KathaiKathaiyaam

Saturday, March 11, 2006

இன்பவல்லி நீ எனக்கு

<>இன்பவல்லி நீ எனக்கு...!<>


ருட்டு வெளிச்சத்துக்கு விடை தந்திருந்தது.
விண்ணும் மண்ணும் இருள் கவிந்திருக்க ராஜமாளிகையிலிருந்து
இரண்டு உருவங்கள் வெளிவந்ததது. தட்டுத் தடுமாற்றம்
இல்லாமல் நடந்து தென்வடலாக நீண்டு இருந்த ஆழி
மண்டபத்துக்குள் நுழைந்ததும் கதவு ஓசையின்றி மூடிக் கொண்டது.

கிசுகிசுத்த குரலில் இரண்டு உருவங்களும் எதைப் பற்றியோ
விவாதித்து சட்டென ஒரு முடிவுக்கு வந்ததும் பின்னர் ஒரு
உருவம் கொல்லைப் புற வழியாக வெளியேறி மரத்தடியில்
கட்டப்பட்டிருந்த புரவியை நோக்கிச் சென்றது. கண்ணிமைக்கும்
நேரத்தில் புரவி புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது.

இதை ஆரம்பத்திலிருந்து ஒன்றுவிடாமல் கவனித்த மூன்றாவது
உருவம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ராஜமாளிகைக்குள் நழுவியது.

அப்போது...முரட்டுக் கரம் ஒன்று அந்த உருவத்தின் தோள்பட்டையை
இறுகப் பற்றி நிறுத்தி, யார் ? என வினவவும் செய்தது.

"சாரங்கன்" என்று ஒற்றை வரிப்பதில் ஒன்று உதிர்ந்தது.

" ஓ! மெய்காப்பாளரா? என்ற குரலில் சற்றே ஏளனம் கலந்திருந்தது.

சாரங்கனின் மெளனத்தை தொடர்ந்து, இருட்டில் காற்றாடச் சென்று வருகிறீரோ என்ற வினாவிற்கும் "ஆம்" என்ற ஒற்றைச் சொல்லையே பதிலாகத் தந்தான் சாரங்கன்.

"அரசனிடம் மெய்க்காப்பாளனாக இருப்பதை விட ஒற்றர் படைத் தலைவராக உம்மிடம் ஏராள தகுதிகள் உள்ளது" என்று சொல்லி சேனாதிபதி சேரலாதன் சிரித்தான்.

"இளவரசனை அழைத்து வந்து விட்டீர்களா?" என்று சாரங்கன் கேட்டதொனி அனாவசியப் பேச்சுக்குச் செல்ல விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது போலிருந்தது.

"நானும் புலி குத்தி, நீலிமலை எல்லாம் சென்று, சுற்றி அலைந்து
திரிந்து சல்லடை போட்டுப் பார்த்துவிட்டேன். இளவரசர் அந்தப்
பக்கம் வேட்டைக்குச் சென்றதற்கான அறிகுறியே இல்லை. நானும் மற்றவர்களும் இப்போதுதான் திரும்பினோம்."

"மன்னர் இன்னும் நினைவு திரும்பாத நிலையிலேயே இருக்கிறார்.
இப்போது என்ன செய்வது?"

"அரண்மணை வைத்தியர் என்ன சொல்கிறார்?"

"இருபது நாழிகை கழிந்த பின் தான் எதையும் சொல்லமுடியும் என்கிறார்."

"மன்னருக்கருகில் யார் இருக்கிறார்கள்?"

"இளவரசி இன்பவல்லி இருக்கிறார்." - இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் மன்னர் மகேந்திர பூபதி படுத்திருந்த அறை முன் வந்து விட்டிருந்தனர்.

வழக்கமாக இரண்டு காவலாளிகள் இருக்குமிடத்தில் இருபதுக்கும்
மேற்பட்ட ஆயுதந்தாங்கிய காவலாளிகள் ஓசையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். மெய்க்காப்பாளரையும் சேனாதிபதியையும் வாயிலிலிருந்த காவலாளி சிரம் தாழ்த்தி வணங்கி, இளவரசியார் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றான்.

எங்களைச் சொல்லியிருக்க மாட்டார் என்று உள்ளே நுழைய
சேனாதிபதி முற்பட்டபோது,

"சற்றுப் பொறுங்கள் சேனாதிபதி " என்று சொல்லிய சாரங்கன்
நாங்கள் இருவரும் வந்து காத்து இருப்பதாக இளவரசியாரிடம்
போய்ச் சொல், என்றார் வாயிற் காப்போனை நோக்கி.

சேனாதிபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"மெய்க்காப்பாளரை மட்டும் இளவரசியார் வரச் சொல்லுகிறார்கள்"
என்றான், உள்ளே சென்று திரும்பிய வாயிற்காப்போன்.

" மன்னிக்கவும் சேனாதிபதி அவர்களே இதோ வந்து விடுகிறேன்"
என்று சாரங்கன் உள்ளே நுழைந்து மறைந்தான்.

சேனாதிபதி பற்களை நறநறவென கடித்துக் கொண்டே அந்த
இடத்தை விட்டு வேகமாக வெளியேறி, ராஜமாளிகையின் வெளி
வாயிலுக்கு வந்தான்.

அதே நேரத்தில் சேனாதிபதியின் வலதுகரமான வீனசேணன் வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். வந்தவன், பதற்றத்தோடு சேனாதிபதியின் காதில் கிசுகிசுத்தான். சேனாதிபதி மிகுந்த கலவரத்தோடு, வீனசேணனோடு கிளம்பினான். அவர்கள் அறியாமல் இரு விழிகள் பின் தொடர்ந்தது. அமைதியான அந்த மூன்றாம் ஜாம வேளையில் ராஜமாளிகை பலவிதமான குழப்பங்களிலும், சதிவலைப் பின்னல்களிலும் சிக்கித்
தவித்துக் கொண்டிருந்தது.


விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது ராஜமாளிகையைச் சுற்றி
அகழி போல குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும் சூழ்ந்திருந்தனர். ரகசிய கட்டளைகளைப் பிறப்பித்த கம்பீரத்தோடு,
தனது சமிக்ஞை கிடைத்ததும் வீரர்களை வழி நடத்தும்படி சொல்லிவிட்டு ராஜமாளிகைக்குள் நுழைந்தது அந்த உருவம்.

மன்னர் மகேந்திர பூபதியின் சயன அறைக்குள் அத்துமீறி அந்த
உருவம் நுழைய முற்பட்டபோது வாயில் காவலர்கள் குத்தீட்டியை
குறுக்கே நீட்டி தடுத்தி நிறுத்த உருவம் உடைவாளை உருவி
"விலகுங்கள்" என கர்ஜிக்க சிறு சலசலப்பு எழுந்தது.

அப்போது...

"யாரங்கே... சேனாதிபதியை உள்ளே அனுப்புங்கள்," என்று இளவரசியிடமிருந்து குரல் வந்தது.

சரேலெனப் புயலாக உள்ளே நுழைந்த சேனாதிபதியிடம், "அப்படி என்ன அவசரம் சேனாதிபதி அவர்களே? என்று இளவரசி இன்பவல்லி எதிர்
கொண்டு கேட்டதும், வந்த வேலையை மறந்தான். இளவரசியை இமைக்காமல் பார்த்தான்.

நிலவின் ஒளி கொண்டு தீற்றப்பட்ட ஓவியமா? அல்லது கை தேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பமா? அதரங்கள் அசைவில் அகிலமே அடிபணியுமே ! விம்மி எழுந்த மார்புகள், விழித் திரைக்குள் வளைய
வளைய வரும் கருவிழிகள், தரை தொடும் ஆலம் விழுதாய்
கார்கூந்தல்... காண்போரைக் கிறங்கச் செய்யும் அவள் பேரழகில்
சேனாதிபதி சொக்கிப் போய் நின்றதில் ஆச்சரியம்
ஏதுமில்லைதான்.

இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்...என்று சேனாதிபதி வாய்
விட்டுச் சொல்லவும் செய்தான்.

என்ன சேனாதிபதி சிலையாக நின்றுவிட்டீர்கள்? என்று இளவரசி கேட்டபோது சுய நினைவு பெறாமலே
"இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்" என்று சற்று உரக்கவும்
சொன்னான்.

என்ன சேனாதிபதி யாரிடம் பேசுகிறீர்கள் என்பது நினைவு இருக்கட்டும், என்று இளவரசி சீற்றமாகச் சொல்லவே சுய நினைவுக்குத் திரும்பினான் சேனாதிபதி.

இன்பவல்லி இனி நீ என் இதயராணி'; என் இதய சிம்மாசனத்தில்
எப்போதோ அமர்ந்து விட்டாய். நான் சொல்லியதில் தவறேதும்
இல்லை இன்பவல்லி, என்றான் சேனாதிபதி.

"மதி கெட்டவனே முதலில் இங்கிருந்து வெளியே போ"

"ஆம். இந்த மதிமுகத்தாளின் அழகில் மயங்கி மதி கெட்டுத்தான் போய்விட்டேன். சொல்கிறேன் கேட்டுக் கொள்: நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனக்கு மாலையிடப்போவது நாந்தான்.

சேனாதிபதியை எப்படி மணப்பது என்று யோசிக்கிறாயா?
கவலையை விடு நாளை நீ மணக்கப் போவது மகேந்திரபுரி
மன்னனை! என்ன விழிக்கிறாய்? சேனாதிபதிதான் நாளை,
மகேந்திரபுரி நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படப் போகிறான்."

" விசுவாசமற்ற கயவனே பகற் கனவு காண்கிறாய். இனியும் இங்கு
நின்று கொண்டிருக்காதே. ஓடி உயிர் பிழைத்துக்கொள். இல்லையேல்
உன் உடம்பில் தலை இருக்காது."

" இன்பவல்லி...இவ்வளவு அழகாக உன்னால் மட்டுமே
கோபப்படமுடியும். அழகுப் பதுமையே! ஆவேசப்படாதே.

வேட்டையாடப் போன இளவரசன் திரும்பி வரப் போவதில்லை.
எனது ஆட்கள் இளவரசனின் கதையை முடித்து இருப்பார்கள்.
அரசனின் அந்திம வேளை நெருங்கிவிட்டது. இப்போது அவரது
ஆயுளை முடித்துவிடப் போகிறேன். விடிந்தால் இந்த மகேந்திரபுரி மன்னனில்லாமல் தவிக்கக் கூடதல்லவா? அதனால் இந்த சேனாதிபதி நாட்டின் மன்னனாகத் தடை ஏதும் இல்லை.

சண்டித்தனம் செய்யாமல் என்னை ஏற்றுக்கொள். இனியும் நீ
சாரங்கனை அடைய கனவு காணாதே. நீ இணங்கவில்லை
என்றால் இன்பவல்லி ... நீயாக இணங்கும் வரை பாதாளச்
சிறையில் அடைத்துவிடுவேன். நீ புத்திசாலியும்கூட... புத்தம்
புது உலகு படைப்போம் வா... என்று இன்பவல்லியின் கையை எட்டிப் பிடித்தான்.

அப்போது...

"நில்... பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கிப் போன இவனைக்
கைது செய்யுங்கள்." - இளவரசன் வீரர்கள்புடைசூழ வந்தான்.
சரேலென சேனாதிபதி வாளை உருவிக்கொண்டு இளவரசியை
நோக்கிப் பாய்ந்தான். ஆனால் அதற்குள் இளவரசன் மின்னலெனப்
பாய்ந்து சேனாதிபதியைப் பிடிக்க வீரர்கள் நாலாபுறமும் சேர்ந்து
பிடித்துக் கொண்டனர்.

"சாரங்கன், உன் குள்ளநரிச் சதிவேலையை கண்டு பிடித்து
மன்னரிடமும் என்னிடமும் சொல்லிவிட்டார். எதிரி நாட்டோடு
கள்ள உறவு கொண்டு சூழ்ச்சியாக சதி வலை பின்னியதை
அறிந்தோம். நான் வேட்டைக்குச் செல்வதாக போக்குக்
காட்டிவிட்டு அரண்மனைக்கே திரும்பி விட்டேன்.
மன்னர் திடீர் உடல் நலக் குறைவால் படுத்தப
டுக்கையாகிவிட்டார் என்று அரண்மனை வைத்தியர் மூலம்
சொன்னதும் நாடகம் தான்.

எதிரி நாட்டுப்படையை வரவழைத்து நீ எங்களை கைது செய்யும்
திட்டத்தை தவிடு பொடியாக்க நாங்கள் செய்த திட்டம் தான் இது.

ராஜமாளிகையைச் சுற்றி உன்னால் நிறுத்தப்பட்டிருந்த மகத
நாட்டுப் படை வீரர்கள் இப்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளனர்.
நாட்டைக் கைப்பற்றத் துணிந்த நீ இளவரசி மீதும் கை வைக்கத்
தயாராகி விட்டாய். உனக்கு என்ன தண்டனை என்பதை மன்னரே
சபையில் நாளை அறிவிப்பார்.
***

"சுய நலத்துக்காக நாட்டையே எதிரிக்கு காட்டிக் கொடுத்து பணயம்
வைக்கத் திட்டம் தீட்டியது, என்னையும் இளவரசனையும் கொல்லத் துணிந்தது, இளவரசியிடம் வரம்பு மீறி நடந்ததையும் வைத்து சுலபமாக உனக்கு மரணதண்டனை கொடுக்கலாம். தான் விசுவாசமற்றுப் போனதை நாளும் எண்ணி உணரவேண்டும் என்பதற்காக, பாதாளச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்க ஆணையிடுகிறேன், என்றார் மன்னர் மகேந்திர பூபதி.

"இந்த அரசவையின், மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் இன்னொரு
முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். எனது மெய்காப்பாளர்
சாரங்கனின் மதிநுட்பத்தால் சேனாதிபதியின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. மகேந்திர புரி நாடு எதிரி வசமாகாது
காக்கப்பட்டது. எங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டது. இதற்குக்
காரணமான மெய்காப்பாளரை யாம் பாராட்டுவதோடு
அவரையே சேனாதிபதியாகவும் நியமிக்கிறேன்.

புதிய சேனாதிபதிக்கு என் அன்புப் பரிசாக, என் இனிய மகள்
இன்பவல்லியை பரிசாக அளிக்கவும் முடிவு செய்துள்ளேன்,
என்றார் மன்னர் மகேந்திரபூபதி.

மன்னரின் எதிர்பாராத அறிவிப்பு சாரங்கனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மாடத்திலமர்ந்திருந்த இன்பவல்லியை நோக்கிப் பார்வையைச் சுழல விட்டான் சாரங்கன். இன்பவல்லியும் சாரங்கனை நோக்க அங்கே...வேல் விழியும், வாள் விழியும் கலந்தன.
<>()<>

பொய் வழக்குகள்

<>பொய் வழக்குகள்<>
<0>
"உன் பெயரென்ன?"

"............"

"டேய், வாயில என்ன கொழக்கட்டையா வெச்சிருக்க..ஒம் பேரு என்னடா?

"து....ரை.."

"தொரை....வாயைத் தெறக்கமாட்டீங்களோ...அப்பா பேரு, அட்ரஸ் என்ன?"

"........."

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒன்ன...."

" ஏய்...செவன் நாட் சிக்ஸ்... இங்க வாய்யா...."

"அய்யா..வந்துட்டம்யா.."

"ஏய்யா, நாளைக்கு கோர்ட்டுக்கு எத்தனை கேஸ் தேத்திவச்சிருக்க?

"அய்யா கேசு ரெடிபண்ணீர்றங்கய்யா..."

"எப்பக் கேட்டாலும் இப்படியே சொல்லுய்யா...இப்ப நான் ரிப்போர்ட் எழுதணும். இல்லைன்னு எழுத முடியுமா? எழுதுனா, என்னய்யா ஸ்டேசன்ல வேலை செய்யிறியா? செறைக்கிறியாம்பாரு மேலதிகாரி....?"

"அய்யா..ஒரு கேசுன்னு எழுதிக்குங்க அய்யா..அஞ்சு நிமிசத்துல கேசு டீட்டெய்ல்ஸ் கொண்டாறேங்கய்யா?"

"ம்ம்ம்ம்...எல்லாம் வெறட்டுனாத்தான் வேலையாகுது..." எஸ்.ஐ.கோபால் என்ற கோவாலு சற்றே நிம்மதியாய் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து கொள்கிறார்.

செவன் நாட் சிக்ஸ் என்ற ஏட்டு ஏகாம்பரம் எஸ்.ஐ.கோபால் கொடுத்த வேலையை நிறைவேற்ற துரையை நெருங்கினார்.

"எலே, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. எனக்கும் கேசு வேணும். பிக்பாக்கெட் கேசுல இப்ப உள்ள போகப்போற.

ஓம் தலையெழுத்து..நான் என்ன செய்ய?" என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று கோர்ட்டுக்கான கச்சாத்து தயார் பண்ணும் வேலைகளில் எறங்கிவிட்டார்.

அக்யூஸ்ட் நேம்....துரை...·

பாதர் நேம்...நாட் நோன்...

அட்ரஸ்...நாட் நோன்....

ரீசன்..பிக்பாக்கெட்...

காம்பரம் மளமளவென்று படிவங்களை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

தலைகவிழ்ந்தபடி துரை அந்தக் காவல் நிலையத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் மனம் மட்டும் அங்கில்லை; "பாவம், அம்மா இந்நேரம் அழுதுகிட்டு இருக்கும். அப்பா....!?

"டேய் இந்தப் பொட்டலத்துல இருக்குறத சாப்புட்டு அந்த டீயைக் குடி. காலையில இருந்து கொலைபட்டினியா கெடக்கே. செத்துக்கித்துப் போயிடாத....." என்ற அதட்டல் கேட்டு கைகள் நடுங்க ஏட்டு நீட்டிய பொட்டலத்தை வாங்கிக்கொண்டான்.

"இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்தத் தொழில்....பிச்சை கூட எடுக்கலாம். இந்தத் திருட்டுத்தனம் மட்டும் கூடவே கூடாது....கத்தைப் பேப்பகளில் மளமளவென்று எழுதி கோர்ட் கிளார்க்கிடம் நீட்டினார் மாஜிஸ்ட்ரேட். அவர் அந்தக் கேஸ்கட்டை பவ்யமாக வாங்கிப் பிரித்து ஆறுமாசம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, மதுரை என்று உரக்கப் படித்தார்.

துரையின் கண்களிலிருந்து கண்ணீர்துளிகள் வழிய...ஏட்டு ஏகாம்பரம் விசாரணைக்கூண்டிலிருந்து துரையை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
கோர்ட்டிலிருந்தோ,பஸ் ஏறி மதுரை வந்ததோ, சீர்திருத்தப்பள்ளி வந்ததோ எதிலும் கவனமில்லாமல் வெறித்த பார்வையோடு இருந்த துரை, சீர்திருத்தப்பள்ளி வந்த மூன்றாவது நாள்தான் வாயைத் திறந்தான்.


அதுவும் அவன் இருந்த அறையில் மற்றவர்கள் வெளியே சென்ற பிறகு படுத்திருந்த பாபுவிடம். இந்த மூன்று நாளில் பாபுவைத் தவிர மற்ற சிறுவர்கள் துரையைச் செய்த கலாட்டாவால் மனம் நொந்து போயிருந்தான்.

"என்ன, பிளேடு கேசா?"

"என்னம்மா, நாலு பர்ஸ் பாக்கவுடாம இங்க இட்டாந்துட்டாங்களேன்னு கவலையாகீதா?"

"தியேட்டரா, பஸ்ஸா? எதுல தொழில் பண்ற?"

"லாட்ஜுக்கு ஆளுங்களை புக் பண்ற கேசா?"

"தொழிலுக்குப் புதுசா? கவலைய வுடு, வெளிய போனதும் நம்ப குரூப்ல சேந்துரு. நம்பாளு ஒனக்குஎல்லாத்தையும் அத்துபுடியா கத்துகுடுத்துருவான்..."

- இப்படி ஆளாளுக்கு துரையை துவம்சம் செய்து கொண்டிருக்க
பாபு மட்டும் பாயில் ஒன்றும் பேசாமல் புரண்டுகொண்டே இருந்தான். ஒருவழியாக மற்றவர்கள் எல்லாம் வெளியே போனதும் துரை,
பாபுவிடம் பேசினான்.

"என்ன? ஒடம்புக்கு ஜுரமா?"

"ம்..."

"எத்தனை நாளா?"

"அஞ்சு நாளா..."

"ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போகமாட்டாங்களா?"

"இன்னைக்கு காச்சல் கொறையலேன்னா கூட்டிப்போறதா வாடன் சொன்னாரு."

"இங்க வந்து எத்தனை நாளாச்சு?

"நாலுமாசம் ஆச்சு"

"எதுனால இங்க வந்த?

"மாங்காய் சுண்டல் வித்துகிட்டு இருந்தேன்; ஒரு ஆள் தெனம் கடன் வாங்குவார்; வாரக் கடைசியிலமொத்தமா குடுத்துருவார். முப்பது ரூவாயிக்கு மேல கடன் குடுத்தேன். திடீருன்னுட்டு அந்தாள் வர்றதில்ல.ஒருநா, ஒரு பொம்பள கூட வர்றதப் பாத்தேன்.

காசைக் கேட்டேன்; கன்னத்துல அறைஞ்சு யாருகிட்டகுடுத்தியோ அவங்கிட்ட கேளுன்னார். நாளைக்கு கூட குடுங்க, இல்லன்னு மட்டும் சொல்லீடாதீங்க.அந்தக் காசுல எந்தங்கச்சிக்கு பாவாடைத் துணி வங்கணும்ன்னு சொல்லி அழுதேன்.

அந்த வழியா வந்த போலீசுக்கிட்ட பொய்சொல்லி காசு கேக்குறேன்னு புடிச்சுக்குடுத்துட்டார். போலீசு நான் சொல்றதைக் கேக்கவே இல்லை. போலீசு என்னை ரெண்டுநாள் ஸ்டேசன்ல வச்சிருந்துட்டு பிக்பாக்கெட் அடிச்சிட்டேன்னு கேஸ் போட்டு இங்க கொண்டாந்து தள்ளீட்டுப் போயிட்டாங்க.....ஆமா, நீ எதுனால இங்க வந்த? மூச்சுவிடாமல் சொல்லிய பாபு இப்ப துரையின் கதையை தெரிந்துகொள்ளும் ஆவலில் பார்க்கிறான்.


"நீ, இங்க இருக்கிறது உங்க வீட்டுக்கு தெரியுமா?"

"தெரியாது.

நான் மதுரையில சுண்டல் விப்பேன்; அய்யர் சுண்டல், முறுக்கு டின்னுல போட்டுக் குடுப்பார். ரூவாய்க்கு பத்துபைசா கமிசன்.ஒருநாளைக்கு அம்பதுக்கும் விக்கும்; அஞ்சுக்கும் விக்கும். சாப்பாடு அய்யர் வீட்டுல போட்டுருவாங்க. திண்னையில தெருவுல படுத்துக்குவேன். கெடைக்கிற கமிசனை மாசம் சேத்து வச்சு நூறு, நூத்தம்பது ஊருக்கு அம்மாவுக்கு அனுப்பீருவேன். வீட்டுல அம்மாவும் தங்கச்சியும்தான். பாவம் இந்த நாலு மாசம் எம் பணமும் அவங்களுக்கு இல்ல; என்னையத் தேடி வந்தாங்களா? எதுவும் தெரியாது.

அய்யர் என்னைப் பத்தி என்ன நெனைச்சாரோ? சரக்கோட போயிட்டானேன்னு பொலம்பீருப்பார். என்னைய இனிமே எப்படி நம்புவார்?தங்கச்சிய எப்டியாச்சும் படிக்க வச்சிரும்மா, எந்த வேலைக்கும் அனுப்பாதே. நான், மாசாமாசம் பணம் அனுப்புறேன்னு பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தப்போ சொல்லீட்டு வந்தேன். இன்னும் ரெண்டுமாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இங்க கெடக்கணும்." பாபுவின் கண்கள் ஈரமாகியிருந்தது.


"ம்ம்ம்... எங்கதைதான் சோகக் கதைன்னு நெனைச்சேன். என்னைவிட நீ சோகமா இருக்கே. கவலைப்படாதே. நாலுமாசத்தை ஓட்டீட்ட. இன்னும் ரெண்டுமாசம்தான... அதுவும் ஓடீரும். இனிமே அங்க இங்க போகாம ஒங்க அம்மாவும் தங்கச்சியும் இருக்க எடத்துக்கே போய் இதே சுண்டல் முறுக்கை ஒங்க அம்மாவைச் செஞ்சு தரச் சொல்லி வித்துக் கெடைக்கிற காசை ஒங்க அம்மாட்ட கொடுத்துட்டு நிம்மதியா இரு..." பெரியமனுசன் போல துரை பாபுவுக்கு புத்திமதி சொன்னான்.


"அம்மா இருக்குற கிராமத்துல சுண்டல் முறுக்கு செஞ்சு நாங்களே சாப்புட்டுக்கிட்டாத்தான். அங்க வழி இல்லாததுனாலதான மதுரைக்கு வந்தேன்."

"பக்கத்துல இருக்கிற டவுனுல எதாவது செய்யமுடியுமா?"

"செய்யலாம். எல்லாத்துக்கும் வெள்ளையப்பன் வேணுமே?"

"எவ்வளவு இருந்தா செய்யலாம்ன்னு நெனைக்கிற?"

"ஒரு சுமாரான சைக்கிள், ஒரு அம்பது டீ புடிக்கிற மாதிரி ஒரு எவர்சில்வர் பாத்திரம், ஒரு வாளி, அரை டஜன் டம்ளர்.... சீனி, டீ தூள், பால்....இதுக்கு மட்டும் காசு கெடைச்சா, எங்க கிராமத்துல இருந்து டவுனுக்கு காலையில ஒரு டிரிப், மாலையில ஒரு டிரிப்...." சொல்லும்போதே பாபுவின் கண்களில் ஒளிமயமான எதிர்காலம் மின்னலிட்டது.

"இவ்வளவுக்கும் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருந்தால்தான் இந்தத் தொழிலைச் செய்ய முடியும், இல்லையா? இதுல சைக்கிள்தான் கொஞ்சம் செலவு.....ஆமா...இப்படிச் செய்யலாமே.

வாடகைக்கு கொஞ்ச நாள் சைக்கிள் எடுத்து ஓட்டிச் சமாளிச்சா தொழில் நல்லபடியா அமைஞ்சா ஒரு சைக்கிளை வாங்கிக்கலாமே?"
"அப்படியும் செய்யலாம். என்ன, சம்பாதிக்கிற காசை சைக்கிள் கடையில குடுக்க வேண்டி வருமே. அதான்.." சொல்லிக்கொண்டிருக்கும்போதே யாரோ வரும் காலடி ஓசை கேட்க பேச்சு தற்காலிகமாய் தடைபட்டது. வாடன்தான் வந்தார்.


"என்ன பாபு காய்ச்சல் எப்படி இருக்கு?"

"இப்ப பரவாயில்லங்கண்ணா. இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப் போதும்."

"அட, கொஞ்சம் முன்னாடி காய்ச்சல் அனலா கொதிச்சுது. சொரத்தே இல்லாம இருந்த. இப்ப மொகம் பாக்கவே தெளிவா இருக்க மாதிரி இருக்கே!?" வாடன், பாபுவின் நெற்றியைத் தொட்டுப்பார்த்து விட்டு, காய்ச்சலும் இல்ல. சரி, சாயாந்திரமா எதுக்கும் பாத்துக்குவோம். என்ன, துரை நாளையில இருந்து மத்த பசங்களோட கிளாசுக்குப் போகணும்..." என்று சொல்லிக்கொண்டே வாடன் போனார்.


"ம்..என்ன சொன்ன, சைக்கிளுக்கு வாடகை குடுத்தாலும், உங்க அம்மா, தங்கையோட இருக்கிற தெம்புல பது டீ சேத்து வித்தா வாடகைக் காசு; ஒவ்வொருநாளும் ஒரு தொகைய சைக்கிள் வாங்க சேத்துவா, காசு சேந்ததும் சைக்கிளை வாங்கிடு"

"நல்ல ஐடியாதான். ஆனா மத்ததுக்கு பணம்?"

"நா, ஒரு ஐநூறு ரூபா தர்றேன்."

"இங்க எப்டி ஒனக்கு பணம்?"

"நீ, ரெண்டு மாசம் கழிச்சு ஊருக்குப் போறப்ப நான் தர்றேன்"

"இவ்வளவு நல்லவனா இருக்குற நீ, ஒன்னைப் பத்தி சொல்லவே இல்லையே?"

"என்னைப்பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"அப்ப, நீயும் திருடுற தொழில்தானா?"

"நான், அந்தமாதிரிப் பட்டவன் இல்லை."

"அப்ப, எனக்கு நீ தர்றதாச் சொன்ன பணம் யாரோட பணம்?"

"ஒருவகையில அது திருடுன பணம்தான். ஒரு நல்ல காரியத்துக்கு ஒனக்கு பயன்படட்டும்ன்னுதான் குடுக்கிறேன்னு சொன்னேன்."

"எனக்கு திருட்டுப் பணமா? வேண்டவே வேண்டாம்ப்பா!"

"பாபு, நீ நினைக்கிற மாதிரி அது திருடுன பணம் இல்ல. எங்கப்பா ஒரு குடிகாரர். குடிச்சுட்டு எங்க அம்மாவையும் என்னையும் திட்டாத அடிக்காத நாளே இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். கொஞ்ச காலம் பல்லைக்கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சுருவோம்ன்னு நெனைச்சேன். விதி, அன்னைக்கு விளையாடிருச்சு. அப்பா, வேலையில இருந்து வரும்போதே குடிக்க வாங்கி வந்துருவாரு. அன்னைக்கு வந்ததும், அம்மா மளிகை சாமான் வாங்க அப்பாட்ட பணம் கேட்டாங்க. அம்மாவுக்கு அடிதான் கிடைச்சது. என்னைக் கூப்பிட்டு ஒரு அய்நூறு ரூபா நோட்டைக் குடுத்து பிராந்தி வாங்கீட்டு வாடா என்று அனுப்பினார். பணத்தை வாங்கிப் போன நான் இருட்டா இருந்த இடத்துல போய் உக்காந்து அழுதுகிட்டு இருந்தேன். அந்தப்பக்கமா வந்த போலீஸ்காரர் என்னை பாத்துட்டு ஸ்டேசனுக்கு கூட்டீட்டுப் போனார்; வீட்டைப்பத்திச் சொன்னா அப்பாட்ட இன்னும் அடி விழும். அதுக்குப் பயந்து ஸ்டேசன்ல வீட்டைப்பத்தி எதுவும் சொல்லல. போலீஸ் என்னை அனாதைன்னு நெனைச்சு பிக்பாக்கெட் கேஸ் போட்டு இங்க கொண்டாந்துட்டாங்க. போலீஸ் கண்ணுல படாம இருக்குறதுக்காக பணத்தை சட்டை தையல் மடிப்பில வச்சிருந்தேன். அந்தப் பணத்தைத்தான் ஒனக்கு குடுப்பதாச் சொன்னேன்."


"துரை, உன்னை மாதிரி எனக்கு ஒரு நண்பன் இங்கே கிடைத்ததற்காக சந்தோசப்படுறேன். நான் வெளியே போய் டீ தொழிலை செய்து, நீ வெளியே வரும்போது ரெண்டு சைக்கிளோடு இருப்பேன். நீயும் உங்க அம்மாவை அழைச்சுகிட்டு எங்க கூடவே வந்துரு. என்ன, சரியா, ஆனந்தத்தோடு பாபு எழுந்து துரையை அணைத்துக் கொள்கிறான். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்

சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.
<0>

தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!

தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!

"ன்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டீங்க. ஆனா நாங்க, நீங்க இல்லாம எப்படி காலம் தள்ளப் போறோம்னு தெரியல... ஒடம்பைப் பாத்துக்கங்க... சூதானம்... பட்டினி கெடந்து சம்பாதிச்சு இங்க அனுப்பனும்ன்னு நெனைக்காம, நேரநேரத்துக்கு சாப்புடுங்க... எங்களைப் பத்தி அனாவசியமா கவலைப்படாதீங்க... அஞ்சாறு மாசத்துக்கு நீங்க பணம்கிணம் அனுப்ப வேணாம். மொத்தமாச் சேத்து அனுப்புனா அத வச்சு அடகு வச்ச நெலத்தையும் நகையையும் மீட்டுக்கிறேன். தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க. ஆறேழு மாசமிருக்கு தை வர்றதுக்கு. நம்மளுக்கும் வழி பொறக்காமலா போயிரும். முடிஞ்சா "தைப் பொங்கலுக்கு“ நீங்களே வந்துட்டுக்கூட போங்க... திரும்பப் போறப்ப எங்களையும்...” என்று மனைவி சாந்தி சொல்லிக் கொண்டே போக, கணவன் கந்தசாமி இடைமறித்தான்.

“ மூச்சுவாங்காம இப்டிப் பேசிக்கிட்டே இருந்தா நா மலேசியா போன மாதிரிதான்! எதிர்வீட்டு ஏகாம்பரத்தைப் பாருங்க சிங்கப்பூர் போய் சீமானாய் வாழ்ந்துகிட்டு இருக்காங்க; குடிசை வீட்டிலிருந்த குப்புசாமி குபேரனானது சிங்கப்பூர் சீமைக்குப் போய்த்தானே! என்று மூச்சுக்கு முன்னுறு தடவை சொல்லி சும்மா இருந்தவனை உசுப்பி விட்டாய்; "தை பொறந்தா வழி பொறக்கும்...தையும் பொறந்துருச்சு, கையகல நிலத்தை நல்ல விலைக்கு கேக்குறாங்க, எல்லாம் தை பொறந்த நேரம்...வித்துக் காசாக்கி ஏஜெண்ட்டைப் போய் பாருங்க என்று சொல்லி விரட்டினாய்... இப்ப என்னடான்னா, பொறப்புடுற நேரத்தில வீர வசனம் பேசுற! எனக்கு நேரமாச்சு...மகன் செல்வத்தையும் மகள் பூரணத்தையும் நல்லா படிக்க வை...“ என்றவன், ஒரு மஞ்சள் பையில் தன் உடைமைகளைத் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

“ ஏங்க அந்த சின்ன சூட்கேசில் நாலு செட் துணிய வச்சு எடுத்துட்டுப் போகலாம். இப்படி ஏஜெண்ட் சொன்னாருன்னு மஞ்சள் பையில ஒரு மாத்துத் துணிய வச்சுக்கிட்டு கிளம்புறீங்க” என்று கேட்ட சாந்திக்கு, "அதெல்லாம் அங்க போனதும் வேலை குடுக்குற ஓனர் அட்வான்ஸ் தர்ற பணத்துல வாங்கிக்கலாம்ன்னு ஏஜெண்ட் தான் சொல்லீருக்கார்ல அப்புறம் என்ன?“ என்றவாறு பிள்ளைகளைப் பார்த்து அம்மா சொல்றதைக் கேட்டு நடக்கணும்... நா ஊருக்குப் போய் பணம் அனுப்புறேன். செல்வத்துக்கு அதுல நல்ல சைக்கிளா வாங்கிக்க... என்ன சரியா...” பூரணத்துக்கு ஒரு முத்தம் கொடுத்து மனைவிக்கு கை அசைத்து வரட்டுமா என்று கிளம்பினான், கந்தசாமி.

சட்டைப் பையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். அதில் ஏஜெண்டுக்கு கொடுக்கவைத்திருந்த கடைசித் தவணைப் பணம் பத்தாயிரமும், சென்னையில் ஏஜெண்ட்டைச் சந்திக்கச் சொல்லியிருந்த தம்புசெட்டித் தெரு முகவரிச் சீட்டும் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

சென்னை செல்லும் வழியெல்லாம் கனவு மிதப்புகளில் கரைந்திருந்தான் கந்தசாமி. தன்னைச் சுற்றிக் கவ்வியிருந்த இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் வரப்போவதை எண்ணிப் பார்த்தான்.

"சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும்“... ஏஜெண்ட் சொன்ன அந்தச் சின்ன மீனின் விலை ரெண்டு லட்சம் ரூபாய். பெரிய மீன்தான் அவனது மலேசிய வேலை, வருமானம்!

சாப்பாடு தங்க இடம் எல்லாம் தந்து மாதச் சம்பளம் 25 ஆயிரம்! ஒரு வருடத்தில் 3 லட்சம்! சேட்டு வட்டி அநியாய வட்டி. அதனால அவன்கடனை முதல்ல அடைக்கணும். அஞ்சுவருஷம் காண்ட்ராக்ட். மிச்ச நாலு வருஷத்துல பத்து பன்னெண்டு லட்சம் தேத்திடலாம். அப்பறம், நம்ம ஊருக்கு நாமதான் ராஜா! கந்தசாமியின் கண் முன் எதிர்காலம் சினிமாப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காசில்லாத கனவுச் சினிமா எப்போது முடிந்ததோ அந்தக் கனவுச் சுகத்திலேயே உறங்கியும் போயிருந்தான்.

தம்பு செட்டித் தெருவில் ஏஜெண்ட் கொடுத்திருந்த முகவரிக்குப் போன போது அங்கு நிறையப்பேர் அவனைப் போல மஞ்சள் பை சகிதமாக நின்று கொண்டிருந்தனர். வாலிப வயதிலிருந்து நடுத்தர வயதுவரை அங்கிருந்தவர்களில் ஒரு ஒற்றுமை தெரிந்தது. எல்லோரிடமும் கிராமத்துக் களை படிந்திருந்ததுதான். அவர்களின் முகங்களில் சந்தோஷக் கீற்றுக்கள்! இந்த மஞ்சள் பை, வேட்டி, சட்டை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், என்ற அலட்சியம் அவர்கள் பேச்சில் மிளிர்ந்தது. கந்தசாமி தனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கிறார்களா? என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.

"மலேசியா போறவங்க உள்ள போய் கேசியர்ட்ட பணத்தைக் கட்டீட்டு பக்கத்து சந்துல இருக்கிற ஓட்டல்ல போய் பசியாறீட்டு வந்துருங்க...” என்று ஒரு ஆள் வெளியே வந்து சொல்ல கேசியரிடம் பணத்தைக் கொடுப்பதற்கு நான் முந்தி, நீமுந்தி என்று போக கந்தசாமியும் போய் நின்று கொண்டான் அந்த வரிசையில்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது மஞ்சள் பைகள் எல்லாம், பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்த்தது போல, பார்த்துப் பிரமிப்பை கண்களுக்குள் உள் வாங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

விமானத்தில் ஏறியதும் சிலர், "நான் ஜன்னல் பக்கமா உக்காந்துக்கிறேன். அப்பத்தான் எச்சிகிச்சி துப்ப வசதியா இருக்கும்,” என்று பேசிக்கொண்டு அவசரஅவசரமாக ஓடி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து அதைத் திறக்க முடியாமல் போனது குறித்து சோகமாகிப் போக, மஞ்சள் பைகளை எல்லாம் தள்ளிக்கொண்டு வந்திருந்த ஆள் அவரவர் இருக்கையில் சரிபார்த்து அமரவைத்தான்.
விமானம் ஓடுபாதையில் ஓடி ஜிவ்வென்று மேலே கிளம்பியபோது ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தான், கந்தசாமி. அவனுடைய மனமும் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.

மலேசியா எப்படி இருக்கும்? நம்ப புதுக்கோட்டை அளவுக்கு பெரிய டவுனா இருக்குமோ? இல்ல சென்னை மாதிரிக்கூட இருக்கும். நமக்கு அங்க என்ன வேலை குடுப்பாங்க? ஏஜெண்ட் சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது.

"விவசாயம் தெரிஞ்சா போதும். அங்கயும் போய் விவசாய வேலைதான். செம்பனைத் தோட்டத்தில் வேலை குடுப்பாங்க...” என்றுதானே சொன்னார். பனந்தோப்பு மாதிரி செம்பனந்தோப்பா இருக்குமோ?
கூடவே அவன் மாமனார் செல்லச்சாமி சொன்னதும் நினைவுக்கு வந்தது.

“ மாப்ளே, நீங்க சீமையில போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ன்னு நெனைக்கிறீங்க. நல்லதுதான். ஆனா, ரெண்டு லட்ச ரூபாய் குடுத்து அங்கபோய் கஷ்டப்படுறத இங்கயே அந்த ரெண்டு லட்சத்தை வச்சு எதாவது தொழில் செய்யலாமேங்கிறது என்னோட அபிப்ராயம். ரெண்டு லட்ச ரூபாயையும் குடுத்து கடல் கடந்து போய் ஊருபேரு தெரியாத இடத்துல அடிமை மாதிரி நீங்க கை கட்டிச் சேவகம் செய்யணுமா? இப்பல்லாம் வேலைக்குன்னு கூட்டீட்டுப் போய் நடுத்தெருவுல நிக்க வச்சிர்றாங்கன்னு நாலுபேர் நாலுவிதமா சொல்றாங்க. நல்லா யோசிச்சுக்கங்க. அதான் அவர் கடைசியா சொன்னது.


அப்படியெல்லாம் ஆயிருமா என்ன? அதான் ஏஜெண்ட்,” அப்படி எல்லாம் நடக்காது. அதுக்காகத்தானே உங்களை எல்லாம் ஒப்படைக்க கூடவே ஒரு ஆளை அனுப்புறேன். அவர் உங்களை எல்லாம் பத்திரமா வேலையில சேர்த்ததுக்கு அப்புறமாத்தான் இங்க வருவார்...” என்று சொல்லி ஒரு ஆளையும் அனுப்பியிருக்காரே என்று கூடவே மனசு சமாதானம் செய்தது. இங்கும் அங்குமாகத் தாவியது அவன் மனம்!

அஞ்சு வருஷத்தில் சேரும் பணத்தை வைத்து என்னல்லாம் செய்யலாம்.

முதல்ல ஒரு மாடிவீடு கட்டணும். நடுத்தெரு பெரியசாமி வீட்டைவிட பெரிசா கட்டணும். ஒரு கார் கூட வாங்கிக்கலாம். டவுன் நாகப்பன்கிட்ட சொல்லி ஒரு நல்ல வியாபாரம் ஆரம்பிச்சிட்டா நம்ம பக்கத்துல யாரும் நெருங்க முடியாது. கந்தசாமியின் எதிர்காலக் கனவுகள் ஏகாந்த்மாய் உலாக் கிளம்பிய சுகப்பொழுதுகளில் நீந்திக் களைத்து அப்படியே உறங்கியும் போனான்.

யாரோ எழுப்பும் சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது, "ம்ம்ம்...எறங்கு...எறங்கு இல்லைன்னா மறுபடியும் சென்னைக்கே போயிருவே,” என்று சொல்ல மளமளவென்று எழுந்து தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கினான்.

விமான நிலையத்தில் எல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் எல்லோரிடமும் இருந்த பாஸ்போர்ட்டை ஏஜெண்ட்டின் ஆள் வாங்கி வைத்துக் கொண்டான். எல்லோரையும் அள்ளிப்போட்டுக்கொண்டு அந்த நகரின் பிரமாண்ட வீதிகளில் அந்த வாகனம் பயணித்தபோது வானுயர்ந்த கட்டிடங்களையும் தெருக்களின் ஒழுங்கையும் கண்டு வியந்தவாறு வந்தான் கந்தசாமி.

நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய வீட்டின் முன் வாகனம் நின்றது. அந்த வீட்டின் உட்புறம் பல அறைகளைக் கொண்டிருந்தது. அறைக்குப் பத்துப்பத்துப் பேர்களாக தங்க வைத்த ஏஜெண்ட்டின் ஆள், "கடைக்கோடியில் குளியல் அறை இருப்பதாகவும் எல்லோரும் குளித்து வாருங்கள். பசியாறிவிட்டு இன்றைக்கு ஓய்வு எடுங்கள். நாளை உங்களை எல்லாம் ஓனரிடம் அழைத்துப் போய் வேலையில் சேர்த்துவிடுகிறேன்,” என்றான்.

குளித்து முடித்து எல்லோரும் வந்ததும் அங்கேயே இட்லி, தோசை என்று சாப்பிட்டானதும், காலாற வெளியே போய் ஒரு சுற்றுசுற்றிவிட்டு வரலாம் என்று பேசினார்கள். சிலர் கிளம்பத் தயாரானபோது கந்தசாமியும் ஒட்டிக்கொண்டு கிளம்பினான்.

அதற்குள் அங்குவந்த ஏஜெண்ட்டின் ஆள், "எங்க கிளம்பீட்டீங்க? வெளிய எல்லாம் போகக் கூடாது. இப்ப நாம வந்திருக்கிற இடம் சிங்கப்பூர்! நீங்க மலேசியாவில், எங்க வேண்டுமானாலும் போகலாம். சட்டப்படி இங்க நீங்களெல்லாம் வெளிய போகக்கூடாது. நீங்க வெளிய போய் போலீசில் மாட்டிக்கொண்டால் உங்கபாடு ஆபத்தாகிவிடும். “

"மலேசியாவுக்குன்னு கூட்டி வந்துட்டு ஏன் சிங்கப்பூருக்கு கூட்டி வந்தீங்க?“ ஒருவர் கோபமாய் குறுக்கே பாய, "நாம சென்னையை விட்டுக் கிளம்பும்போது ஓனர் போன் பண்ணி சிங்கப்பூருக்கு வந்திடுஙகன்னு சொன்னதுனாலதான் நாம இங்க வந்தோம். அதை எல்லாம் உங்களுக்கு வெளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது, “ என்று சொன்னதும் எல்லாரும் "கப்சிப்” ஆகிப் போனார்கள்.

சாப்பிடத் தூங்க, சாப்பிடத் தூங்க என்று ரெண்டு மூன்று நாள் நகர்ந்ததுதான் மிச்சம். ஓனரும் வரவில்லை; ஏஜெண்ட்டின் ஆளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெயிலுக்குள் இருப்பது போல உணர்ந்த கந்தசாமி மாமனார் சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற பயமும் மெல்லத் தலைதூக்கியது.

சிங்கப்பூர் வந்த ஏழாவது நாள்! "எல்லாரும் இன்னைக்கு கெளம்புறோம்.” என்றான் ஏஜெண்டின் ஆள். "எங்க? மலேசியாவுக்கா?“ ஏக காலத்தில் எல்லோரும் கேட்டனர். "இல்லை. சென்னைக்கே திரும்பப் போகிறோம். "ஏன்? ஏன்? “ என்ற எல்லோரின் குரலிலும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தொக்கி நின்றது.

"ஓனரின் மனைவி இறந்து போனதால அவர் திடீர்ணு கெளம்பி தமிழ் நாட்டுக்குப் போயிட்டாராம். அவர் எப்பத் திரும்பி வருவார்னு தெரியாததால நாம அங்கேயே போய் ஓனரைப் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் நேரா மலேசியா வரலாம். என்ன செய்யிறது? உங்க நேரம், அவரோட மனைவி இறந்து போயிட்டாங்க. அவருக்கு அது முக்கியம்ன்னு போயிட்டார்...” என்று ஏஜெண்ட்டின் ஆள் சொன்னதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சென்னை வந்தும் நாலைந்து நாள் ஓடிவிட்டது. எல்லோருக்கும் மலேசியக் கனவு கரைந்து, "மலேசியாவும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் “ எங்க ரூபாயைக் குடுங்க ஊர் போய்ச் சேர்றோம்,” என்று கேட்கத் துவங்கியபோது கந்தசாமிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

"இங்க பாருங்க, ஒரு மனுஷன் பொண்டாட்டியப் பறி கொடுத்துட்டு வந்து இருக்கார். அவங்க வீட்டுக்கு தெனமும் போன் போட்டு பேசறேன். அய்யா, எதுவும் பேசற நிலையில இல்லைன்னு வீட்டுல இருக்குறவங்க சொல்றாங்க. இன்னும் ஒரு மாசம் அவரு இங்கதான் இருப்பாராம். நீங்க அவங்கவங்க ஊருக்குப் போங்க. நான் ஏற்பாடெல்லாம் பண்ணீட்டு உங்களுக்கு தந்தி குடுக்கிறேன். அப்ப நீங்க வந்தாப் போதும்,” ஏஜெண்ட் சொல்லச் சொல்ல அங்கு சற்று நேரம் கனத்த மவுனம் நிலவியது.
"எங்க முன்னாடி நீங்க இப்ப போன் பண்ணுங்க நாங்க நம்புறோம்,” ஒரு இளவட்டம் கேட்டது.

"அப்ப, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே!?“

"அதுக்கு இல்ல, நாங்களும் கொஞ்சம் திருப்தியா ஊருக்குப் போவோம்ல அதுக்குத்தான்“

ஏஜெண்ட், எதோ ஒரு நம்பரைச் சுழற்றிப் பேசினார். "அய்யா இருக்காங்களா? நான் ஏஜெண்ட் மெட்ராசிலிருந்து பேசறேன்."

"அப்டீங்களா? இல்ல... மலேசியாவில அய்யா வேலைக்கு எடுத்துக்கிறதா சொல்லீருந்தார். அவங்கள்லாம் ரெடியா இருக்காங்க. அதான் அய்யாட்ட கேட்டுட்டு...”

"அப்படி எல்லாம் இல்லீங்க. அய்யா சொல்லீட்டார்ன்னா மாறமாட்டார். எனக்கு அய்யாவோட நெலமை தெரியும். அவங்க பணம் கொடுத்துட்டமேன்னு கொஞ்சம்...’

"எத்தனை நாளுங்க? பதினைஞ்சு நாளா? சரிங்க நான் அவங்களை 15 நாள் கழிச்சு மலேசியாவுக்கு நேரா கூட்டீட்டு வந்து பாக்குறேன்னு சொல்லுங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க...” ஏஜெண்ட் பேசி முடித்துவிட்டு போனை வைத்தார். எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.

"எல்லாரும் இப்ப நான் பேசினதைக் கேட்டீங்க இல்லையா? அய்யாவோட மகன் சின்னவர் தான் பேசினார். நீங்க நிம்மதியா போயிட்டு வர்ற 25ம் தேதி வந்திருங்க. நானே மலேசியாவுக்கு கூட்டீட்டுப் போய் வேலையில சேர்த்து விட்டுட்டுத்தான் மறுவேலை. சரிங்களா? எல்லாருக்கும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார்.

காலையில் லெட்சுமி வீட்டுக்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். கந்தசாமி போன மச்சான் திரும்பி வந்தான் கதையாக வந்து நின்றான்.

"அடியாத்தே! இது என்ன சத்தம் இல்லாம வந்து நிக்கிறிங்க? “ லெட்சுமி கேட்டாள். “ வா, வா வீட்டுக்குள்ள சொல்றேன், “ என்று சொல்லியவாறு உள்ளே நுழைந்தான்.

விவரம் எல்லாம் சொன்னான். மனசுக்குள்ள மட்டும் ஒரு மூலையில “ ஏமாந்துட்ட, ஏமாந்துட்ட” என்று பெருங்குரலெடுத்து ஓலமிட்டாலும், 25ம் தேதி ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்றப்பட்டதை எண்ணி சமாதானப் படுத்திக்கொண்டு, இன்னும் ரெண்டு வாரத்தில் போகத்தான போறேன், என்று சொன்னான்.


எதிர்பார்த்த 25ம் தேதி அதிகாலையில் ஏஜெண்ட் வீட்டுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி, தனக்கு முன்னால் மற்றவர்களும் வந்து மஞ்சள் பையோடு காத்திருந்ததைப் பார்த்தான். மெளனமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் ஏஜெண்ட் என்ன சொன்னார் என்று மெதுவாக விசாரித்தான். அதற்கு அவர், கையை நீட்டிக் காட்டினார். அப்போதுதான் அதைக் கவனித்த கந்தசாமிக்குப் பகீர் என்றது. பெரிய பூட்டு கதவில் தொங்கிக் கொண்டிருந்தது.

சிலர், எங்கயாவது வெளிய போயிருப்பார். வருவார் என்று சொல்ல, சிலர், "அது எப்படி நாமதான் இன்று வருவோம்ன்னு தெரியும்ல... அப்புறம் எப்டிப் போவார்? என்று கேட்க, ஒருவர், பக்கத்து வீட்டில் ஏஜெண்ட் பற்றி விசாரிக்க, அவங்க ஒரு வாரத்திற்கு முன்புதான் வீட்டைக்காலி செஞ்சுட்டுப் போனாங்க என்று சொல்லவும் கொஞ்ச நேரத்தில் அங்கே ஒப்பாரி வைத்து அழாத குறையாக “ அய்யோ, நெலத்தை வித்து, நகை நட்டை வித்துக் குடுத்து இப்டி மோசம் போகவா குடுத்தோம்.” என்ற புலம்பல்கள் பெரிதாக கேட்கத் துவங்கியது. கந்தசாமிக்கு மாமனார் சொன்னது அப்போதுதான் உறைத்தது. புடிச்ச மீனும் போய், பொட்டி மீனும் போன கதையாய்ப் போச்சே என்று எண்ணியபோது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து விழத் துவங்கியது.


எல்லோரும் போலீஸ் ஸ்டேசன் எங்கிருக்கிறது என்று விசாரித்துப் போனார்கள். நிலையத்திலிருந்தவர்களிடம் விபரம் சொன்னார்கள். அங்கிருந்த காவலர் கேட்டார், "இப்ப ஸ்டேசனுக்குப் போகனும்ன்ணு வந்திருக்கீங்க. அவங்கிட்ட பணத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி இப்படி ஒரு நடை வந்து ஏங்க இந்த ஏஜெண்ட்டை நம்பி பணம் கொடுக்கலாமான்னு யாருக்காவது கேக்கத் தோணிச்சா? அட, ஒருத்தருக்கு நாலுபேரிடம் விசாரிச்சுப் பாத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமாய்யா? அந்தாளு வீட்டுல பூட்டுத் தொங்கின பிறகு பக்கத்து வீட்டுல விசாரிச்சோம்கிறீங்க.

அதையே, அந்தாளு எப்படிங்க என்று விசாரிச்சு கொடுத்திருக்கலாம் இல்லையா? அவன் தொழிலே, உங்களை மாதிரி இளிச்சவாயன்களைத் தேடிப் பிடிச்சு காக்கா, குருவியா கூட்டீட்டுப் போய் ஒங்களுக்கே தெரியாம, ஒங்க பேர்ல...ஒங்க பணத்துல கடத்தல் சாமான்களை வாங்கியாந்து வித்துட்டு கடைய மூடீட்டுப் போயிட்டான்.

வாசற்படியில முட்டுன பிறகு குனிஞ்சு என்ன செய்ய? முட்டுறதுக்கு முன்னாடியே குனிஞ்சிருந்தா இப்படி மண்டை வீங்குமா? முப்பது பேர் ஆளுக்கு ரெண்டு லட்சம்ன்னு அறுபது லட்ச ரூபாயைக் கொட்டிக் கொடுத்திருக்கீங்க; அதுக்கு முப்பது பேரும் சேர்ந்து அதையே மூலதனமாப் போட்டு ஒரு தொழில் தொடங்கியிருந்தா, நீங்க நூறுபேருக்கு வேலை கொடுத்திருக்கலாமே ! யாராவது யோசிச்சுப் பாத்தீங்களா? சரி...சரி...எல்லாரும் புகார் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க ஆள் கெடைச்சா தகவல் சொல்றோம். அதெல்லாம் யானை வாயில போன கரும்பு... கிடைக்குமா பாப்போம்,” என்றார்.

கந்தசாமி இப்போது கடனோடு கடனாய் அவ்வப்போது பஸ் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கும் சென்னைக்கும் ஏஜெண்ட்டைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

தை பொறந்தா வழி பொறக்கும்...லெட்சுமிகள் இருக்கிற வரைக்கும்,

தை பொறந்தா "வலி" பொறக்கும் கந்தசாமிகளும்

முளைத்துக் கொண்டேதானிருப்பார்கள்.

ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....!



<>ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....!<>

அடையார் என்றதுமே எல்லோருக்கும்
நினைவில் வருவது அந்த அதிசய
ஆலமரம்தான். ஆனால் கிரிக்கு மட்டும்
அடையார் "போட் கிளப்"பை ஒட்டி ரவாரமின்றி, அமைதியே
உருவான அந்த நூலகம்தான்.

அவன் வசிக்கும் பெசண்ட் நகர் பகுதி நூலகத்தைவிட இந்த
நூலகம்தான் கிரிக்குப் பிடித்துப் போயிருந்தது. விடுமுறை என
அவன் வீட்டுக்கு வந்தால் தவறாமல் ஆஜராகி விடுவான்.

"கவிதைக் களஞ்சியம்" என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அவன்
கண்கள் சுழன்று கொண்டிருந்தது. பாக்கெட்நாவல் சைஸிலிருந்த
ஒரு புத்தகத்தை உருவி எடுத்தான். நார்வே நாட்டுக் கவிஞனின் "
ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து..." என்கிற கவிதைத் தொகுப்பு
அது.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நூலகத்தின் பின்
பகுதி, அடையார் ஆற்றின்பக்கம் நீண்டு கிடந்தது. உச்சி வெய்யிலிலும்
அடர்ந்து கிடந்த வேப்பமரங்களாலோ என்னவோ மனதுக்கு இதமான தென்றல் காற்று சீராக வந்து ஒரு புத்துணர்வை விசிறியது. வசதியாக சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினான்.

"சொர்க்கம் பார்த்தேன்.

உன் கண்களில்.....

சொக்கிப் போய்விட்டேன்!

நான் கண்டு பிடித்த உலகம் நீ !

மாண்டு போகாத அன்பு - என்னுள்

பொங்கிப் பிரவகிக்கிறது.

உன் விழியில் நிறைந்து வழியும்

அன்பு என் இருதயத்தை நிறைத்திருக்கின்றது ! "

- வாசித்த
வரிகள் அவனுக்குள் சுகமாக நாற்காலி போட்டு
ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. சட்டென்று மன வலிகள்
மறைந்து இதயம் இலவம் பஞ்சாய் மாறி உயர, உயர பறப்பது
போன்றதோர் மென் சுகம். அடுத்தடுத்த பக்கங்களை அவன் மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

அனிச்சையா அவன் விரல் அடுத்த பக்கத்தை வருடிப் புரட்டிய
போது, வில்லிலிருந்து வெளிக்கிளம்பிய அம்பு போலசர்ரென்று
சறுக்கிக் கீழே விழுந்தது ஓர் துண்டுக் காகிதம். கிரி, அதைக்
குனிந்து எடுத்தான்.

நம்மை வினோதமாகப் பார்க்கிறவர்களைப் பற்றிநான் கவலைப்
படவில்லை - உன் கையை என் கையோடு கோர்த்துநட; திரும்பிப்
பாராமல் நட; உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது! - அந்தத்
துண்டுத் தாளில் முத்து, முத்தான கையெழுத்தில் இந்த வரிகள்.

வரிகளுக்குக் கீழே இடது ஓரத்தில் "ரோஸி"- எம்.எஸ்.14. என்றிருந்தது.

இந்தக் கையெழுத்தைப் பிரசவித்தகையை எடுத்து என் கையில்
கோர்த்துக் கொண்டால்... நினைவுகள் இனிப்பாக நரம்புகளில் ஊர்வலமாக ஊர்ந்துஇனம் புரியாத கிளர்ச்சியில்..." கிரியின் உடம்பு சிலிர்த்துக்
கொண்டது. புத்தகத்தில் அவன் பார்வை மீண்டும்விழ... அட துண்டுக் காகிதத்திலிருந்த அதே வரிகள்... மீண்டும் வாசித்தான் கிரி. அதற்கு
மேல் அவனுக்குப் பொறுமை இல்லை.

ரோஸியின் முகவரியை நூலகத்தில் பெறுவதில் அவனுக்கு எந்தச்
சிரமும் இருக்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் பதிவு செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு வந்ததும் கடிதம் எழுத ரம்பித்தான்.
வேறு யாருக்கு? உருவத்தைப் பார்க்காது எழுத்துக்களை மட்டுமே
தரிசித்து, நூலகத்தில் கருக்கொண்டு மனதில் வரித்துக்கொண்ட வசீகரிக்குத்தான்.

வார்த்தைகளை நாகரீகமாகக் கையாண்டு, வாக்கியங்களில் ஒருவித வரையறைக் கட்டுப்பாட்டோடு, அவள்எழுத்துக்களில் மிளிர்ந்த கவிதை வரிகளில் இவன் மனம் கோர்த்துக் கொண்டதை நயமாக வெளிப்படுத்தியிருந்தான்.

முகவரியை எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்தபோது
அவனுக்கு வந்திருந்தது ஒரு அவசர ஓலைதந்திவடிவில்.
இலங்கைக்குச் செல்லும் விமானப்படையின் ஒரு பிரிவுக்கு
அவன் பொறுப்பேற்று இன்று இரவேபுறப்படவேண்டும், என்றது
அந்தச் செய்தி. படித்துக் கொண்டிருந்தபோதே தொலைபேசி
சிணுங்கியது. மேஜர்.சுரீந்தர் கோஷ் தான் பேசினார்.

விமானப் படையின் ஒய் பிரிவிற்கு தலைமைதாங்கி வழி
நடத்துவது பற்றி தெரிவித்து விட்டு தாம்பரம் விமானப்படை
விமான தளத்திற்கு இரவு ஏழு மணிக்கு வந்துவிடவேண்டு
மென்றும் இரகசியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்பது
மணிக்கு கிளம்பவேண்டும் என்றவர் தமது வாழ்த்தையும்
தெரிவித்துக் கொண்டார்.

ஐந்து மணித்துளிக்கெல்லாம் விமானப்படையின் வாகனம்
வீட்டுக்கு வந்துவிட்டது. எப்போதும் தயார் நிலையில் இருக்கும்
ஒரு சூட்கேஸ், இன்னொரு தோல்பை, படுக்கை, மறவாமல் கவிதைப் புத்தகத்தினைத் தோல் பைக்குள்பத்திரப்படுத்திக்கொண்டான்.

அவ்வளவுதான். கிரி கிளம்பிவிட்டான். வாகன ஓட்டியை அடையார்
அஞ்சல் நிலையத்தின் ஓர் ஓரமாய் நிறுத்தச் சொல்லிவிட்டு
" ரோஸி"க்கு இன்னொரு கவரை அஞ்சல் பெட்டியில் சேர்த்தான்.


தீபாவளி நேரத்துப் பட்டாசு வெடிப்பதுபோல துப்பாக்கிக் குண்டுகளின் அலறல்; வழி தவறி மேகம் தரையிறங்கிவிட்டதோ என்பது போன்ற புகை மூட்டம்; அப்போது தொலைவில் விமானம் ஒன்று தீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இத்யாதிகளுடனான சூழலில் யாழ் நகருக்கு அறுபது கல் தொலைவில் இருந்த முகாமில் இறங்க இடம் பார்த்து இவனது விமானம் வட்டமடித்துக்கொண்டிருந்தது.

உயிருக்கு உத்திரவாதமில்லாத இடம். முப்பது சிப்பாய்கள் சென்ற டிரக் ஒன்று கண்ணி வெடியில் மாட்டி இரண்டுபேர்களை மட்டுமே இரத்தமும் சதையுமாக கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். முகாம் முழுக்க பரபரப்பு;முகங்கள் இருகி, சிரிப்பிழந்து சாவி கொடுக்கப்பட்ட
பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருந்ததை அவனால்பார்க்க
முடிந்தது.

ஸ்லோ மோசனில் நாட்கள் நகர்ந்ததாக கிரி எண்ணியது ரோஸியிட
மிருந்து கடிதம் வரும் வரைதான்.

பலாலி விமானதளத்தருகேயுள்ள முகாமில் நள்ளிரவில் மின்
விளக்குகள் மின்சாரத்தை விவாகரத்து செய்த இருட்டில் கிரி,
மெழுகுவர்த்தி ஒளியில் தூக்கம் தொலைத்திருந்தான். கைகளில்
கற்றையாக கடிதங்கள். சென்னையிலிருந்து வந்த இருபதாவது நாள் ரோஸியிடமிருந்து முதல் கடிதம் வந்தது.

" கவிதைகள் எழுத, படிக்கப் பிடிக்கும்; கவிதைகளை நேசிக்கத் தெரிந்தவர்களையும் எனக்குப் பிடிக்கும். என்று எழுதத் துவங்கியவள்,
பத்து நாளைக்கு ஒரு கடிதமாகி, இப்போது இரண்டு நாளைக்கு ஒரு
கடிதமாக எழுதிஅனுப்பிக்கொண்டிருக்கிறாள். கிரியும் அதற்கு ஈடாக எழுதிக்கொண்டிருக்கிறான்.

இரவு பகலின்றி பறந்து, திரிந்து அலுத்துச் சலித்து வருபவனுக்கு
ரோஸியின் கடிதங்கள் களைப்பைப் போக்கி புத்துணர்வைப் பூக்க
வைக்கும். அவள் எழுதியிருந்தாள்:-

அன்பே!புயல் சூறாவளி எதுவும்
நம்மைத் தடுக்க முடியாது - இந்தஉலகமே காதலர்களை உதறிவிட்டு, ஓடினாலும் நாம் மட்டும் இருவர், ஒருவராக
இணைந்திருப்பதை - எந்தசக்தியாலும் தடுக்கபிரிக்க முடியாது..! - ஒரு
கணம் சிலிர்த்துக் கொண்டான், கிரி.

காரணம், அன்று உச்சி வேளையில் நடந்த சம்பவமும் ரோஸியின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது, என்ற வரிகளையும் நினைத்துதான் அந்தச் சிலிர்ப்பு ஏற்பட்டது.

வவுனியாக் காடுகளின் அடர்ந்த பகுதியொன்றில் தற்காலிகமாக சிறு
விமான தளம் அமைப்பது தொடர்பாக மூன்றுடிரக்குகளில்
சிப்பாய்களோடு கிரி சென்று கொண்டிருந்தான். வழியில் பச்சிளம் பாலகர்களோடு தாய்மார்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்து
நடந்து கொண்டிருந்தனர். டிரக்கை நிறுத்தி விசாரித்தான். காட்டைக்
கடந்து ஒரு சிறு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகச்
சொன்னார்கள்.

அவர்கள் தலைச் சுமையைவிட, கொடுமையான மனச்சுமையைச்
சுமந்து, பசி பட்டினியோடு பயணித்துக் கொண்டிருக்கிற அவர்களின்
நரக வாழ்க்கையை எண்ணி மனத்துயரப்பட்டான். தனக்குப் பின்னால்
வந்த டிரக்கில் அவர்களை ஏறிக்கொள்ளும்படி சொன்னன். 18 பெண்கள், 12குழந்தைகள். தங்களிடமிருந்த பிஸ்கட், பழங்களை எல்லோர்க்கும் கொடுக்கச் செய்தான். எதைப் பற்றியும் கவலையில்லாத சிறு
பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசி சிரிக்க வைத்தான், கிரி.

அதில் ஒரு சிறுவனை, நீ பெரியவனாகிஎன்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டான்.

" இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாகி, முதல்ல சண்டைய நிறுத்தி அம்மா,அப்பாக்களோடு எல்லாரும் சந்தோஷமாஅவங்கவங்க வீட்டுல இருக்கச் செய்வேன். மிலிட்டிரியே வேணாம்னு சொல்லிருவேன். புலியும் வேணாம், பூனையும் வேணாம் அப்டீன்னு சொல்லீருவேன்" என்றான்.

அந்தப் பிஞ்சு உள்ளம் கூட எந்த அளவு ரணமாகி இருக்கிறது என்பதனை எண்ணி கண்களில் நீர் துளிர்க்க கட்டி அணைத்துக் கொண்டான் கிரி. அவர்களை வழியில் அந்தக் கிராமத்தில் இறக்கிவிட்டுவிடும்படி சொல்லிவிட்டு, கை அசைத்து வழி அனுப்பினான்.

அவர்களை அனுப்பிவிட்டு உடன் வந்த அந்தப் பகுதிப் பொறுப்பாளியான கர்னல்.வீரசிங்க நாயகா விடம் வரைபடத்தைக் காட்டி எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் அந்தக் கொடூரம் மிக மோசமாக நடந்தேறிவிட்டது.

தூரத்தில் காதைச் செவிடாக்கும் வெடியோசை. இது கண்ணி வெடி
யோசை போலிருக்கிறதே என்று கிரியும் மற்றவர்களும் அங்கு
விரைந்தனர். என்ன கொடுமை? சற்று முன் பேசிச் சென்றவர்கள்
வெடித்துச் சிதறி வெந்துகொண்டிருந்தார்கள். கவலையில்லாமல்
சிரித்துப் பேசிய அந்தச் சின்னஞ்சிறுசுகள் வெளிச்சப் பந்துகளாய்வெந்துகருகிக் கொண்டிருந்ததைக் காணச் சகிக்காமல்
மனதைக் கல்லாக்கி ததும்பியெழும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி
மனசுக்குள் 'ஓ'வென கதறியழுதது வேறு யாருக்கும் தெரியாது.

அவர்களை வழியில் பார்க்கவில்லையென்றால் இவனுமல்லவா எரிந்து கருகிக் கொண்டிருப்பான். நாளும் நடக்கும் அவலங்கள் தான் என்றாலும்யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத பிஞ்சுகள் கண்ணெதிரே கருகியதை அவனால் தாங்க முடியவில்லை.கண்ணீர் வழிய ரோஸிக்கு இதை எழுதினான். இப்படி நாளும் நடக்கும் சம்பவங்களை, அனுபவங்களை கடிதங்களில் பகிர்ந்து கொள்வான்.


காலச் சக்கரம் சுழன்றதில் ஒரு வருடம் தாண்டிப்போயிருந்தது.
அடுத்த மாதம் 14ம் தேதி இரவு சென்னை வருகிறேன். இரவு 9லிருந்து 9.30க்குள் உன்னை எங்கு சந்திக்கலாம்? இடத்தை எனக்குத் தெரிவி.
அங்கு அந்தநிமிடத்தில் உன் முன்பு நானிருப்பேன்.

ஓ! அனைத்திற்கும் அற்புதம் நீ!

வேறெந்த அற்புதமும்

வேண்டாம் எனக்கு

இந்த உலகில்

எல்லாமுமாக நான்,

விரும்புவது

உன்னை மட்டும் தான்

என் தேவதை நீ!

வேண்டும் நீ!எனக்கு
எப்போதும்...எப்போதும்... எப்போதும்..."

- உன் ப்ரியமுள்ள வாலண்டைன் என்று எழுதினான்.

இந்தியப்படை சுமந்த தபால்களில் இவன் தபாலும் பறந்துபோனது.
போன வேகத்தில் பதிலும் பறந்து வந்தது.

" உங்களைப் பார்க்கவேண்டுமென்கிற தவிப்பு நாளும் அதிகரித்து
வருகிறது. னாலும் நாம் ஏன் சந்திக்கவேண்டும்? கடிதங்களில்
சந்திப்பது மட்டுமே தொடர்ந்தால் போதாதா? என்ற எண்ணமும்
எனக்குள் எழுகிறது. மடல்களில் நாம் பரிமாறிக்கொள்ளும் ஏராளமான எண்ணப் பகிர்வுகளில் இல்லாத சந்தோஷம் நம் சந்திப்பில் ஏற்பட்டுவிடுமா என்ன? நம் சந்திப்புக்குப் பிறகும் இந்த சந்தோஷம் தொடருமா?

ஒரு வேளை தொடராது போனால் இருக்கிற சந்தோஷத்தை விட்டுவிட்டு இல்லாத சந்தோஷத் தேடலில் நாம் இறங்க வேண்டுமா? நேற்றிரவு முழுக்கத் தூங்காமல் யோசித்தேன். பொழுதும் புலர்ந்தது; முடிவும்
முகிழ்த்தது. நாம் சந்திக்கிறோம். அண்ணா சாலை ஸ்பென்ஸர் ப்ளாசாவில் மூன்றாம் தளத்தில் 3425வது எண் ஷாப்பிங் சென்ட்டர் முன்பு இருப்பேன். மாம்... என்னை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பீர்கள்?

என் புகைப்படத்தைக்கூடப் பார்த்ததில்லை. இந்த ரோஸியிடம் ஒரு "ரோஜா"இருக்கும். அன்று இரவு என்னோடுதான் சாப்பிடுகிறீர்கள்! - பாதி பயமுறுத்தியும் மீதியை சந்தோஷத்திலும் முடித்து இருந்தாள் ரோஸி.

அன்று பலாலி விமான தளத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் கிரி மனசு முழுக்க மகிழ்ச்சித் துள்ளல்கள். இவன்சாதனை என எதைஎதையோ பட்டியலிட்டு யார் யாரோ பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள். மாலைகள், நினைவுப் பரிசுகள் கொடுத்து யார் யாரோ கைகுலுக்கினார்கள். முகம் சிரித்துக் கொண்டிருந்தது. மனம் மட்டும் ஸ்பென்சர் ப்ளாசாவில் பறந்து திரிந்தது.

" என் மேனி சிலிர்க்க வைத்த அந்தக் கவிதை நல்லாள் எப்படி
இருப்பாள்? கனவுக்கு உயிர் கொடுத்த காரிகையன்றோ!
எடுத்த காரியம் யாவினும் வெற்றி தேடிக் கொள்ளக்
காரணமாயிருந்த அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ! என்
கனவு தேசங்களில் மட்டுமே கர்வமாக உலவியவள் இன்னும் சிறிது நேரத்தில் என் முன்னே..." அவன் மனம், அவன் செலுத்தும்
விமானத்தைவிட வேகமாக ஸ்பென்சர் பிளாசாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.


"ஸ்பென்சர் பிளாசா" - வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த
ஜனத் திறளைக் கடந்து, மேலேறும் தானியங்கிப்படிகளில் நிற்கப் பொறுமையின்றி தாவி ஓடி மூன்றாம் தளம் வந்தான்.

கடை எண் 3415... 20... 24 ... அவளா? வானத்துத் தேவதை வழிதவறி இங்கு இறங்கிவிட்டதா? குஷ்பு,ரம்பா,சிம்ரன் இவர்களெல்லாம் சேர்ந்த
கலவையோ! என அவன் மூளைக்கணினி ப்ராஸஸ் செய்து கொண்டிருந்தபோது 'டமால்' என அந்தத் திருப்பத்தில் வந்தவர் மீது
இடித்து ஸாரி சொல்லித் திரும்பிய வேளையில் அந்தத் தேவதையைக் காணோம். கடை எண் 3425 என்றிருந்ததைப் பார்த்த அந்த இடத்தில் கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு ஓர் வனிதை.

அந்த வனிதைக்கு வயது அறுபதுக்கு குறையாமல் இருக்கும்.
சட்டென்று முகம் வாடிப் போனாலும் அதை வெளிக் காட்டிக்
கொள்ளாமல் மறைத்து செயற்கைப் புன்னகையை படரவிட்டுக் கொண்டு,
" வணக்கம். நான்... கிரி... கிரிதரன்," கைகூப்பினான்.

கைகோர்க்க வந்தவன் கை கூப்பி நின்றான்.

" வணக்கம். வாங்க... நீங்க தான் கிரியா? "

" ஆமாம். வாங்க.... நாம போய் சாப்ட்டுக்கிட்டே பேசுவோமே..." என்றான் கிரி.

" என்ன? என்னெப் பாத்ததும் தெகச்சுப் போயிட்டீங்களா?! "

" இல்லையே நா எதுக்கு தெகைக்கணும்? நீங்க தான் எல்லாம்..." அவன் முடிக்கவில்லை.

" ஆமா. ரோஸிக்கு எல்லாம் நாந்தான். ரோஸியோட அத்தை.




இப்பத்தான் ஓட்டல்ல டின்னர் ரெடியான்னு பாக்கப் போனாள்" என்று மூதாட்டி சொன்ன போது ஒரு நூறு மெர்குரி விளக்குகள் கிரியின் முகத்தில் பிரகாசிக்க "போகலாமே என்று கிரி குனிந்து ரோஸியின் அத்தை வைத்திருந்த பையை எடுத்து நிமிர்ந்தான்.

அங்கே...அப்போது...

" நான் ரோஸி" உதடு குவித்துச் சொல்லியதே கவிதை

போலிருந்தது.

கிரியை நோக்கி கை நீட்டினாள். கை கோர்த்து நடந்தார்கள்.

" நம்மை வினோதமாகப்

பார்க்கிறவர்களைப் பற்றி

நான் கவலைப் படவில்லை -

உன் கையை என் கையோடு

கோர்த்து நட; திரும்பிப் பாராமல் நட;

உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது! " -

ஸ்பென்சர் ப்ளாசா மூடுகிற நேரமாகிவிட்டதால்

உள்ளிருந்து திமுதிமுவென கூட்டம்,

கிரி-ரோஸிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

<0>

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது