KathaiKathaiyaam

Sunday, February 28, 2010

உணவு மழைத் தீவு :19:

<>உணவு மழைத் தீவு<>
உணவுமழைத் தீவு உற்சாகத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தங்களுக்கு விடிவுகாலம் வெகு சீக்கிரமாக வந்ததால் எல்லோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
ஏற்கனவே உணவுமழைத் தீவு மக்கள் தங்களோடு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை தயாராக வைத்திருந்தனர். காலம் காலமாக வசித்து வந்த உணவுமழைத் தீவை விட்டுப் பிரிவதில் சிலருக்கு வருத்தம்.
பலருக்கு இனிமேல் புதிய தீவில் புது வாழ்க்கை வாழப்போகிறோம் என்ற மகிழ்ச்சி தென்பட்டது.
ஆனாலும்....
உள்ளூர புதிய தீவில் எப்படி? வாழப்போகிறோம் என்ற கவலை கொஞ்சம் இருக்கவே செய்தது. உணவுமழைத் தீவில் உழைக்காமல் பசியாற முடிந்தது. புதிய தீவில் உழைத்தால் மட்டுமே உண்ணமுடியும் என்பதை அனைவரும் அறிந்தே இருந்தனர்.
இயற்கையின் சீற்றத்தை தவிர்த்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இப்போது
உணவுமழைத் தீவை விட்டுப் பிரிகின்றனர்.
நல்ல உச்சி வெயில்.....
உணவுமழைத் தீவை கடைசியாக ஒருமுறை வலம் வந்து விட்டு தங்கள் குழந்தைகளோடு சிறிய படகுகளில் ஏறி கப்பலை நோக்கி கிளம்பினர்.



ஒருவழியாக சூரியக்கதிர்கள் மேற்கில் தலை சாய்க்கும் நேரம் உணவுமழைத் தீவு மக்கள் வான் தீவுக் கப்பலில் தங்கள் குழந்தைகளுடன் ஏறி இருந்தனர்.
பெரியவர்கள் தங்களிடமிருந்த 24 படகுகளில் அமர்ந்தனர்.
உணவுமழைத் தீவு நிர்வாகி ஒரு முறை உணவுமழைத் தீவை வலம் வந்து எவரேனும் தப்பித் தவறி தீவில் இருக்கிறார்களா என்று பார்த்தார். எவரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு கடைசிப் படகில் அவர் ஏறிக்கொள்ள படகுகள் அனைத்தும் கப்பலைப் பின் தொடர உணவுமழைத் தீவு யாருமற்ற அநாதை போல தனித்து நின்றது.
உணவுமழைத் தீவு மக்கள், இப்போது ஒரு புதிய உலகத்தை நோக்கி, பாதுகாப்பாக...நம்பிக்கையோடு "பறவை"த் தீவு நோக்கிய பயணம்.

இதுவரை உழைத்துப் பொருளீட்டத் தேவையின்றி வாழ்ந்தவர்கள் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற உறுதியோடு துவங்கிய பயணம் இது.  உழைப்பு அது எளிமையா? கடுமையா? எப்படி இருக்கும் தெரியாது, அவர்களுக்கு.

எளிமையோ, கடுமையோ உழைத்தால்தான் வாழமுடியும்;அதுதான் சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்று ஒருமனதாய் தீர்மானித்து கனவு வாழ்க்கையை துறந்து நிச வாழ்க்கையை நோக்கி இந்தப்பயணம்.

எங்கும் கரிய இருள்; அலைகள் மேலெழுவதும் கீழே விழுந்து புரண்டு செல்லும் ஓசை மட்டும் மாறிமாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. 



தாய் வாத்தின் பின்னால் அணிவகுத்துச்  செல்லும் குஞ்சுகள் போல பெருங்கப்பலுக்குப் பின்னே படகுகள் பின்தொடர்ந்து சென்ற காட்சி  அந்த இருட்டிலும் அழகாக இருந்தது.
அவ்வளவுதான் கதை முடிந்தது..என்றார் தாத்தா.
தாத்தா,"கதை இன்னும் முடியலையே...பறவைத் தீவுக்கு போன உணவு மழைத் தீவு மக்கள் என்ன ஆனாங்க? பறவைத் தீவுக்கு போய் சேர்ந்தாங்களா? என்றாள் அகிலா?

பறவைத் தீவுக்கு போனாங்களாவா? பறவைத் தீவுல போய், உழைத்தால் உலகமே வியக்கும் அளவு உயர முடியும்ன்னு பல சாதனைகள் செஞ்சு பல அரிய கண்டுபிடிப்பெல்லாம் செஞ்சாங்க..."என்றார் தாத்தா.

தத்தா...தாத்தா....பறவைத் தீவு கதையும் சொல்லுங்க தாத்தா? என்றாள் நிகிலா.

நாளைக்கு பறவைத் தீவுக் கதையை தாத்தா சொல்லுவாங்க...இல்லையா தாத்தா? என்றான் ரவி.

"சரி...சரி...எல்லாரும் சீக்கிரம் படுக்கைக்குப் போங்க...நாளைக்கு அந்தக் கதையைப்  பாக்கலாம் "என்றார் தாத்தா.

அகிலா,நிகிலா,ரவி மூவரும் நல்ல கதையைக் கேட்ட மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து படுக்கையறையை நோக்கி ஓடினர்.

பறவைத்தீவு கதை, உணவுமழைத் தீவு கதையைவிட நல்லா இருக்கும் போலிருக்கே!
என்று நிகிலா சொன்னதும், "ஆமா..ஆமா...தாத்தாதான் சொன்னாங்களே உலகமே
வியந்து பாக்குற மாதிரி பல சாதனை செஞ்சாங்கலாமே!"என்றாள் அகிலா!

"எப்ப விடியும் தாத்தாட்ட பறவைத்தீவு கதையைக் கேக்கலாம்ன்னு இருக்கு"என்றான் ரவி.  இப்படியே எவ்வளவு நேரம் பேசினார்களோ ஒருவழியாக உறங்கியும் போனார்கள்.  நல்ல உறக்கத்தில் இருந்த மூவரிடமிருந்தும் எதோ முனகல் சத்தம்
கேட்டது. 
அது பக்கத்து அறையில் உறங்கிய தாத்தாவுக்கும் கேட்டு மெல்ல எழுந்து
வந்து எட்டிப்பார்த்தார்.  உணவுமழைத்தீவு....பறவைத் தீவு...என்ற மந்திரச் சொற்கள்
தாத்தாவின் காதுகளில் விழ....மெல்ல புன்னகைத்துக்கொண்டே ஓசைப்படாமல் கதவைச் சாத்திக்கொண்டு தாத்தா தம் படுக்கைக்குக்த் திரும்பினார்.

என்ன தம்பி தங்கைகளே உங்களுக்கு இந்தக் கதை  பிடிச்சிருக்கா?  பறவைத் தீவு
கதை கேட்க நீங்களும் தயாராகியாச்சா?


                                                    நிறைவு

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது