KathaiKathaiyaam

Wednesday, December 13, 2006

<<>>உதவி...!<<>>

ஆண்டவன்னு பெயர் உள்ள ஒருத்தர். அவர் பெயருக்கு ஏத்தாப் போல எதுக்கெடுந்தாலும் " எல்லாம் ஆண்டவன் பாத்துப்பான்" என்றே சொல்வார்.

ஒரு நாள் ஆண்டவன் இருந்த ஊர்ல மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழை ஓய்வு ஒழிச்சலின்றி அடைமழையா ஊத்த ஆரம்பித்தது. அஞ்சாறு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக் காடாக மாறிவிட்டது. அரசாங்கம் தண்ணீரில் தத்தளித்த அந்த ஊர் மக்களைப் பாதுகாப்பா படகு மூலமாக காப்பாற்றி பக்கத்து ஊருக்கு கொண்டுபோய் தங்க வைத்தனர்.
நம்மாளு ஆண்டவன் ,"ஆண்டவா என்னைச் சோதிச்சது போதும்.


என்னைக் காப்பாத்தப்பான்னு," கொஞ்சம் சத்தமாவே வாய்விட்டுச் சொன்னார். எங்க மெல்லச் சொன்னா அந்தக் கடவுளுக்குக் கேக்காமப் போயிட்டா என்ன செய்யிறதுன்னு அவர் அப்படிச் சத்தமாச் சொன்னார். அந்த நேரம் பார்த்து, அந்தப்பக்கமா நீச்சலடிச்சு வந்தார் கோடிவீட்டுக் குப்புசாமி. நம்மாளு, ஆண்டவன் அனாதரவா, குளிருல நடுங்கிக்கிட்டு இருக்கிறதப் பார்த்தார். பாத்துட்டுச் சொன்னார்.

"ஆண்டவனே! என்னோட இடுப்பைக் கெட்டியா புடிச்சுக்குங்க. நான் உங்களை பாதுகாப்பான இடத்துல கொண்டுபோய் விட்டு விடுறேன்" னார்.

அதுக்கு நம்மாளு ஆண்டவனோ, " கேட்டதுக்கு ரெம்ப நன்றிங்க. என்னைய எல்லாம், அந்த ஆண்டவன் பாத்துப்பான். அவனே என்னை எப்படியும் வந்து காப்பாத்துவான்," னார். உதவிக்கு வந்த குப்புசாமி ஆண்டவனை ஒரு மாதிரியாப் பாத்துட்டு நீந்திப் போயிட்டார்.

கொஞ்ச நேரம் ஆச்சு. இடுப்பளவு இருந்த தண்ணீர் நெஞ்சுவரை வந்துருச்சு. நம்மாளு ஆண்டவன், "கடவுளே என்னைக் காப்பாத்துப்பா,"ன்னார்.

கொஞ்ச நேரத்துல மீட்பு வேலைகளிலிருந்த ஒரு படகு ஆண்டவன் பக்கமா வந்தது. அந்தப் அப்டகுல இருந்தவர் சொன்னார்.

"சீக்கிரமா படகுல ஏறிக்கங்க. தண்ணீர் மட்டம் ஏறிக்கிட்டே இருக்கு. உங்க கையை இப்படிக் கொடுங்க. நாங்க தூக்கீருவோம். சீக்கிரமா பாதுகாப்பான இடத்துக்குப் போயிருவோம்," ன்னார்.

"என்மேல அக்கறை எடுத்துக் கேட்டதுக்கு நன்றிங்க ஐயா. கடவுள் என்னைக் காப்பாத்துவார். நீங்க என்னைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். நீங்க மத்தவங்களைக் காப்பத்துற வேலையைப் பாருங்க. என்னைய.... எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்,"ன்னார் ஆண்டவன்.


நம்மாளுக்குப் புத்திமதி சொல்லி ஏத்தீட்டுப் போற அளவுக்கு படகுல வந்தவருக்கு நேரம் இல்லை. உதவிக்கு வந்த படகும் போய்விட்டது.

கொஞ்ச நேரத்துல கழுத்தளவுக்கு நீர்மட்டம் வந்துருச்சு. நம்மாளு ஆண்டவன், "கடவுளே இப்பவாவது வந்து நீ, என்னைக் காப்பாத்தக் கூடாதா?" ன்னு மூன்றாவது தடவையா தன் கோரிக்கையை வைத்தார்.

அப்ப, அந்தப் பக்கமா ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்துச்சு. ஹெலிகாப்டர்ல இருந்தவர் ஒலிபெருக்கி மூலமா, "இப்ப நாங்க ஒரு நூலேணி எறக்குறோம். அதப் பிடிச்சுக்கிட்டீங்கன்னா நீங்க பாதுகாப்பான எடத்துக்குப் போயிடலாம்,"ன்னு சொன்னார்.

"நீங்க உதவி பண்ண வந்ததுக்கு ரெம்ப நன்றிங்க! நீங்க மத்தவங்களைப் போய் காப்பாத்துங்க. என்னய எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்,"னார் நம்மாளு. அதுக்கு ஹெலிகாப்டர்ல இருந்தவர் சொன்னார். ஒங்க கடவுள் நம்பிக்கைய கொறையாச் சொல்லலை. அடிக்கிற காத்து மழையில அம்மிக்கல்லே காணாமப் போயிக்கிட்டு இருக்கு. இன்னும் நிலைமை ரெம்ப மோசமாகப் போகலாம். நாங்க மறுபடியும் இந்தப் பக்கம் வர வானம் ஒத்துழைக்குமான்னு தெரியாது. அதனால நீங்க இப்பவே வந்துருங்க," அப்டீன்னார்!

ஆனா இவரோ, பிடிவாதமா "என்னைய ஆண்டவன் காப்பாத்துவான். நீங்க போங்க,"ன்னு சொல்லீட்டார். ஹெலிகாப்டரும் அந்த இடத்தைக் காலி செஞ்சுட்டுப் பறந்துருச்சு.

ஹெலிகாப்டர் வந்து போன கொஞ்ச நேரத்துல வந்தது பெரு வெள்ளம்! அந்த வெள்ளம் நம்மாளு ஆண்டவனை, அந்த ஆண்டவன்கிட்டயே ஒரேயடியா கொண்டு போய் சேர்த்துருச்சு.
நம்மாளு ஆண்டவன் ரொம்பக் கோபமா கடவுளப் பார்த்துக் கேட்டார்.


"ஒரு தடவையில்ல ரெண்டு தடவையில்ல மூன்று தடவை என்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேட்டேன். ஆனா, இப்படி இதயமே இல்லாத கடவுளா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை,"ன்னார்.


கடவுள் அமைதியாச் சொன்னார்.

"நீ மூன்று தடவை என்னைச் சத்தம் போட்டுக் காப்பாத்தச் சொன்னாய். நானும் மூன்று தடவை வந்தேன். நீதான் என்னோட உதவியை ஏத்துக்கலை. நான் என்ன பண்ணுவது?" என்றார் கடவுள்.

"என்னது? மூணு தடவை வந்தீங்களா?" என்று ஆச்சரியப் பட்டார் நம்மாளு ஆண்டவன்!

"ஆமா நீ என்னை நினைச்சு குரல் கொடுத்த மூன்று தடவையும் நான் தான் உனக்கு உதவியை அனுப்பினேன். முதல் தடவை கோடி வீட்டுக் குப்புசாமியை அனுப்பினேன். ரெண்டாவது தடவை படகை அனுப்பி உன்னைக் காப்பாத்தச் சொன்னேன்.

மூணாவது தடவையா ஹெலிகாப்டரை அனுப்பி உன்னைக் காப்பாத்த நினைத்தேன். இவர்கள் மூலமாகத் தான் நான் வந்தேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் அனுப்பிய உதவியை வேண்டாம்ன்னு மறுத்துட்டே. நான் என்ன பண்ண முடியும்?

நம்மாளுக்கு அப்பத்தான் மண்டையில சுரீர்ன்னு பட்டது. ஆகா, கடவுளே வருவார்ன்னு ஏமாந்துட்டமேன்னு வருத்தப்பட்டார் நம்மாளு ஆண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்து என்ன பயன்?

கதை தரும் நீதி : இந்தக் கதையில் வரும் ஆண்டவன் போல நம்மில் பலர் இருக்கின்றோம். நமக்குத் தேவையானவற்றை கடவுள் யார் மூலமாகவாவது அனுப்பி உதவுகிறார். அந்த உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் முன்னேற்றமும் வெற்றியும் அடங்கியிருக்கின்றது.
விபரம் புரியாத வயதில் விடயங்களைக் கற்றுத் தந்து தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நிஜ தெய்வங்கள் பெற்றோர்கள்!புரியாத விடயங்களை விளக்கி வழிகாட்டும் கடவுளாக அனுபவம் மிக்க பெரியோர்கள்!! உலக அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுத் தருகின்ற ஆசிரியர்கள்!!!
இப்படி வாழ்க்கையில் கடவுள் நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் வடிவில் வந்து உதவிக் கொண்டேதானிருக்கிறார். இதை நன்கு புரிந்துகொண்டு முயற்சி என்ற தன்னம்பிக்கை விதைகளை உங்கள் மனங்களில் விதைத்து, சந்தர்ப்பம் என்ற நீர் ஊற்றி, கிடைக்கும் உதவி என்ற உரத்தை சரியாகப் பயன்படுத்தி உற்சாகப் பயிர் வளர்த்தால் நீங்களும் வானம் தொடலாம்தானே!
-ஆல்பர்ட், அமெரிக்கா.

3 Comments:

Blogger kanishka said...

முன்பெல்லாம் பெரியவர்கள் சொல்லும் கதைகள்
நீதிகளை எடுத்துரைப்பதாக இருக்கும்.
இந்த கதை ஏற்கனவே சொல்லப்பட்டதுதான் என்றாலும்
அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும்
'கதை தரும் நீதி' மிகவும் அருமை.

9:59 AM  
Blogger Albert Fernando said...

¸É¢‰¸¡ «Å÷¸ÙìÌ,
¾í¸Ç¢ý «ýÀ¡É ¸ÕòиÙìÌ
¿ýÈ¢¸û!
-¬øÀ÷ð.

9:03 AM  
Blogger Albert Fernando said...

கனிஷ்கா அவர்களுக்கு,
தங்களின் அன்பான கருத்துகளுக்கு
நன்றிகள்!
-ஆல்பர்ட்.

9:04 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது