KathaiKathaiyaam

Sunday, November 30, 2008

உணவு மழைத் தீவு :15 :


"இவ‌ர் வ‌ந்து ஒரு செய்தியைச் சொல்கிறார். இந்த‌ நேர‌த்தில் ந‌ம‌க்கு இது ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌த்தான் இருக்கிற‌து. ந‌ம் தீவுக்கு கிழ‌க்கே ஒரு க‌ப்ப‌ல் ந‌ங்கூர‌ம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிற‌தாம். என்னுடன் ஓரிருவர் வந்தால் அவர்களிடம் நாம் பறவைத்தீவு போக உத‌வி கேட்டுப்பார்க்கலாம்," என்றார் தீவு நிர்வாக‌ அதிகாரி.
எல்லோரின் முகங்களிலும் பிரகாசமான ஒளி தோன்றியது. அதில் ஒருவர்,"எனது விசைப் படகு க‌ட‌லுக்கு அருகில் தான் இருக்கிற‌து. அதில் உட‌னே போக‌லாம்" என்று சொல்ல‌ உற்சாக‌மாக‌ சில‌ர் தீவு நிர்வாக‌ அதிகாரியுட‌ன் கிள‌ம்பின‌ர்.

ப‌த்துபேர்க‌ளுட‌ன் விசைப்ப‌ட‌கு காற்றைக் கிழித்துக்கொண்டு க‌ட‌லில் விரைந்த‌து. விசைப்ப‌ட‌கின் உச்சியில் வெள்ளைக்கொடி காற்றில் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்டிருந்த‌து.


கப்பலில் இருப்பவர்கள் கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான் தீவு நிர்வாக அதிகாரி வெள்ளைக்கொடியைப் பறக்க ஏற்பாடு செய்திருந்தார்.
உணவு மழைத் தீவு விசைப்ப‌டகுகள் டீசல், பெட்ரோலில் ஓடுபவை அல்ல; காற்றைச் சுவாசித்து ஓடும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீனப் படகுகள். டீச‌ல் தீர்ந்துவிட்ட‌து; அத‌னால் ப‌ட‌கு ந‌டுவ‌ழியில் நின்றுவிட்ட‌து என்ற‌ பேச்செல்லாம் இல்லை.
அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் எதுதான் சாத்திய‌ம் இல்லை?
க‌ல்லையும் க‌ல்லையும் உர‌சி தீப்பொறி உண்டாக்கிய‌ கால‌த்திலிருந்து எத்த‌னை எத்த‌னை வ‌ள‌ர்ச்சி? விய‌ப்பு.....விய‌ப்பாக‌த்தான் இருக்கிற‌து, ஒவ்வொன்றுமே!
படகு கப்பலை நெருங்க,நெருங்க க‌ப்ப‌ல் சிறிது சிறிதாக‌ பெரிதாகத் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. தீவு அதிகாரி க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி உத‌வி கேட்ப‌து? ம‌றுத்துவிட்டால‌ என்ன‌ செய்வ‌து? என்ற‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டு இருந்தார்.
தீவில் ஆயிர‌ம் வீடுக‌ள் என்றாலும் குழ‌ந்தைக‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் எல்லாம் சேர்த்து 4642 பேர்கள் இருக்கிறார்கள் என்று குடியிருப்புப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். ந‌ம்மிட‌ம் இருக்கும் ப‌ட‌குக‌ளோ 24தான்.

அதிக‌ப‌ட்ச‌ம் ப‌ட‌குக்கு 25 பேர்க‌ள் என்றாலும் கூட‌ சுமார் 500பேர்க‌ள் ம‌ட்டுமே போக‌ முடியும். க‌ப்ப‌ல் ச‌ர‌க்குக் க‌ப்ப‌ல் போல‌ இருக்கிற‌து. அப்ப‌டியே ந‌ம் நிலையை எண்ணி ஒத்துக்கொண்டாலும் நாலாயிர‌ம் பேரை ஏற்றிச்செல்ல‌ இய‌லுமா என்று தெரிய‌வில்லை, என்ற‌ நியாய‌மான‌ க‌வ‌லையை வெளிப்ப‌டுத்தினார் தீவு நிர்வாக‌ அதிகாரி.

அதே நேர‌த்தில் க‌ப்ப‌லிலிருந்து ஒலி ஒன்று கேட்க‌வே எல்லோரும் க‌ப்ப‌லைப் பார்க்க‌ க‌ப்ப‌ல் நின்ற‌ இட‌த்திலிருந்து மெல்ல‌ வேக‌ம் எடுத்துக் கிளம்பிய‌து.
எல்லோரும் அதிர்ச்சியோடு க‌ப்ப‌லைப் பார்த்த‌ன‌ர்.
இன்னும்பொழியும்.....!

Saturday, November 29, 2008

உணவு மழைத் தீவு - :14 :

கதிரவன் மெல்ல தன் கதிர்களை இதமாகப் படரவிட்டிருந்த இளங்காலை நேரம்; எலோருக்குமான விடிவுகாலமாக அந்த விடியலை எண்ணினார்கள். வானத்தையே இதுவரை நம்பியிருந்த உணவு மழைத் தீவு மக்கள் இப்போது முதன்முறையாக உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருந்தனர்.
தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை;தாம் பெற்ற பிள்ளைகள் பசியாற ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கவலையில் இருந்தனர். பெரியவர்கள் சிலர் கூடிநின்று கடலில் மீன் பிடிக்க முடியுமா? என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தீவின் நிர்வாக அதிகாரி அங்கே வந்து ஒரு செய்தியைச் சொன்னார். அது அவர்களுக்கு பசியாற்ற உதவும் செய்தியாக இருந்தது.



























"நாமும் நம் பிள்ளைகளும் பசியாற‌ கடல் அன்னை ஒரு வழி காட்டியிருக்கிறாள். நம் தீவுக்கு வழக்கமாக இந்த நேரத்தில் முட்டையிடுவதற்காக வரும் கடல் ஆமைகள் வரத் துவங்கியுள்ளது. நம் தேவைக்கு கடல் ஆமைகளைக் கொண்டுவந்து சமைத்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவோம்.












அதன் இரத்தம் சமைக்கலாம்; கறியும் உணவாகும். இதைப் பொறுப்பெடுத்து சிலர் சேர்ந்து செய்யுங்கள். நம்மில் சிலர் கடலைக் கடந்து பறவைத் தீவை அடைய நம்மிடம் சேதம் ஆகாத படகுகள் இருக்கிறதா? இல்லையானால் தீவில் உள்ள மரங்களை வெட்டி தெப்பம் போலச் செய்து பயணப்பட முடியுமா என்று பார்ப்போம்"என்று தீவு அதிகாரி சொன்னதும் கவலைகளால் வாடியிருந்த முகங்கள் கொஞ்சம் மலரத் துவங்கியது.


தீவு மீண்டும் சுறுசுறுப்பானது; கடல் ஆமைகளைக் கொண்டுவர சிலர் சென்றனர். சிலர் கடல் ஆமையை வைத்து பொது இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடுகளில் மூழ்கினர்.


இதே நேரத்தில் தீவு அதிகாரியுடன் படகுகளை ஒரு குழு சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பயன்படாது என்று பலபடகுகள் கழித்துக்கட்டப்பட்டது; தீவிலிருந்த வீடுகளில் கடைசியில் தேறியது 24 மோட்டார் படகுகள். சிறிது பழுது பார்த்தால் ஓடும் என்ற நிலையிலிருந்தது. தங்களிடம் உள்ள கருவிகளை வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.


பசியில் வாடியிருந்த சின்னஞ்சிறிசுகளுக்கும், வேலைசெய்து களைத்துப்போயிருந்த‌ பெரியவர்களுக்கும் ஆமை இரத்தமும் கறியும் பரிமாறப்பட்டது. பசியின் கோரப்படியிலிருந்தவர்களுக்கு உணவு தேவாமிர்த‌மாக உள்ளே போனது. வாடிவதங்கிய பயிருக்கு கொஞ்சம் நீர் ஊற்றினால் கொஞ்ச நேரத்தில் எப்படி செழித்து எழுந்து நிற்குமோ அப்படி எல்லோரும் உயிர் ஊறிய உணர்வில் தெம்பாகக் காணப்பட்டனர்.


ஒரு பெரிய‌ ப‌டையே துரித‌மாக‌ ப‌ட‌குக‌ளை செப்ப‌னிடும் ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌து. தீவின் நிர்வாக‌ அதிகாரியும் தீவின் முக்கிய‌பிர‌முக‌ர்க‌ளும் ப‌ற‌வைத் தீவைச் சென்ற‌டைவ‌து குறித்து விரிவான‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். அப்போது தீவைச் சேர்ந்த‌வ‌ர் அர‌க்க‌ப்ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தார். நேராக‌ தீவு அதிகாரியின் காதில் கிசுகிசுத்தார். சுற்றி இருந்த‌வ‌ர்க‌ளோ என்ன‌மோ ஏதோ என்று திகிலோடு நிர்வாக‌ அதிகாரியை நோக்கின‌ர்.

இன்னும்பொழியும்.....!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது