு, சாவு... மரணம். லிசாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்த முகவரி அறியாச் சிறுமிக்காக லிசா மனசுக்குள் பெருங்குரலெடுத்துக் கதறியழுதாள்.

அந்த அழுக்குச் சிறுமியை அப்படியே வாரி எடுத்து, வாய்விட்டுக் கதறவும் செய்தாள்.

இடி, இடித்துப் பெய்யும் கோடை மழை ஓய்ந்த பிறகு வானம் வெளி வாங்கிப் "பளிச்" சென வெளிச்சம் பாய்ச்சுவதைப் போல, அழுது ஓய்ந்த லிசாவின் கண்களில் ஒரு தெளிவு தீர்க்கமாகத் தெரிந்தது.

எத்தனையோ முறை ஒத்திவைக்கப்பட்ட லண்டன், ஆஸ்திரேலியா, சென்னைக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

உறவுகளின் கதவுகளை இழுத்துச் சாத்த எண்ணிய லிசாவுக்கு இன்னொரு புது உறவு !

########



<பிற்பகல் விளையும்...!?<>

குரு கெளம்பு....இப்ப பொறப்பட்டாத்தான் இருட்டறதுக்குள்ள டெட்ராய்ட் போய்ச் சேர முடியும்,
என்றவாறு வாசு வந்தான். என்னடா, என்னாச்சு?

குரு பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்கவே,
மூன்று நாள் ஜாலியா இருந்துட்டு நாளைக்கு வேலைக்குப் போகனுமேன்னு கவலையா இருக்கா?
என்று மீண்டும் கேட்டான் வாசு.

ம்ம்...ஜலாலும் டேவிட்டும் ரெடியாயிட்டாங்களா? என்றவாறே
குரு படுக்கையை விட்டு எழுந்தான்.

நாங்கள்லாம் ரெடி... நீ என்ன தூங்கீட்டியா? கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் ஜலால்.

இதோ ஒரு நொடியில ரெடி.. நீங்க ரூமை செக் அவுட் பண்ணுங்க நானும் வாசுவும் வந்துடுறோம்என்ற குரு, பாத் ரூமில் புகுந்து கொண்டான்.


நண்பர்களிடமிருந்து விடுபட்டு குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்ட குருவால் தன் மனக் கதவைச்சாத்தமுடியவில்லை.

"ஒருவேளை நாம அந்தப்பெரியவர் கேட்டதுக்கு சரின்னு

சொல்லீருந்தா அந்த அநியாயம் நடந்திருக்காதோ
" அந்த குளுகுளு சூழலிலும் கூட 'குப்' பென வியர்த்தது
குருவுக்கு.

அவனின் எண்ண ஓட்டம் பின்னோக்கித் தாவியது.

நயாகரா அருவியை அங்குல அங்குலமாக ரசித்துவிட்டு,
'போட் ரைடு' போவதற்காக அந்த நீண்டு வளைந்து நின்ற
வரிசையில் குரு தன் நண்பர்களோடு நின்றிருந்தபோது தான்
அந்த பெரியவரைச் சந்திக்க நேரிட்டது.

பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனையும் சிறுமியையும் கையில்
பிடித்துக் கொண்டுவரிசையில் இருந்தவர்களிடம் ஏதோ கேட்பதும் அவர்கள் ஏதோ சொல்வதும் அவர் அடுத்தடுத்தவர்களாக கேட்டு நகர்ந்து கொண்டிருந்தார்.

அவரைப் பற்றி இவனருகில் நின்று கொண்டிருந்த சிலர்
இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்தியாவுல தான் பிச்சைக்காரங்க தொல்லைன்னா, இங்க
கூடவா? என்றான் ஒருவன். அட இவுங்களும் இந்தியா தான்,
விமானம் ஏறி வந்து இப்ப இங்கயே பிச்சை எடுக்க
ஆரம்பிச்சாச்சா? என்று இன்னொருவன் சொல்ல ஒரு கூட்டம் கொல்லென சிரித்தது.

அந்தப் பெரியவரோ, "நீங்க தமிழா?.....ஸார் நீங்க தமிழா?" என
சற்றும் மனம் தளராமல் ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டே குருவிடம் வந்தார்.

தமிழ் தான் நான், என்ன விஷயம் பெரியவரே? தமிழ் தான்

என்று குரு சொன்ன மாத்திரத்தில்,பெரியவரின் கண்களிலிருந்து மளமளவென கண்ணீர் உருண்டு சிதறியது.

என்ன பெரியவரே ஏன் அழறீங்க?

"தம்பி ஒரு நிமிசம் ஒங்ககிட்ட தனியா பேசனும்.
இதோ இப்படி வர்றீங்களா? "அவருடைய தோற்றம்
பரிதாபமாக இருந்திருக்கவேண்டும்.

சரி வாங்க, "நீங்க மூவ் பண்ணீட்டே இருங்க.
நா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்,
"நண்பர்களிடம்சொல்லிவிட்டு எதிரே இருந்த
பூங்காவை நோக்கி நடந்தான்.

ம்..இப்ப சொல்லுங்க பெரியவரே...!?

மீண்டும் மளமளவென கண்ணீர் கசிந்து, சிதறியது.

அழாதீங்க... ஒங்க ப்ரச்னை என்ன?

திடீரென்று குருவின் இரண்டு கைகளையும்
பற்றிக்கொண்டு , தம்பி இந்தக் கைய ஒங்க காலா
நெனச்சு கும்புட்டுக் கேக்கறேன், என்று சொல்லி மீண்டும் குலுங்கிக்குலுங்கி அழத் துவங்கிவிட்டார்.

வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. பெரியவரின் அருகே நின்றிருந்த குழந்தைகள் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


என்னோட அப்பா மாதிரி இருக்கீங்க. சின்னப் பையனான
என்னிடம் பெரிய வார்த்தையெல்லாம்சொல்லாதீங்க.
என்னன்னு சொல்லுங்க. என்னால எதும் உதவமுடியும்னா
செய்றேன்.

"தம்பி, எப்படி சொல்றது? என்ன சொல்றது? புரியல.
திருச்சில இருந்து தஞ்சாவூர் போகனும் பஸ்சுக்கு காசு தரமுடியுமான்னு கேக்கலாம். அமெரிக்காவுல இருந்து
தஞ்சாவூர் போகனும் பிளேன்லடிக்கட் எடுத்துத் தர
முடியுமான்னு கேக்க முடியாது.

என் மகன்னு சொல்லிக்கவே வெக்கப்படறேன்தம்பி.

என்னப் பிரிஞ்சு இருக்க முடியல, நாங்க வரணும்னா நாலு பேர் செலவாகும். நீங்க ஒருத்தர்தான வாங்கன்னு கடிதத்துக்கு
மேல் கடிதம் எழுதினான். எம் பொண்டாட்டி போய்ச் சேர்ந்துட்டா,நாந்தான் ஒத்தக் கட்டையா பென்சன்
பணத்துல காலத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன்.

எனக்கும் பேரப்புள்ளைகளை பாக்கலாம் போல் ஒரு
எண்ணம் வந்துச்சு. இங்க வந்தேன். இங்க வந்தப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன். பாசம் ஏதும் இல்ல, எல்லாம் பசப்பல் தான்னு.

என்னைய ஜெயில்ல வச்ச மாதிரி வச்சு இந்தப் புள்ளங்களுக்கு காவக்காரனாக்கி விட்டான். மருமக பேச்சும் ஏச்சும் என்னால
தாங்க முடியல.

பத்தாதுக்கு மகனும் சேந்துகிட்டு கை நீட்டி அடிக்கக் கூட ஆரம்பிச்சுட்டான். என்னை ஊருக்கு அனுப்பி வச்சிடுப்பான்னு
கூட கேட்டுப் பாத்துட்டேன். ஊரா? இங்கேயே கெடந்து
சாவுங்கிறான் பெத்த மகன்.

இப்ப ஹெலிகாப்டர் ரைடு போயிட்டு வர்றோம் புள்ளங்களை
பத்திரமா பாத்துக்கன்னு சொல்லீட்டுப் போய் இருக்காங்க",
என்று சொல்லி நிறுத்தினார் பெரியவர்.

"கேக்க கஷ்டமாத்தான் இருக்குங்க. இதுல நான் என்ன
செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க?"

தம்பி எனக்கு பணம் காசு உதவி வேணாம். சமையல்
செய்யத் தெரியும். ஒங்களுக்கும் நண்பர்களுக்கும்
சமைச்சுட்டு, எதோ ஒரு மூலைய காட்டினா
மொடங்கிக்கிருவேன். வேற எதுவும்வேணாம்.

ஊர்ல இருந்து பணத்துக்கு ஏற்பாடு பண்றவரைக்கும்தான்.
ஒங்களுக்கு எக்காரணம்கொண்டும் பாரமாயிருக்கமாட்டேன்,
என்றார் சிறு குழந்தை போல.

புராஜெக்ட் அடுத்த மாசம் முடியப்போகுது. தானே பெஞ்சில்
உக்காரப் போகிறோமா? நிக்கப் போகிறோமா? என்ற சிந்தனை
அப்போது குருவுக்கு எழுந்தது.

தம்பி யோசிக்கிறதப் பாத்தா....!?

"இல்ல...எனக்கு இப்ப இருக்கிற வேலை அடுத்த மாசத்தோட
முடியுது. அப்புறம் நானே எங்க போவேன்னு எனக்கே தெரியாது.
அதான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்."

"தம்பி ஒங்க ப்ரெண்ட்ஸ்க கிட்டயாவது சொல்லி ஒரு ஏற்பாடு செஞ்சீங்கன்னா கோடிப் புண்ணியம்ஒங்களுக்கு...!" என்று சொல்லி குருவை இரட்சகன் போல பெரியவர் ஏறிட்டார்.


"ஒங்க போன் நம்பரை கொடுங்க ஏதாவது ஏற்பாடு பண்ண முயற்சிக்கிறேன்."

"தம்பி ஒங்கள வற்புறுத்திக் கேட்க எனக்கு கொஞ்சம் கூட உரிமை இல்லை. இங்க எனக்கு வேறவழியும் தெரியல. இல்லன்னா சாகறது தான் ஒரே வழியா தெரியுது."

"நா டிரை பண்றேன். ஆனா இப்ப உறுதியா ஒங்ககிட்ட ஏதும் சொல்ல முடியாது. மகனுக்காக இருக்கிறவரை கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க பெரியவரே. தூரத்தில் நண்பர்கள் சைகை செய்யவே அப்ப நா வர்றேன். போன் பண்றேன். கவலப் படாதீங்க."


"இவ்வளவு பேர்ல நீங்க ஒருத்தராவது மனிதாபிமானத்தோடு
வந்து கேட்டீங்களே. ரெம்ப நன்றி தம்பி,என்று தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டார் பெரியவர்."

00O00

வானத்திலிருந்து பூமிக்குத் தாவிக் குதிக்கிற நயாகரா நதியழகை கீழிருந்து நனைந்து கொண்டேபார்க்கக் கண்கோடி வேண்டும். அமெரிக்கப் பகுதி, குதிரைக் குளம்பு பகுதி, (குதிரைக் கால் போன்றஅமைப்பு ) கனடா பகுதி என மூன்று பிரிவும் ஒரே அருவியாக அணி வகுத்துக் கீழிறங்குகிற அற்புதத்தில் மனதைப் பறிகொடுத்து இருந்தான் குரு.


படகுச் சவாரி முடிந்து கூட்டணிக் கடையில் பீட்ஸா சாப்பிட்டு , மெழுகு பொம்மை கண்காட்சி கூடத்துக்குள் சென்று விட்டு வெளியே வந்தபோது தான் அந்தக் கொடூரம் அரங்கேறிப் போயிருந்தது.

வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நிற்க, சற்று தூரத்தில்
ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதையும், காவலர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருப்பதையும் குரு கவனித்தான். கும்பலாய் இருந்த இடத்தை அடைந்து பார்த்த குருவிற்கு இருதய இயக்கமே நின்றுவிட்டதுபோலானது.

அங்கே... அந்தப் பெரியவர்... இரத்தச் சகதியில் இடுப்புக்கு கீழ் கூழாகியிருக்க முகத்தில் அங்கங்கே இரத்தப் பொட்டுக்கள் உறைந்து ... பார்க்கச் சகிக்காமல் உடம்பைக் குலுக்கி நிமிர்ந்தகுரு, பெரியவருடன் வந்த இரு குழந்தைகள் தட்டுப் பட்டனர்.

அருகில் சுடிதாரினி, கொஞ்சம் தள்ளி காவலரிடம் பேசிக் கொண்டிருந்தது அந்தப் பெரியவரின் மகனாக இருக்க வேண்டும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுடிதாரினி பெரியவரின் மகனை காவலரிடமிருந்து பிரித்து, குரு இருந்த பக்கம் ஒதுங்கினார்கள்.

"எங்க ஔறிக் கொட்டிருவீங்களோன்னு பயமாயிருச்சு. நல்ல வேளை... நான் சொன்ன மாதிரி சொல்லீட்டிங்க. அப்பாகிப்பான்னு சொல்லி பாடிய நாம வாங்கி, கிழத்தைப் புதைக்கவே ஆயிரக்கணக்குல டாலர் செலவு பண்ணனும். நயாகரா வந்த எடத்துல தற்செயலா சந்திச்சோம், எங்கநாட்டுக்காரர் என்பதைத் தவிர வேற ஏதும் தெரியாதுன்னு சொல்லீட்டிங்க; நாம தப்பிச்சோம்.சரி...சரி நாம இந்த எடத்தை விட்டு மொதல்ல கெளம்புவோம்."


குருவுக்குத் திக்கென்று இருந்தது.
அதே இடத்தில் அவர்களை அடித்துப் பந்தாட வேண்டும்
போலிருந்தது. சே... என்ன மனிதர்கள்? என்ன வாழ்க்கை?
பெத்த அப்பாவை யாருன்னே தெரியலைன்னுஎப்படி மனம் கூசாமல் சொல்ல முடியுது?


சில மணித்துளிகளுக்கு முன் பேசிய ஒரு உயிர்ப் பறவை
சிதைந்து கிடப்பதைப் பார்த்ததுமே, என் உள் மனம்
பெருங்குரல் எடுத்துக் கதறுகிறதே, தோளைத் தொட்டிலாக்கி,
நெஞ்சைப் பஞ்சு மெத்தையாக்கி, எறும்பு கடித்தால்
பதைபதைத்து, எத்தனைஎத்தனை இரவுத் தூக்கம்
தொலைத்து இந்த வாலிபத்தை வளர்த்தெடுத்த
அன்பான ஒரு தந்தையை எப்படி அனாதையாக
விசிறிவிட்டுப் போக முடிகிறது?

தொண்டை அடைக்காம, துக்கமில்லாம எப்படி? எப்படி இவர்களால் பாறாங்கல்லாய் இருக்க முடிகிறது?

டேய்...பாத்ரூம்ல என்னடா பண்றே..? கதவு தடதடவென தட்டப்பட குருவின் நினைவிழை அறுந்தது.

000O000


ஒருமணி நேரத்துக்கு மேல் வண்டியை ஓட்டிய ஜலால், "டேய்...என்னாச்சு ஒரு மைல் நீளத்துக்கு வண்டி டிராபிக் ஜாமாகி நிக்கிது,"என்றான்.

சரிதான்... எப்ப கிளியராகி, நாம எப்ப போய்ச் சேர்றது?

இப்பப் போனாலே டெட்ராய்ட் போய்ச்சேர இராத்திரி ஒம்பது
ஆயிடும்... என்றான் டேவிட் எரிச்சலாக.

"சரி நான் கொஞ்சம் முன்னாடி போய் என்ன?ஏதுன்னு போய் பாத்துட்டு வாரேன்" குரு கிளம்பினான்.


இந்தமாதிரி டிராபிக் ஜாமில் எப்படித்தான் அமெரிக்கர்கள் பொறுமையாய் இருக்கிறார்களோ? நம்மூராய் இருந்தால்

குறுக்கமறுக்க பூந்து போறவன் போயிக்கிட்டே இருப்பான்...என்று நினைத்துக்கொண்டே நடந்ததில் கார்கள் நிற்கும் முன்பகுதிக்கு வந்திருந்தான் குரு.


அங்கே.... அப்பா...அம்மா... என்று மெலிதாய் அழும் குழந்தைகள்.....அட...அந்தப் பெரியவரோட பேத்திகள்.

கார் தலைகீழாய் கவிழ்ந்து கிடக்க டிரக்கின் பின்புறத்தின் கீழ் கார்.. இரத்தம் உறைந்து கிடக்க....சுற்றிலும் போலீஸ் தலைகள்.

அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். பெரியவரின் சாவுக்கு காரணமான இருவருக்கும் தண்டனையை தெய்வம் காலம் தாழ்த்தாமல் வழங்கிவிட்டதோ.... குரு அந்தக் குழந்தைகளை நோக்கிப் போகிறான்!

000OO000

<>நிஜமும் நிழலும் <>

பரப்ரப்பான விடிகாலைப் பொழுதில்

நிம்மதியான உறக்கம்
கலைக்க மனமில்லாமல் வீடுகளுக்குள்
நத்தையாய்ச் சுருண்டிருந்தனர்.

அதட்டல், அழுகுரல், தட்டுமுட்டுச் சாமான்களின் உருளும் சத்தம் என கீழ் வீட்டின் கலவரம் அதிகரிக்க மாடியிலிருந்த 26 வயதுப் பெண் சாந்தியை இறங்கி வரச் செய்தது.

அங்கே... போலீஸ்காரர்கள், வீட்டு உரிமையாளரின் பொருட்களைத்
தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தனர். காக்கிச் சட்டை ஒன்று கையிலிருந்த லத்தியால் வீட்டுக்காரி இந்துவை நினைத்த
இடத்தில் குத்தி ஆக்ரோசமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க,
இன்னொரு காக்கிச் சட்டை, தள்ளீட்டுவாங்க ஸ்டேசன்ல
வச்சு கச்சேரி பண்ணிக்கலாம் என்று சொல்ல தரதரவென
இந்துவை இழுத்துச் சென்று வெளியே இருந்த போலீஸ்
வேனில் தள்ளினர்.

"கணவர் வெளியூர் போயிருக்கிறார், வந்ததும் அவரோட ஸ்டேசனுக்கு வர்றேன். குழந்தைகளை கவனிக்க யாருமில்லை" என்று சொல்லி இந்து தேம்பித்தேம்பி அழுகிறாள்.

இந்துவின் குழந்தைகள் இரண்டும் வேனுக்கு வெளியே நின்று கொண்டுகதறி அழுது கொண்டிருக்க,

"வீட்டில் ஆண்கள் இல்லாதபோது எதுக்காக இப்படி கூட்டீட்டுப் போறீங்க?" சாந்திதான் கேட்டாள்."

"ம்...ஸ்டேசனுக்கு வா..வெளக்கமா, வெவரமா சொல்றேன்." காக்கிச் சட்டையின் பொறுப்பான பதிலுக்கு முன்பே வேன் சீறிப்பாய்ந்து புறப்பட்டுப்போனது.

சிதறிக் கிடந்த சாமான்களை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் போனாள், சாந்தி. அவசர அவசரமாக ஜன்னல்களில் தெரிந்த முகங்கள் மறைந்தது.

தீங்கு, வீட்டில் நடந்தாலும், வீதியில் நடந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் -கொள்ளும் பேர்வழி அல்ல சாந்தி.

கண்ணில் கண்டுவிட்டால் சிலிர்த்தெழுகிற பொதுநலவாதியாக சாந்தி இருந்தாள். அதற்காக எங்கோ நடக்கிற அவலங்களுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டமாக கொடி பிடித்து கோசம் போடும் சமூக சேவையெல்லாம் செய்வதில்லை.

ஒருமுறை கன்னாட் பிளேசில் பஸ் ஏறி வரும்போது
தனக்கு முன் நின்றிருந்த பெண்ணின் கைப்பையை
பிளேடுபோட்டுக் கொண்டிருந்தவனை சட்டென்று கையை
எட்டிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

மற்றவர்கள் பார்த்தும் பார்க்க'தது போல இருந்தாலும் சாந்தியால் அப்படி இருக்க முடிவதில்லை. பஸ்ஸை காவல் நிலையத்தில்
நிறுத்தச் சொல்லி தான் கையும் களவுமாகப் பிடித்தவனை
ஒப்படைத்து விட்டுத்தான் வந்தாள்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை
பார்த்துக் கொண்டிருந்த சாந்தி, டெல்லிக்கு வந்ததே
ஒரு விபத்துதான்.

அலுவலகத்தில் இவள் செய்த வேலைகளை தாமே
செய்ததாகச் சொல்லி எம்.டியிடம் பேர் வாங்கிக்
கொண்டிருந்தான், சக ஊழியன் ஆறுமுகம். சில நந்தி
வேலிகளைத் தாண்டித்தான் எம்.டி.யைப் பார்க்கவேண்டும்.

பொறுமையாக இருந்தாள். ஆனாலும் அவ்வப்போது சிறுசிறு
குறைகளை பெரிதாக்கி மேனேஜரிடம் வத்தி வைப்பது,
ஜி.எம்.மிடம் சிண்டு முடிவது என்று சில்லறை வேலைகளைச்
செய்து ஒவ்வொருவரிடமும் ஒரு முகம் காட்டி வந்தான்,
ஆறுமுகம்.

ஒரு நாள், என்னைக் கவனிச்சுக்க இல்ல இங்க காலம் தள்ள
முடியாது என்று சொல்லி சாந்தியின் கன்னத்தில் செல்ல தட்டு தட்டினான்.

அவ்வளவுதான், சாந்தி காளியாக மாறி அலுவலகம் என்று கூடப் பாராமல் செருப்பைக் கழற்றி பளார்பளார் என அறைந்து விட்டாள். அலுவலகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது.

வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள். வீட்டில் ஆறுதல் சொல்லாவிட்டாலும் அனலைக் கக்கினார்கள். பெற்றவர்களும் சரியில்லை; உடன் பிறந்தவர்களும் சரியில்லை; மன வலியோடு சென்னையில் இருக்கப் பிடிக்காமல் தலை நகர் தில்லியிலுள்ள தன் தோழி மூலம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டாள்.

தில்லி வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.
கயாலாவில் வி.வி.காலனியில் லால் அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாவது மாடியில் குடி வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகி இருந்தது.

இன்று விடிந்தபோதுதான்......மேலே சொன்ன சம்பவங்கள்.

கயாலாவின் ஒதுக்குப் புறத்தில் அழுக்குப்படிந்திருந்த காவல் நிலையத்தில் சாந்தி நுழைந்தாள். பாராவில் இருந்த காவலரிடம், இன்ஸ்பெக்டரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள்.

உள் பக்கம் கையைக் காட்டிப்போகச் சொல்லவே, தடுப்பு தடுப்பாக இருந்த அறைகளில் ஒன்றில்

ஆர்.எஸ்.யாதவ், இன்ஸ்பெக்டர் லா & ஆடர்
என்றிருந்த மேஜை முன் நின்றாள்.

தொலைபேசியில் முரட்டுக் குரலில் யாதவ்பேசிக் கொண்டே
சாந்தியை கண்களால் அளந்து கொண்டிருந்தான்.

பேசி முடித்துவிட்டு, புருவத்தை மட்டும் உயர்த்திக் கேள்விகேட்ட இன்ஸ்பெக்டரிடம், காலையில் நடந்த சம்பவத்தைச் சொல்லி,
பெண் என்று கூடப் பாராமல் லத்தியால் அடித்து வேனில்
ஏற்றி வந்தது மிகுந்த அநாகரீகம், எதற்காக இந்துவைக்
குழந்தைகள் கதறக்கதற கூட்டி வந்தனர்? என்று சாந்தி கேட்டாள்.


நீ யார் ? -கேட்டார் இன்ஸ்பெக்டர். சொன்னாள். "உன்னிடம் பேச
எனக்கு நேரமில்லை.. போ....போ வந்துட்டா பெரிசா நியாயம்
கேட்க.."

"சார்..இந்துவ எதுக்கு இங்க கொண்டுவந்து இருக்கீங்க?
விபரம் சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி அவங்கள கூட்டீட்டுப் போகலாம்னுதான் வந்துருக்கேன்"

"மரியாதையாச் சொன்னா போகமாட்டே.. ஐ.ஜி.மாதிரியில்ல
வெறப்பா நின்னு கேக்குற..நா யாருன்னு நீ தெரிஞ்சுக்க
வேணாம்.."

"போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்கன்னு, மேலதிகாரி ஒங்ககிட்ட சொன்னா நியாயம் கிடைக்கும்னு வந்தேன். இங்க கெடைக்காது
போல இருக்கு.."

"நீயும் அழகா சினிமா ஸ்டார் மாதிரி தான் இருக்கே..
ஒங்கிட்ட நான் தப்புப் பண்ணலாம்னு பாக்குறேன்"

"ஸார்.. நீங்க வரம்பு மீறிப் பேசுறீங்க..உங்க மேலதிகாரி
கவனத்துக்கு நா கொண்டுபோக வேண்டியிருக்கும்"

"என்னடி ஒரேதா பேசிக்கிட்டே போற..இன்னைக்கு ஒங்
கொழுப்பை அடக்குறேன்.

ஏய்..யார் அங்க..டூ நாட் சிக்ஸ்.. இங்க வா... இந்தத் "...." ளுக்கு
நேரம் சரியில்ல.. இவளெ என்னோட ஸ்பெசல் ரூம்ல வை..
நாங்கி கர் டி சாலி கோ.." ( இவ ஒடம்புல ஒரு துணி இல்லாம எடுத்துரு ) மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்.

" இன்ஸ்பெக்டர் உடையிலிருந்த காட்டு மிராண்டியின்
கூக்குரல், காக்கிச் சட்டைகளைக் கொண்டு வந்து நிறுத்தியது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த அவலம் தவிற்க இயலாமல் அரங்கேறிப் போனது. சட்டத்தின் காவலர்கள் வெறிநாய்களாக
மாறி சாந்தியைக் கடித்துக் குதறிப் போட்டனர். காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமாகவும், வேலியேபயிரை மேய்ந்த கொடுமையும் நடந்தேறிட எதுவுமே நடவாததுபோல் உரத்த மெளனத்தில் அந்தக் கட்டிடம் உறைந்திருந்தது.

இது போன்ற செயல்கள் அடிக்கடி அங்கு நிகழ்ந்து அதற்கும்
பழக்கமாகி இருக்கவேண்டும்.

முழங்கால்களுக்கு இடையில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு, இரண்டு கைகளையும் போர்வையாக்கி, பிறந்த மேனியாக இருக்கும் உடம்பை மறைத்துக் கொண்டு சாந்தி குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

கறைபடிந்த காக்கிகள் அகன்றதும், இந்து ஓடி வந்து "பாவிங்க இந்த சின்னப் பூவை கசக்கி நாசமாக்கீட்டீங்களே, உருப்புடுவீங்கள' ? "
என்றவாறு தான் போட்டிருந்த பல்லுவை (துப்பட்டா துணி)
சாந்தியை சுற்றிப் போர்த்திவிட்டாள்.

"பிளாட்பாரக் கடையில் திருடிய சென்னைப் பெண் கைது"-
மறு நாள் பத்திரிக்கையில் சிறு செய்தி வெளியாகியிருந்தது.

<>"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..! "<>

மணி வகுப்பில், முதல் மாணவன். பாடத்தில்
மட்டுமல்ல; பேச்சு, கட்டுரை, விளையாட்டு
எல்லாத்துலயும் முதல் மாணவன்.

பாராட்டும், பரிசுகளும் மணியைத் தேடி வந்தன. ரமணி
வகுப்பில் படிக்கும் சக மாணவனான மதிவாணனுக்கு
படிப்பதில் நாட்டமில்லாமல் விளையாட்டிலேயே
பொழுதைப் போக்குவான்.

ஆனாலும் ரமணி பரிசோ, பாராட்டோ பெறும்போது
மதிக்கு கொஞ்சம் பொறாமையா இஇருக்கும். அவனை
எதிலாவது வீழ்த்திக் காட்டிட சந்தர்ப்பம் வாய்க்காதா
என்று காத்திருந்தான்.

அது நேர்வழியில்லாமல் குறுக்குவழியாக இருந்தது.
பாடங்களில் ரமணியை விட அதிக மார்க் வாங்க
வேண்டும் என்று எண்ணாமல், ரமணிக்கு குறைவான
மார்க் கிடைக்க என்ன செய்வது என்றுதான் சிந்திப்பான்
மதி.

மதியோ வசதியான வீட்டுப் பையன். மணிக்கு அம்மா
கிடையாது. அப்பா மட்டும்தான். பல நேரங்களில் சாப்பிட
காலையில் ஒன்றுமிருக்காது. எப்படியிருந்தாலும்,
எதையும் வெளிக்காட்டாமல் படிப்பில் மட்டுமே
தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.

அன்று பள்ளிக்கு கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி
நாள்! மணியின் அப்பா, யாரிடமாவது கைமாத்தா பணம்
வாங்கீட்டு வர்றேன்னு போனவரைக் காணாமல் மணி
தவித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு வேறு நேரம் ஆகிக் கொண்டிருந்தது. ஒருவழியா வந்து பணத்தைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக பள்ளியை
நோக்கி போய்க்கொண்டிருந்தான். திடீர்ணு பின்பக்கம் எதோ
வந்து மோத மணி தலைகுப்புற வீழ்ந்தான்.

அவன் புத்தகப் பை ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக
விழுந்து கிடக்க, " ஸாரிடா... என்றவாறு மதிவாணன் வந்து
மணியைத் தூக்கிவிட்டான். மதி வேண்டுமென்றே சைக்கிளை
அவன் மீது மோதி விட்டு தெரியாமல் நடந்தது போல
மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

மணிக்குத்தான் கை, கால், நெற்றியில் காயம் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சிதறிக்கிடந்த புத்தகங்களையும் நோட்டுக்களையும் எடுத்து பைக்குள் திணித்துக் கொண்டு பள்ளிக்கு நேரமாச்சே என்ற உணர்வு உந்தித் தள்ள ஓடினான்.

நல்லவேளையாக ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன் அவன் இடத்தில் போய்அமர்ந்து விட்டான். வகுப்பாசிரியர் வந்து வருகைப் பதிவேடு சரி பார்த்ததும் முதல் கேள்வியாக, என்ன மணி பணம் கொண்டு வந்தியா ? என்றுதான் கேட்டார்.

"கொண்டுவந்திருக்கிறேன்" அய்யா, என்று சொல்லிக்கொண்டே சட்டைப்பையில் கையை விட்டவன் தேள் கொட்டியது
போல் துடித்துப் போனான்.

பையில் பணம் இல்லை.

தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.
மணிக்காக ஆசிரியரே கட்டணத்தையும் செலுத்திவிட்டார்.

விழுந்த இடத்தில் பணம் பையிலிருந்து விழுந்திருக்குமோ
என்று மணி நினைத்து அங்கெல்லாம் போய் தேடிப் பார்த்தான்.
ஆனால் மதிவாணன் மட்டும் தனக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.
மணி மாலையில் வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவன் அப்பாவும் வந்துவிட்டார்.

மணி காலையில் பணம் தொலைந்து போனதைச் சொல்லி அழுதான். அந்தப்பணம் அப்படி போகணும்னு இருக்குறப்போ நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லி அவனைத் தேற்றினார்.

சரி, நீ முகத்தைக் கழுவீட்டு கடைக்குப் போய் இதுல எழுதியிருக்கிறதெல்லாம் வாங்கீட்டு வா என்று அவனை கடைக்கு அனுப்பினார்.

கடைவீதிக்கு வந்த மணி ஒரு இடத்தில் கூட்டமாக மக்கள் கூடி நிற்பதையும், " இது யார் பெத்த பிள்ளையோ, அப்டீன்னு யாரோ சொல்வதும் காதில் விழுந்தது. கூட்டத்தை விலக்கிப் போய் மணி பார்த்தான். அங்கே தலையில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருக்க மதிவாணன் மெல்ல முனங்கிக் கொண்டிருந்தான்.

" ஐயோ ! மதி நீயா? என்று கேட்டவன், அருகே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரரை கூப்பிட்டு, இவன் என்னோட படிக்கிறவன்.
கொஞ்சம் உதவி பண்ணுங்க. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக... " என்றான்.

" அட நீவேற ! அடிச்சுத் தள்ளீட்டு நிக்காம எவனோ போயிட்டான். போலீஸ் கேஸை நான் தொடமாட்டேம்பா," என்றான் ரிக்ஷாக்காரன்.

" ஐயா, சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா காப்பாத்தீரலாம். ஒங்களுக்கு ரிக்ஷா வாடகைய நானே கொடுத்துர்றேன் என்று சொல்ல அங்கிருந்தவர்கள் சிலர் மணிக்கு ஆதரவாகப் பேச அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு போய் மதியைச் சேர்த்தான்.

தீவிர மருத்துவ சிகிச்சைப் பகுதியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஒருவர், " தம்பி, சரியான சமயத்துல கொண்டு வந்து சேர்த்தாய். இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல கண் முழிப்பான். நீ அதற்குள்ள அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லி வரச் சொல்லுன்னார்.

மதிவாணன் அப்பாவும், அம்மாவும் அரக்கப் பரக்க வந்தார்கள். அப்போதுதான் மதி கண்ணைத் திறந்து பார்த்தான்.

அவன் தலையிலிருந்த கட்டைப் பார்த்து அவனின் அம்மா,
மதீன்னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டார். அங்கிருந்த மருத்துவரிடம் மதியின் அப்பா, எப்படியோ மகனை காப்பாத்தீட்டீங்க.
ஒங்களுக்கு கோடி நன்றிங்க, " அப்டீன்னார்.

"இங்க கொண்டுவந்து சரியான சமயத்துல சேர்த்த அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்க முதல்ல அப்டீன்னு மணியை நோக்கி கையைக் காட்டினார், மருத்துவர்.

அப்போதுதான், மதி உட்பட எல்லோருக்கும் விஷயம் புரிந்தது.
தம்பி, நீ மகராசனா இருக்கணும்ப்பா, என்று மதியின் அப்பாவும் அம்மாவும் ரமணிக்கு நன்றி சொன்னாங்க. ரமணி , என்னங்க
மதிகூடப் படிக்கிறேன், இதக்கூட நான் செய்யலையின்னா
நான் படிச்சு என்ன புண்ணியம்," என்றான்.

மதியின் கண்களிலிருந்து சரம்,சரமாய் கண்ணீர் வடிந்தது.
மணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நீ என்னை மன்னிச்சுரு," என்றான் மதி.

"மன்னிப்பா? எதுக்கு நான் ஒன்னை மன்னிக்கணும்? " என்றான் மணி.

" நான் எவ்வளவோ கெடுதல் ஒனக்குப் பண்ணீருக்கேன். இன்னைக்கு காலையில கூட உன்னை வேணும்னே சைக்கிள்ல மோதுனேன். உன் பையிலிருந்து கீழ விழுந்த பணத்தைக் கூட நாந்தான் எடுத்தேன்.
ஆனா, நீ என்னை இப்ப சாவுல இருந்து காப்பாத்தீருக்க. என்னை மன்னிச்சு ஒன்னோட நண்பனா ஏத்துப்பியா? என்று கேட்டு மேலும் அழுதான் மதி.

" அட, பைத்தியம் ! நீ எப்பவும் என் நண்பன்தான் ! நீ எப்ப தப்புன்னு உணர்ந்திட்டியோ அப்பறம் என்ன? நீ இப்ப அழக் கூடாது.
எங்க சிரி பாக்கலாம்," என்றான் மணி.

மதிவாணனின் அப்பா, நாளைக்குக் காலையில் மணிக்கு ஒரு புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப் போறேன், " அப்டீன்னார்.

மதிவாணனின் அம்மா, 'எனக்கு இன்னையிலிருந்து ரெண்டு மகன்கள் என்று சொல்லி மணியைக்கட்டி அணைத்துக்கொண்டார். ரமணிக்கு அந்தத் தாயின் அரவணைப்பில் தன் தாயைக் காணும் சுகத்தில் மூழ்கிப் போனான்.

கதை தரும் நீதி : - யாருக்கும் தீங்கு விளைவிக்க மனதால் கூட எண்ணுதல் கூடாது. ஒருவருக்கு காலையில் தீங்கு செய்தால் மாலையில் அவருக்கே தீமை தேடிவரும் ! எனவே நமக்குத் தீங்கு செய்பவர்களுக்குக்கூட நாம் தீங்கு செய்யலாகாது !

"விமானக் கடத்தல் ஹீரோ....!"




"அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து "விர்"ரென்று செங்குத்தாக மேலெழும்பிக் கிளம்பியது. விமானத்திலிருந்த ஐநூத்துச் சொச்சம் பயணிகளும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

அலுவலக வேலையாகச் செல்பவர்கள் கைகளிலிருந்த கோப்புகளிலும் மடிக்கணினிகளிலும் கண்ணும் கருத்துமாயிருக்க, இரவுத் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் தங்கள் டையைத் தளர்த்தி தூக்கத்துக்கு மனுப்போடத் தயாராகிக்கொண்டிருக்க,

சிலர் "சதாம் உசேன்" உயிரோட இல்லை, என்ன சொல்றீங்க? புலி பதுங்குறது எதுக்கு? பாயுறதுக்கு...அது மாதிரி சதாம் பதுங்கியிருக்கிறதாத்தான் நான் நெனைக்கிறேன் என்று லேட்டஸ்ட் ஈராக் செய்திக் கொறிப்பிலும்...."பின்லேடன்" கெடச்சுடுவானா?

கெடச்சா உயிரோட கெடைப்பானா இல்ல பொணமாத்தான் கெடைப்பானாங்கிற ஆராய்ச்சியில் சிலரும் ஈடுபட்டிருக்க, விமானம் முப்பதாயிரம் அடியைத் தொட்டுவிட்ட நிம்மதியில் மேகக் கற்றைகளிடையே நீந்தி சிகாகோ ஒஹையர் விமான நிலையத்தை நோக்கிச் சீராகச் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று அத்தனை பேரையும் ஈர்க்கும் வகையில் ஒரு குரல்.....

" திஸ் ப்ளேனிஸ் ஹைஜாக்ட் பை மீ....ஹேண்ட்ஸ் அப்...டோண்ட் மூவ்... "

ஒரு இளைஞனின் குரலுக்கு பயணிகள் யோசிக்காமல் கட்டுப்பட்டனர். முன் வரிசையிலிருந்தும் நடுப்பகுதியிலிருந்தும் ரெண்டுமூன்று தலைகள் இளைஞன் குரல் ஒலித்த இடம் நோக்கித் திரும்ப... "

நோ...நோ...யாரும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பக் கூடாது.
நான் அதிகம் பேசப் போறதில்லை. யாராவது, நான் ஒரு ஆள்தானே சமாளித்துப் பார்கலாம்ன்னு முயற்சி பண்ணுனீங்கன்னா நான் ஒங்களோட சண்டை போடப் போறதில்லை. என் கையிலிருக்கிற
இந்த ரிமோட் பட்டனை லேசா அழுத்தினாப் போதும்.


விமானம் மட்டுமில்ல நாம எல்லோருமே சுக்கு நூறா வெடிச்சுச் சிதறிடுவோம். நான் எந்த டவர்லயும் கொண்டு போய் இடிக்கப் போறதில்ல. உங்க எல்லோரையும் பணயமா வச்சு அரசாங்கத்துக்கிட்ட ஒரு பில்லியன் டாலர் கேக்கப்போறேன்.

அரசாங்கம் கொண்டு வந்து குடுக்குற வரை நீங்க எல்லாரும் என்னோட கஸ்ட்டடி!...."


" அதாவது இப்ப நான் போய் விமானி மூலமா அரசாங்கத்துக்கு செய்தி அனுப்புவேன். விமானம் சிகாகோ ஒகையர்ல எறங்குறதுக்குப் பதிலா, மிட்வே விமான நிலையத்துல போய் எறங்கும்.

உடனே உங்கள்ல ஒருத்தர் தான் விமானத்தை விட்டுக் கீழ இறங்கி அதிகாரிகளிடமிருந்து பணப்பெட்டியை வாங்கி வரணும். பணம் என் கைக்கு வந்ததும் உங்க எல்லோரையும் ரிலீஸ் பண்ணீட்டு
விமானத்தை என்னோட நாட்டுல போய் எறங்கீட்டு விமானத்தை திருப்பி அனுப்புறதா உத்தேசம்.

அதனால எல்லாரும் அமைதியா, நல்ல பிள்ளைகளா ஒத்துழைப்புக் கொடுக்கணும், என்றான் இளைஞன். அவன் கையில் கால்குலேட்டர் சைசில் எதோ ஒன்று சின்னதாக இருந்தது.

சகலகலா வித்தையும் கற்ற ஏர் மார்சல் முன்புதான் அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஏர்மார்சல் தோளில் இருந்த துப்பாக்கி துவண்டு கிடந்தது. பயணிகள் கண்கள் கலவரத்தை நிறைத்து மூச்சு விடுவதைக்கூட மெதுவாக விட்டுக்கொண்டிருந்தனர்.

மீண்டும் அந்த இளைஞன் பேசினான். இப்ப ஏர்மார்சலோட விமானியின் அறைக்குப் போகிறேன். நான் அரசாங்கத்துக்குச் செய்தி கொடுத்துட்டு வர்ற வரைக்கும் கையை எல்லாம் கீழ போட்டுட்டு, முன்னால பின்னால திரும்பாம சமர்த்தா இருந்தா நீங்க சிகாகோவில பத்திரமா இறங்க நான் பொறுப்பேத்துகுவேன்.

இல்லன்னா.... இல்ல நீங்க சமர்த்தா இருப்பீங்க..." என்று அவன் சொல்லி முடித்ததும் ரயில் போனதும் கைகாட்டி எறங்குற மாதிரி எல்லோரின் கைகளும் இறங்கின.

" நீங்க எந்திரிச்சு காக்பிட்டுக்குப் போங்க..." ஏர்மார்சலைப் பார்த்துச் சொல்ல ஆசிரியரின் கட்டளைக்கு கீழ்ப்படியும் மாணவன் போல ( அப்படிக்கூட மாணவர்கள் இருக்கிறார்களா, என்ன? ) ஏர்மார்சல் எழுந்து நடந்தார்.

" காக்பிட் கதவைத் திறந்ததும் என்னை லாவகமா வளைச்சுப் பிடிச்சுடலாம்னு மட்டும் நெனைக்காதீங்க மார்சல், என் கையிலிருக்கிற ரிமோட் கீழ விழுந்தாக்கூட அது உங்க உயிரைக் காப்பாத்தாது.. என்று இளைஞன் சொல்ல ஏர் மார்சல் மெளனமாக நடந்தார்.

ஏனோ விமானத்திலிருந்தவர்கள் காக்பிட் கதவு திறந்து மூடும் வரை இளைஞன் எப்படிப்பட்டவன் என்று பார்க்கக்கூட தலையைத் திருப்பாமல் பொம்மைகளாக இருந்தனர்.

ஆயிற்று. விமானி அறைக்குள் போய் அரைமணி நேரம் ஆகியும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் விமானம் அதன் திசையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு பயணி தைரியமாக, செல்போனை எடுத்து யாருக்கோ பேசுவது மெல்லக் கேட்டது. உடனே பலர் தத்தம் செல் போன்களை எடுத்து தங்கள் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர்.

" ஹனி! மை ப்ளேன் ஹைஜாக்ட். எந்தடவரில் இடிக்கப் போறானோ!
ஐ லவ் யூ ஹனி! குட்பை ஹனி! " என்று ஒருவர் அவசரஅவசரமாகச் சொல்லி செல் போனை அணைத்தார்.

சிலர் செல் போனை எடுத்துவராமல் போயிட்டமே என்று வருந்தினர். சிலர் கண்களாலேயே பேசி அடுத்தவரிடமிருந்த செல்போனை வாங்கி தங்கள் கடைசி உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

ஒருவர் காக்பிட் டோரில் கண்களைப் பதித்துக்கொண்டு, 911க்குப் போன் செய்து, " தரையில நடந்தாத்தான் எங்களை காப்பாத்த வருவீங்களா? எங்க விமானம் கடத்தப்பட்டு சிகாகோ போறதப் பாத்தா சியர்ஸ் டவர்ல தான் போய் இடிப்பான் போல இருக்கு.

ஒரே ஒருத்தன் கில்லாடியா திட்டம் போட்டு கடத்துறான். பெண்ட்டகனுக்கு தகவல் குடுத்து எங்களைக் காப்பாத்த முடியுமான்னு பாருங்க..." என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டு எதோ என்னால் முடிஞ்சது என்று சொல்வது போல பக்கத்திலிருந்தவரைப் பார்த்தார்.

அவரோ, சியர்ஸ் டவர் 110 மாடியாச்சே...1707 அடி உயரமாச்சே....16,000 சன்னல் கண்கள் உள்ள அந்த டவரைத்தான் இடிக்கப் பிளான் பண்ணீருக்கானா? எவ்வளவு கலை நயத்தோட கட்டுன டவர்... அடப் பாவி மகனே... என்று தன் முடியிழந்த வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார்.

இவருக்கோ எரிச்சல். நம்ம உயிர் போறதப் பத்திக் கவலைப்படறோம். இந்த ஆள் என்னடான்னா டவர் போகப்போகுதேன்னு கவலைப்படறானே மனுசன் என்று உள்ளுக்குள் எண்ணினாலும், அது என்ன சியர்ஸ் டவர் இத்தினி அடி, இத்தனை சன்னல்ன்னு கரெக்டா எண்ணிப் பாத்த மாதிரியில்ல சொல்றீங்க?!ன்னு ஒரு கேள்வியைக் கேட்டார், இவர்.

" அட, என்னங்க இப்டிக் கேட்டுட்டீங்க. அந்தக் கட்டிடத்தை இராப்பகலா கட்டுன ஆயிரத்து அறுநூறு பேர்ல நானும் ஒருத்தன். என்னோட கொழந்தை மாதிரி. அந்த டவர் போர்த்தியிருக்கிற அலுமினியத் தோல் மாத்திரம் 28 ஏக்கர் பரப்பளவு! 76,000 டன் ஸ்டீல்!

அந்த பில்டிங்குக்கு காங்க்ரீட் மட்டும் எவ்வளவு போட்டுருப்பம் தெரியுமா? 5 மைல் நீளத்துக்கு எட்டு லேன்கள் உள்ள ஹைவே சாலையை உருவாக்குற அளவுக்கு காங்க்ரீட் போட்டுக் கட்டியது. அம்புட்டு ஒசர கட்டிடத்தையும் வெளிப்புறம் சுத்தம் செய்ற 6 தானியங்கி மெசின் அப்டீன்னு எவ்ளவு பாத்துப் பாத்துக் கட்டியது.

106 பேர் ஒரே சமயத்துல வான் தளம் ( sky deck ) போற மாதிரி ரெண்டு எலிவேட்டர் செஞ்சோம். 1353 அடி ஒயரத்துல இருக்குற ஸ்கை டெக்குக்கு நிமிசத்துல கொண்டுபோய் சேத்துடும். நீங்க சியர்ஸ் போயிருந்தீங்கன்னா தெரிஞ்சுருக்கும். சியர்ஸ் போயிருக்கீங்களா?

" சியர்ஸ் வழியா எத்தனையோ தடவை போயிருக்கேன். ஆனா மேல போய் பார்த்ததில்ல.... ·ப்ளைட் 111ல ஏறும்போதே என் மனைவி போகாதே....போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நேத்துக் கண்டேன்னு... சொன்னா... பேசாம அவ பேச்சைக் கேட்டுருக்கலாம்...." என்று சொல்லி ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட்டார்.அவர் கவலை அவருக்கு!

பக்கவாட்டு வரிசையிலிருந்த ஒரு இளம்ஜோடி ரெம்ப சோகமா," நேத்துத்தான் நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஹனிமூன் போக பிளான் பண்ணோம். ஹெவன்லதான் எங்க ஹனிமூன் நடக்கணும்னுங்கிற விதி இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் உங்க செல்போனை குடுங்க.... எங்க அப்பா அம்மாகிட்ட ஒரு குட்பை சொல்லிக்கிறோம் " என்று சொல்லும்போதே அந்த வாலிபனின் கண்கள் கண்ணீரைக் கொட்டியது. இளம் மனைவி மெளனமாக அழுது முகம் "ஜிவ்"வென சிவந்திருக்க மூக்கைச் சத்தம் வராமல் சிந்திக்கொண்டிருந்தார்.

" மம்மி... ரெஸ்ட் ரூம் போகணும்.... வா...வா என்று நிலைமை தெரியாமல் நச்சரித்துக் கொண்டிருக்க... ரெஸ்ட் ரூம்ல யாரோ இருக்காங்க... ரெட் லைட் எரியுது.... கொஞ்ச நேரத்துல நாம சிகாகோ போய்டுவோம். கொஞ்சம் பொறுத்துக்க.. நல்ல பொண்ணுல்ல... சமர்த்துப் பொண்ணுல்ல... என்று அந்தச் சிறுமியைச் சமாளிக்க வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார், அந்தத் தாய்.

47 டி இருக்கையில் அமர்ந்திருந்த நபர், தமக்கு அருகேயிருந்தவரை சைகையால் அழைத்து கீழே கையால் சுட்டிக் காட்ட அதைக் கண்ட அவரும் கலவரப் பார்வையைக் காட்ட, அவர்களுக்குப் பின்புறம் செல்போனும் கையுமாக இருந்த ஒருவர் எட்டிப் பார்க்க..... அவர்களின் திகில் நிறைந்த பார்வைக்குரிய பொருள் அந்த இளைஞனின் கைப்பெட்டி அங்கிருந்ததுதான் என்பதை உணர்ந்த அதே நேரத்தில் அந்தப்பெட்டியின் கைப் பிடியில் " நவீன் " என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து விட்டார்.

" ஹைஜாக் பேர்வழியின் பெயரைக் கண்டுபிடிச்சுட்டேன். அவனோட பேர் நவீன்," என்றார் அவர்.

உடனே பக்கத்திலிருந்தவர், அது அவனோட ·பர்ஸ்ட் நேமா?
இல்ல லாஸ்ட் நேமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

" எந்த நாட்டுப் பேர் இது? மிடில் ஈஸ்ட் நேமா?! "

" அட நீங்க வேற! அந்தப் பெட்டியை சத்தமில்லாம எடுத்து விமானத்துக்கு வெளிய வீசணும். அதுலதான் "பாம்" வச்சிருப்பான். ஆனா, எப்டி அத வெளிய வீசுறது? "

" விண்டோ கண்ணாடிய ஒடச்சாவது வெளிய வீசீற வேண்டியதுதான்..."

" ஏங்க அது நடக்கிற வேலையா? நாம பெட்டிய எடுக்குற சமயத்துல அவன் வெளிய வந்து ரிமோட்டை அழுத்திட்டான்னா, நாம எல்லாம் பட்டுன்னு போய்ச் சேர்றதா என்ன? அவந்தான் ஒழுங்கா இருந்தா எல்லோரையும் கொண்டு போய் பத்திரமா விட்டுவிடுவேன்னுதான சொன்னான்?

இப்படி இவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கையில் சிகாகோ விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு, " நவீன் என்ற தீவிரவாதி விமானத்தை கடத்திக் கொண்டிருக்கிறான். ஏர்மார்சலை விமானி அறைக்கு கடத்திக்கொண்டு போயிருக்கான். கையில ஒரு ரிமோட் வச்சிருக்கான். எனக்கென்னமோ, அவன் பணத்தை வாங்கிக்கிட்டு எங்களை விட்டுர்ற பேர்வழி மாதிரி தெரியலை. மிட்வே ஏர்போர்ட்ல எறக்கி விடப்போறதா சொல்றான். ஆனா, எந்த டவரைக் குறி வச்சிருக்கானோ!? சியர்ஸ் டவர்தான் பெரிசு. எதுக்கும் கொஞ்சம் அங்க பந்தோபஸ்து போடச் சொல்லுங்கள். கூடவே எங்களையும் எப்படியாவது காப்பாத்தப் பாருங்க...!?" வேர்க்க விறுவிறுக்கச் சொல்லி முடிக்க

அருகிலிருந்தவர்கள், " என்ன சொல்றாங்க? நம்மள காப்பாத்தீருவாங்களா?... என்று கோரசாகக் கேட்க..... காக்பிட் கதவு திறக்கும் ஓசை கேட்க எல்லோரும் " கப்சிப் " ஆயிட்டாங்க.
ஏர்மார்சல் துப்பாக்கி இப்போது இளைஞன் கையில்! ஏர்மார்சல் கைகளை மேலே தூக்கியவாறு முன்னால் வர நவீன் என்ற இளைஞன் பின்னால் வந்தான்.


" கொஞ்சப்பேர் நான் சொன்னதைக் கேட்டு நடந்துகிட்டீங்க.
கொஞ்சப் பேர் செல் போன் இருக்குங்கிறதுக்காக அங்கங்க தகவல் கொடுத்துட்டீங்க. சில பேர் கிட்ட செல் போன் இல்ல. இருந்திருந்தா நீங்களும் பேசியிருப்பீங்க... என்று இளைஞன் சொல்லத் துவங்க செல்போன் பேசியவர்கள் முகமெல்லாம் வெளிறிக் கொண்டிருந்தது.

பரவாயில்லை.... இந்த உலகத்துல பொறந்த எல்லாருக்குமே உயிர் மேல் ஆசை உள்ளவங்கதான். அரசாங்கத்துக்கிட்ட பேசியிருக்கேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நீங்க எல்லாம் பத்திரமா அவங்கவங்க போக வேண்டிய எடத்துக்குப் போயிடலாம். யாராவது அவசரமா, ரெஸ்ட் ரூம் போகணும்ன்னா ஒவ்வொருத்தரா போய்ட்டு வரலாம், என்றான் அந்த இளைஞன்.

ஏனோ, யாரும் எழுந்து கழிப்பறைப் பக்கம் போகவில்லை. சியர்ஸ் டவரைக் கட்டியவர்களுள் ஒருவரான அந்தப் பெரிசு மட்டும் எழுந்தார். அந்த இளைஞனை ஒரு நிமிடம் பார்த்தார். அவன் கையிலிருக்கும் துப்பாக்கிக்கும் அந்த முகத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது போல அலசிவிட்டு என்ன நினைத்தாரோ மீண்டும் உட்கார்ந்து விட்டார்.

விமானம் சிகாகோ மிட்வே ஏர் போர்ட்டில் ஒரு சில நிமிடங்களில் இறங்கப் போவதாக விமானி அறிவித்த போது பயணிகளுக்கு தங்கள் காதுகளை நம்ப முடியாமல் ஆச்சரியத்தைக் கண்களில் நிறைத்து அந்த இளைஞனைப் பார்த்தனர். இளைஞனோ எந்தவிதமான பரபரப்புமின்றி விமானத்தின் வால் பகுதியிலுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான்.
சன்னலோரம் உட்கார்ந்திருந்த ஒருவர் வெளியே எட்டிப் பார்த்தவர் முகத்தில் சற்று திகில் பரவ அருகேயிருந்தவரிடம் ப்ளைட் மிட்வே ஏர்போர்ட்டுக்குப் போகலை. பிரசிடெண்ட்சியல் டவர் பக்கமா போகுது என்று கிசுகிசுக்க எதோ நடக்கப் போகிறது என்றெண்ணி தங்கள் கடைசி நேரக் கோரத்தை பார்க்க விரும்பாதது போல கண்களை இறுக்கமாகக் மூடிக் கொண்டனர்.

விமானம் பெருத்த ஓசையோடு தலை குப்புறப் பாய்வது போல ஒரு கணம் உணர்ந்த பயணிகள் அடுத்த நிமிடம் விமானம் தரையில் ஓடுவதையுணர்ந்த போதுதான் நின்றுபோன அவர்கள் இருதயம் ஓடத் துவங்கியது.

விமானம் ஓடுபாதையில் ஓடி நின்றது.

"யாரும் கீழே இறங்க முயற்சிக்கக்கூடாது. என் கைக்குப் பணப்பெட்டி வந்ததும் உங்களை எல்லாம் ரிலீஸ் பண்ணீருவேன், என்றான் இளைஞன்."

"பின் ட்ராப் சைலன்ஸ்" என்பார்களே அது போல அப்படியொரு அமைதி நிலவியது. பணப்பெட்டிய வாங்க யாரையாவது ஒருவரைக் கூப்பிடுவானே. எல்லோரும் என்னைக் கூப்பிட்டால் உடனே இறங்கி ஓடிவிட வேண்டும் என்று ஒரே நேரத்தில் எல்லோரும் நினைத்தார்களோ என்னவோ.

மரணத்தின் விளிம்பிலிருந்து 50 சதவீதம் தப்பிவிட்டதாகக் கருதியவர்கள், தங்கள் உடமைகளைக்கூட விட்டுவிட்டு இறங்கி ஓடத் தயாராக இருக்கை விளிம்பில் உட்கார்ந்திருந்தனர்.

யாராவது ஒருவர் வாங்க....என்ற இளைஞன் குரலுக்கு ஒரே நேரத்தில் எல்லோருமே எழுந்திருக்க..." நோ...நோ.. எல்லாரும் உட்காருங்க. நீங்க மட்டும் வாங்க என்று சியர்ஸ் டவர் பெரியவரைத் தோளைத் தொட்டு அழைத்தான்.

தன் அருகில் அந்தப் பெரியவரை உட்காரச் சொன்னான். விமானச் சிப்பந்தியை அழைத்து கதவைத் திறக்கச் சொன்னான்.
எல்லோரும் பொம்மைகளாய்ப் போயிருக்க ஒருவர், தலையைத் திருப்பாமலே சன்னலுக்கு வெளியே பார்த்தார். போலீஸ் வாகனங்கள், துப்பாக்கி வீரர்கள் என்று குவிந்திருப்பது தெரிந்தது.

என்னா நடக்கப் போகிறதோ என்று பெருமூச்சு ஒன்றை மெதுவாக வெளியேற்றினார்.

அடுத்த சில நிமிடங்கள் பயணிகள் எதிர்பாராத சில விசயங்கள் மளமளவென நடந்தது.

விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை வீரர்கள் மளமளவென்று விமானத்துக்குள் புகுந்தனர். சொல்லி வைத்தாற் போல அவர்களில் சிலர், வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த நான்கு பேர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பயணிகளில் பலர் கண்ணிமைகளை விலக்கிப் பார்த்து ஆச்சரியம் காட்டினர்.

அவர்கள் ஆச்சரியம் நீங்குவது போல, அப்போது உள்ளே நுழைந்த அமெரிக்க துணை அதிபர், " உங்கள் விமானப் பயணத்தில் ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துகிறேன்.

நான்கு தீவிர வாதிகளில் இருவர் பேசுவதைத் தற்செயலாய்க் கேட்டு அவர்கள் நால்வரையும் பற்றிய தகவல்களை எங்களுக்கு விமானி மூலம் தெரிவித்து தான் அதற்காக விமானத்தில் நடத்துகிற கடத்தல் நாடகத்தையும் சொன்னார். பிடிபட்ட தீவிரவாதிகள் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளாவார்கள்.

நீங்கள் எல்லோரும் இங்கே பத்திரமாக வந்து சேரவும், தீவிரவாதிகளைக் கத்தியின்றி ரத்தமின்றி முழுதாகப் பிடித்து ஒப்படைத்தும், அதைவிட அந்தத் தீவிரவாதிகளின் திட்டப்படி ஏற்படவிருந்த பெருத்த உயிர், பொருட் சேதங்களைத் தன் புத்தி சாதுர்யத்தால் தவிர்த்த அகிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்தியாவைச் சேர்ந்த தமிழகச் சகோதரர் நவீன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

வெறுமனே பாராட்டினால் போதாது. தீவிரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அதன்படி பத்து மில்லியன் டாலர்களை பரிசாக அரசு அளிக்கும். அவரை நம் அதிபர் கெளரவிக்க விரும்புவதால் அழைத்துச் செல்ல நானே நேரில் வந்திருக்கிறேன்....." என்று சொல்லிக்கொண்டு போக ஆங்கெழுந்த கைதட்டல் ஆரவாரம் விமானம் தாண்டி வெளியே கேட்டது.

வேலை தேடி வந்த இடத்தில் அரசாங்க விருந்தாளியாக துணை அதிபரோடு ஒரு " ஹீரோ " வைப்போல அரசு விமானத்தில் நவீன் ஏற முன்பின் தெரியாத அந்த அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரித்து அவனை நோக்கி கை அசைத்தனர்.


<>நூர்ஜஹானின் நிக்காஹ்!<>

            நூர்ஜஹானின் நிக்காஹ்!


" அலைக்கும் சலாம் "- தனக்கு சலாம் செய்தது யார் என்று கவனித்தபடியே மேஸ்திரி இப்ராகிம் வீட்டுக்குள் நுழைந்தார்.

யாரு கலிமுல்லாவா? அவர் கண்கள் ஆச்சரியத்தை விசிறியது.

"ஆமாங்க மேஸ்திரி" உட்கார்ந்திருந்த கலிமுல்லா எழுந்து கொண்டான்.

"அமருப்பா.

நானே உன்னப் பாக்க வரணும்னு இருந்தேம். ஒரு நடைய மிச்சப்படுத்திட்ட...யா...அல்லாஹ்.. என்ன வெய்யில் அல் ஹந்துலிலுல்லா... எம்மா நூரு தம்பிக்கு தாகத்துக்கு எதாச்சும் குடுத்தியா? " உள் பக்கம் நோக்கி குரல் கொடுத்தார்.


"தங்கச்சி மோர் குடுத்துச்சு"


"அப்டியா, கலீமு, நாளை பெரிய பள்ளிவாசல்ல ஜக்காத் கூடுது.
மதியம் தர்ஹா கமிட்டி மீட்டிங்கும் இருக்கு. காயல்,புதுப்பட்டிணம் எல்லாத்துல இருந்தும் வர்றாங்க. ஒரு அம்பது பேருக்கு பிரியாணி, தால்சாசெய்யணும். அதான் ஒங்கிட்ட சொல்லிட்டா என் கவல தீந்துடுமில்ல "

"மன்னிச்சுடுங்க மேஸ்திரி. அண்ணனுக்கு திடீர்னு ஒடம்பு
முடியாம ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். திடீர்னு தகவல்
வந்துச்சு. செலவுக்கு பணம் வேணும். அதான் ஒங்களப் பாத்து வாங்கீட்டுப் போலாம்னு வந்தேன்."

"அடடே அப்டியா? எவ்வளவு வேணும்?"

"ஒரு எறநூறு இருந்தா பரவாயில்ல"

"போற எடத்துல முன்னப் பின்ன செலவிருக்குமே போதுமா? இந்தா எதுக்கும் ஐநூறா கொண்டு போ..."

"ரொம்ப நன்றி மேஸ்திரி...நாளை..."

"அட.. அத நா பாத்துக்கிறேன். நீ கெளம்பு..."


இப்ராகிம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்ட'ரே தவிர அவருடைய மனமெல்லாம் நாளைய பள்ளிவாசல் ஏற்பாடுகளை பற்றியதில் உழன்று கொண்டிருந்தது.

" வாப்பா...சொன்னா கோவிப்பீங்க. இதெல்லாம் எதுக்கு நீங்க இழுத்துப்போட்டுட்டு செய்யணும். ஒங்க ஒடம்பு இருக்கதுக்கு
அலய முடியுமா? " என்ற மகளின் கேள்வி அவரின்
சிந்தனையிழைகளை அறுத்தது.


" நீ சொல்றது சரிதாம்மா நூரு. ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? நாப்பது வருஷமா செஞ்சிட்டு வர்றேன். மேஸ்திரிட்ட சொன்னா நடந்துரும்னு வர்றாங்க. அவங்க மொகத்துல அடிச்ச மாதிரி எப்படி முடியாதுன்னு சொல்றதும்மா?


" ஒடம்புல வலு இருந்துச்சு ஓடிஒடி செஞ்சீங்க. இந்த நோம்போட
இந்த வேலை யெல்லாம் விட்டுட்டு பேசாம ரெஸ்ட் எடுங்க?" -என்றாள் மகள் நூர்ஜஹான்.

" ஒரு சின்ன திருத்தம் நூறு, இந்த நோம்போடங்கிறத, ஒன்னோட நிக்காவோடன்னு மாத்திக்கம்மா!"

" ஆமா ஒங்களுக்கு 'உ' 'ஆ'ன்னா நிக்காவுல வந்து நிப்பீங்க" என்றாள் சற்று எரிச்சலாக.

" ஒனக்கு நிக்கா காலாகாலத்துல முடிஞ்சுருந்தா ஒம் பையனோ பெண்ணுக்கோ பதினஞ்சு வயசாவது ஆயிருக்கும். ம்..ம்ம் " என்ற அவரின் பெருமூச்சில் கவலை கலந்திருப்பதை அறிய முடிந்தது.

" எனக்கு நிக்காவே வேணாம். நிக்கான்ற வார்த்தையே எனக்கு புடிக்கல. ஒங்கள ஒழுங்காப் பாத்துட்டு இருந்தா... அதுவே எனக்கு போதும் வாப்பா..."

" ஒங்கம்மா ஒங் கவலையிலயே போய் சேந்துட்டா. ஆனா நா கண்ண நிம்மதியா மூடணும்னா ஒனக்கு ஒரு வழி செய்யாம முடியாதேம்மா "-

" முடியாதுப்பா. எனக்கு இந்த ஜென்மத்துல நிக்கா இல்லேன்னு ஆயிருச்சுன்னு போன வருஷமே முடிவு பண்ணீட்டேன். ஒன்னா ரெண்டா அத்தனை பேரும் சொல்லி வச்சமாதிரி சொல்லீட்டுப் போய்ட்டாங்க. என் மனசு வெறுத்துப்போச்சு.

இப்பல்லாம் எனக்கு நிக்கா ஆகலேங்கிறத விட எனக்காக நீங்க கவலப்படறத என்னால சகிக்க முடியல. அஞ்சு வேளை தவறாம தொழுறீங்க. தாராவியும் விடாம தொழறீங்க. அல்லாஹ்வோட கருணை இல்லீயே வாப்பா..."- அவளின் கண்களிலிருந்து கண்ணீர் சரம் சரமாய் உதிர்ந்து தெறித்து விழுந்தது.


" நூறு... அழாதம்மா.. அல்லாஹ்வோட சோதனைன்னு தாம்மா நெனைக்கேம். ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறவும் வராதும்மா. நா, தொழுதுட்டு வர்றது எனக்கு அது வேணும் இது வேணும்ங்கிறதுக்கு அல்ல. நம்மள விட இந்த சமுதாயத்துல எவ்வளவோ கீழான நெலயிலே இருக்கிறாங்க.

குடிக்க கூழுகூட இல்லாம வந்த நோய நீக்க வழியில்லாம... இப்படி இருக்கிற சமுதாயத்துல நம்மள அந்த மாதிரி எந்த கொறயும் இல்லாம வச்சுருக்கிற அல்லாவுக்கு நன்றி சொல்லத்தாம்மா தொழுவுறேன். நம் மனக் கொறையை அல்லாஹ் அறிவார். தள்ளீட்டே போறதுக்கு எதாவது காரணம் இருக்கும்மா. அல்லா நம்ம கை விட மாட்டாரும்மா..."


" என்னமோ சொல்லி என்னை அடக்கி வச்சிடுறீங்க. நானாவது அழுது கொட்டித் தீத்து விடுறேன். நீங்க வெளிய காட்டாம உள்ளுக்குள்ள அழுது புலம்பி வேதனப் படுறது எனக்கு நல்லாவே தெரியும் வாப்பா. வெளிக்கு என்னை சமாதானப் படுத்துறீங்க. இல்ல வாப்பா."

" ஆமாம்மா. இந்த கையாலாகாதவனால அதத் தான் செய்யமுடியுது... என்று எதையோ சொல்ல வந்தவர் அதை மாற்றி, ஒரு துண்டு குடும்மா, வெயில் சுள்ளுன்னு வர்றதுக்குள்ள மேலத் தெரு வரை போயிட்டு வந்துர்றேன்." என்றார்.


இப்ராகீம் சின்ன பட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து மேஸ்திரியாக உயர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த மேஸ்திரி பட்டம் மட்டும் ஒட்டிக் கொண்டது. ஆஸ்துமாவோடு போராடிக் கொண்டிருந்த மனைவி ஆமீனா பேகத்துக்கு, தம் ஒரே மகளுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது.

திருமணம் ஆன பாடில்லையே என்கிற கவலையும் சேர்ந்து ஆக்கிரமித்து மூன்று வருஷங்களுக்கு முன் இரவில் தூங்கப் போனவள் எழுந்திருக்கவே இல்லை.

குணத்திலும் அழகிலும் நூறு மார்க் கொடுக்கலாம் நூர்ஜஹானுக்கு.
32 வயதாகும் அவளுக்கு திருமணம் என்பது கனவாகத்தானிருந்தது. அவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்த இறைவன் ஒரேஒரு குறையை மட்டும் கொடுக்காமலிருந்தால் எப்போதோ திருமணம் முடிந்து போயிருக்கும்.


அன்னவாசல் அசரத் ஏற்பாட்டின் பேரில் நாளை நூரை பெண் பார்க்க வருவதாக இப்ராகிமுக்கு தகவல் வந்தது. மாப்பிள்ளை சொந்தமாக ஜவுளிக் கடை வைத்து இருக்கிறாராம். மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விபத்து ஒன்றில் இடது காலை இழந்த மாப்பிள்ளை சிராஜுதீன், திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டவரை இப்போது அசரத் ஒருவழியாக பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.


பெண்ணுக்கு வசதி முக்கியமில்லை. குணம் தான் முக்கியம்
என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்களாம். இதெல்லாம் அன்னவாசல் அசரத் சொல்லி அனுப்பிய தகவல்கள்.

" எதுக்கு வாப்பா இந்த விஷப் பரீட்சை? சொன்னாலும் கேட்க மாட்டேம்பீங்க. வர்றவங்களுக்கென்ன வாய் வலிக்காம சொல்லி
அழ வச்சுட்டுப் போய்டுவாங்க." அனுபவங்கள் தந்த வேதனையில் சொன்னாள் நூர்.

" எனக் கென்னமோ இந்த தடவை நல்லபடியா எல்லாம் முடியும்மா. நம்பிக்கை இருக்கு. சந்தோஷமா இரும்மா." ஒரு தந்தையின் ஸ்தானத்தில் அதைத்தானே சொல்லமுடியும்!

"வாப்பா... இதுவே எனக்கு முதலும் கடைசியுமா இருக்கட்டும்." முடிவாகவே சொன்னாள் நூர்.

காலையில் இருந்தே இப்ராகிம் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். மாப்பிள்ளை வீட்டார் வரப் போவது தான். தலப்பா கட்டி நாயக்கர் கடை பிரியாணி மாஸ்டரை கொண்டு வந்து நெய் மணமணக்க பிரியாணி ரெடியாகிக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு ·பாத்துமா, கீழத் தெரு மம்மாணி, ஜன்னத் என்று வீடே ஜன சஞ்சாரமாக இருந்தது.

ஒரு மணி சுமாருக்கு வந்தார்கள். மாப்பிள்ளையின் உம்மா, வாப்பா, சச்சா என பத்துப் பேர்கள் வந்திருந்தனர். எல்லோரையும் வரவேற்று சம்பிரதாயமாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இப்ராகிம் சாப்பிடட அழைத்தார். பிரியாணி சிறப்பா? இல்ல தால்சா சிறப்பா? வாய்க்கு வாய் புகழ்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

" இன்ஷா அல்லா இந்த நிக்கா முடிஞ்சு நம்ம சின்ன பட்டிணத்துக்கும் அன்னவாசலுக்கும் விட்டுப்போன தொடர்பு எல்லாம் மீண்டும் கை கூடணும். நூரு குணத்தில் தங்கம். நாங்க ரெம்ப சொல்லக் கூடாது. நாளைக்கு நீங்க சொல்லணும்." என்று தாம்பூலத் தட்டிலிருந்த வெற்றிலை பாக்கை மென்று கொண்டே பெரியபள்ளி முத்தவல்லி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை வீட்டுத்தரப்பிலிருந்து வந்த பெண்கள் நூர் இருந்த அறைக்கு நகர்ந்தனர்.

நூரை சுற்றி இருந்தவர்கள் விலக ஜமக்காளத்தில் அமர்ந்திருந்த நூர் வேகமாக எழ முயற்சி செய்ய, மாப்பிள்ளையின் தாயார், " பரவாயில்லை உட்காரும்மா என்று உட்காரச் சொல்லி அருகில் உட்கார்ந்தார். வழக்கமான மாப்பிள்ளை வீட்டாரின் விசாரிப்புகள் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறு வட்டமேஜை கிசுகிசுப்புகள் எல்லாம் முடிந்த பின், எல்லோர் கண்களிலும் திருப்தி தெரிந்தது.

" எங்களுக்கு ஒன்ன புடுச்சிருக்கு. சிராஜுக்கும் நிச்சயம் பிடிக்கும். நிக்காவே வேணாம்னு இருந்தான். அது ஒனக்காகத்தான் போலிருக்கு. ஜவுளிக் கடைக்குப் பின்னாடியே வீடு இருக்கு. நிக்கா முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும்தான் அங்கு இருக்கனும்.

நாங்க பக்கத்து கிராமத்துல இருக்கோம். அவனுக்கு லாரி ஆக்சிடண்ட்ல கால் தான் போயிருச்சு. அவனுக்கு நீதான் கையும் காலுமா இருந்து எல்லாத்தையும் கவுனிச்சுக்கனும்," என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள். என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நூர் தலையை மட்டும் ஆட்டினாள்.

மனசுக்குள் இனம்புரியாத சந்தோஷம் பொங்க, உற்சாக மத்தாப்பூக்கள் மலர்ந்திருப்பதை அவள் முகம் வெளிச்சமிட்டுக் காட்டியது. எத்தனை வருடக் கனவுகள்? ஏக்கங்கள். உப்புக்கரித்த கன்னங்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் ஆர்ப்பாட்டமாக இறங்கி இனிக்க வைத்திருக்கிறது. மகிழ்ச்சிப் பிரவாகம் அவளுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்குள் பரவசப்பட்டுப் போயிருந்தாள்.

" அப்ப நாங்க கெளம்புறோம்."- எல்லோரும் எழுந்து கொண்டார்கள். திடீரென அவர்கள் எழுந்ததும், சுய நினைவுக்கு வந்த நூர், தட்டுத் தடுமாறி கையை ஊன்றி எழுந்த போதுதான் எல்லோரும் அவளை முழுதாக கவனித்தனர்.


" அட இதென்ன? ஒனக்கு கால் இப்புடீன்னு சொல்லவே இல்லியே!? நல்ல வேளை இன்ஷா அல்லாஹ் என்னோட மகனை காப்பாற்றினார்." என்று உரத்துச் சொல்லிய மாப்பிள்ளையின் அம்மா வெளியே வந்தவர், பெண்ணுக்கு கால் ஒச்சம்னு சொல்லவே இல்லையே. எம் மகனுக்கும் கால் ஒச்சம் தான். அதுக்காக நாங்க நொண்டிப் பெண்ணை எடுக்க மாட்டோம்.

ஒரு வார்த்தை சொல்லாம நிக்காவ முடிச்சிறப் பாத்தீங்களே. நல்ல வேளை. எந்திரிங்க போவலாம்..." என்றார்.

இப்ராகிம் எதோ சொல்ல வந்தவரை, " போதும் நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு இந்த நிக்காவில் இஷ்டமில்லை...வாங்க போகலாம்..." விடுவிடுவென்று எல்லோரும் வெளியேறிவிட்டனர்.

நூருவின் கதறல் அங்கிருந்தவர்களை உருக்குலையவைத்தது. வாராது போல் வந்த திருமணம், நிமிஷங்களில் நிர்மூலப்பட்டுப் போயிற்றே. அவள் மனதிற்குள் பூட்டிச் சிறை வைத்திருந்த ஏக்கங்களுக்கு விடிவு வந்துவிட்டதென எண்ணி ஆனந்தித்துப் போயிருந்த அந்தப் பொழுதுகளுக்கு அவ்வளவு சீக்கிரமாகவா ஆயுள் குறைவு நேர்ந்துவிட்டது?

அலைஅலையாய் ஆர்ப்பரித்த சந்தோஷங்கள் நொடியில் அடங்கிப் போனது. கண்ணீர் துளிகள், பன்னீர்துளிகளாக மாறிவிட்டது என்கிற
ஈர நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவளை, வக்கிர வார்த்தைக் கொதி நீரில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். அவள் கனவுகள் வெடித்துச் சிதறியதில் வெளிப்பட்ட விம்மல்கள்... வேதனை கண்ணீர்த் துளிகள் கல்லையும் கரைத்து விடும்;

அவளின் கண்ணீர் துளிகளுக்கு மட்டும் சக்தியிருந்தால், திராவகத் துளிகளாக மாறி, வார்த்தைகளில் அக்கினியை விசிறிச் சென்றவர்களை வீழ்த்தியிருக்கும். நொறுங்கிச் சிதறிய அவள், இரத்தக் கண்ணீர் வடித்ததில் முகமே வீங்கி விட்டது. ஒரு மென்மையான மலரை வன்மையாகச் சிதைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

" நூரு அழாதம்மா. ஒனக்குன்னு ஒருத்தன் இனிமே பொறக்கப் போறதில்ல. ஒனக்குன்னு பொறந்தவன அல்லாஹ் கொண்டுவந்து அவரா நிறுத்துவார். நீ அழாதம்மா..." என்று முத்தவல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.

"பாய் அவள அழ விடுங்க; அழட்டும்.....அழட்டும் பாய்...அழட்டும்...அழுதாத்தான் அவ மனசு ஆறும். நிக்காவே வேணாம்னவள நான் தான்...நாந்தான்...என்னாலதான். ஆமீன் இதெல்லாம்... இந்தக் கொடுமையெல்லாம் பாக்க வேணாம்னுதான் போயிட்டியாம்மா..." என்று -சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார் இப்ராகிம்.

யாரைத் தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப் படுத்துவதில் தோற்றுப் போய் இருந்தார்கள்.

ஒரு கால் ஊனம் என்பது பெரும் குறையா? மனம் எப்படி? குணம் எப்படி? அதெல்லாம் பாக்க வேணாம்?

திருமணத்துக்கு முன்னால ஊனப்பட்டவளை வேண்டாண்டு சொல்றாங்க. இதுவே திருமணமாகி விபத்தில ஒரு காலோ, கையோ ஊனமானா அப்போ என்ன செய்வாங்க. மனைவியே வேண்டாம்ன்னு நிராகரிச்சுடுவாங்களா!? என்ன ஒலகமிதுஎன்று கலீமுல்லா மனம் பொறுக்காம இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான்.


அப்போது...

" மேஸ்திரி...மேஸ்திரி " என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்த பக்கத்து வீட்டுச் சிறுவன், " ஒங்க வீட்டுக்கு வந்தவங்க மீது சந்தை ரோட்டுலருந்து வந்த பஸ் மோதீருச்சு. ஒரே கூட்டம்" என்றான் சிறுவன்.

"யா அல்லாஹ்... இதென்ன சோதனை..." என்ற இப்ராகிம் முத்தவல்லியை கூட்டிக் கொண்டு ஓடினார்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்குத்தான் தலையில் பலத்த அடி. வாப்பாவிற்கு முதுகிலும் தோள்பட்டையிலும் காயம். அரசு மருத்துவமனையின் கலவையான மருந்து நெடி மூக்கைத் துளைத்தது.

" ஜமீலா உறவுக்காரங்க யாரு?"- என்றபடியே எமர்ஜன்சி வார்டிலிருந்து டாக்டர் வேகமாக வந்தார்.

இப்ராகிமும் முத்தவல்லியும் எழுந்து நின்றார்கள்.

"யார் நீங்களா... ஓ பாசிட்டிவ் ரெண்டு பாட்டில் வேணும். உறவுக்காரங்கள்ள கெடச்சா நல்லது.

இல்ல லயன்ஸ் கிளப்ல ட்ரை பண்ணுங்க. ஒரு மணி நேரத்தில எங்களுக்கு வேணும். இல்லன்னா நாங்க ஒன்ணும் செய்ய முடியாது என்ற டாக்டர், அரசாங்க மருத்துவருக்கேயுள்ள இயந்திரத் தனத்தோடு, பதிலைக் கூட எதிர்பாராமல் போய்விட்டார்.

" என் மகளோட இரத்தம் 'ஓ' பாசிட்டிவ் தான் பத்து நிமிஷத்துல வந்துர்றேன் " என்று முத்தவல்லியை இருக்க வைத்துவிட்டு இப்ராகிம் கிடைத்த டாக்சியில் வீட்டுக்குப் பறந்தார்.

* * *

" என்னை மன்னிச்சுரும்மா. ஒன்னை வேணாம்னு வந்தது அல்லாவுக்கே பொறுக்கல. கை மேல பலனக் கொடுத்துட்டார் பாத்தியா?" -என்றாள் ஜமீலா, மாப்பிள்ளையின் அம்மா.

" நீங்க பெரியவங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது." என்றாள் நூர்.

" உன் ரத்தம் குடுத்து என்னக் காப்பாத்தியிருக்க... நீ தான் என்னோட மருமக... இல்ல... என் மக " என்றாள் ஜமீலா.

இப்ராகிம் கண்கள் பனித்தன.

அப்போது சிராஜ், ஜமீலாவையும் நூரையும் நோக்கி 'டக்டக்' என கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.

" ஒனக்குன்னு பொறந்தவன அல்லாஹ் கொண்டு வந்து அவரா நிறுத்துவார்னு " முத்தவல்லி சொன்ன வாக்குப் பலித்துவிட்டது.

இனி நூர் அழ மாட்டாள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப் படுவதில்லை, அரசு ஆஸ்பத்திரிகளிலும் கூட நிச்சயிக்கப்படுகிறது!!
                                   <>**********<>

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது